மும்பை மாநகராட்சி மேயர் பதவிக்கு அடிபோடும் சிவசேனா? ஷிண்டேவின் ரிசார்ட் பாலிடிக்ஸ்.. பாஜகவுக்கு ஷாக்
மும்பை: மகாராஷ்டிராவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தலைநகர் மும்பையை பாஜக - சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே) கூட்டணி கைப்பற்றியுள்ளது. தனியாக எந்த ஒரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. பாஜகவே மேயர் பதவியை பிடிக்க காய் நகர்த்தி வரும் நிலையில், ஏக்நாத் ஷிண்டே திடீரென வெற்றி பெற்ற மாநகராட்சி உறுப்பினர்களை ஐந்து நட்சத்திர ஹோட்டலில் தங்க வைத்துள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டும் மும்பை உள்பட 29 மாநகராட்சிகள் உள்ளன. தற்போது இந்த மாநகராட்சிகளுக்கான தேர்தல் நடந்து முடிந்து முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் மும்பை மாநகராட்சியை கைப்பற்றப்போவது யார் என்ற எதிர்பார்ப்பானது நிலவி வந்தது.

மும்பை மாநகராட்சி தேர்தல்
ஏனெனில் நாட்டிலேயே அதிக மதிப்பிலான பட்ஜெட்டை தாக்கல் செய்யும் மாநகராட்சி என்றால் அது மும்பை தான். குறிப்பாக மும்பை மாநகராட்சியில் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டானது சில மாநிலங்களில் பட்ஜெட்டை விட அதிகமாகும். இதனால் இந்த மாநகராட்சியை கைப்பற்றப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது.
இந்த நிலையில் தான் மும்பை மாநகராட்சியை கைப்பற்ற எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. மொத்தம் உள்ள 227 வார்டுகளில் 114 வார்டுகளில் வெற்றி பெற்றால் தான் தனித்து அதிகாரத்தை கைப்பற்ற முடியும். ஆனால் பாஜக, சிவசேனா உள்பட எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.
89 இடங்களில் வெற்றி பெற்ற பாஜக
மும்பை மாநகராட்சி தேர்தலில் கூட்டாக போட்டியிட்ட பாஜக - சிவசேனா கூட்டணி 116 வார்டுகளில் வெற்றி பெற்றது. இதில் பாஜக 89 இடங்களிலும், ஏக்னாத் ஷிண்டேவின் சிவசேனா 29 இடங்களையும் கைப்பற்றின. பாஜக சிவசேனா கூட்டணியே மும்பை மாநகராட்சியை கைப்பற்றி இருக்கிறது.
எப்படியும் பாஜக சார்பில் தான் மேயர் பதவி ஏற்பார் என தகவல் வெளியாகி வருகிறது. அடுத்த 10 நாட்களில் பாஜக மேயர் யார் என அறிவிக்க போவதாக அம்மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கூறினார். இந்த நிலையில் தான் ஏக்னாத் ஷிண்டேவின் சிவசேனா கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மாநகராட்சி உறுப்பினர் 29 பேரை மும்பை பாந்திராவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்க வைத்துள்ளார்.
விலை கொடுத்து வாங்காமல் இருக்க
சிவசேனா தலைவரும், மகாராஷ்டிரா துணை முதல்வருமான ஏக்னாத் ஷிண்டே அறிவுறுத்தலின் பேரில் தொடர்ந்து 3 நாட்கள் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுடன் ஆலோசனை நடத்தி அடுத்த கட்ட நடவடிக்கையை எடுக்க இருப்பதாக தகவல் கூறப்படுகிறது.
இதேபோல் வெற்றி பெற்ற மாநகராட்சி உறுப்பினர்கள் யாரும் விலை போகாமல் இருப்பதற்காகவும், கட்சியின் அணிகள் ஒற்றுமையாக இருப்பதை உறுதி செய்யும் நோக்கத்திலும் இம்முடிவானது எடுக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications