4 கல்யாணம் செய்யலாம் முஸ்லிம் ஆண்கள்.. ஒன்றுக்கு மேற்பட்ட திருமணங்களை பதியலாம்.. மும்பை ஹைகோர்ட்
மும்பை: "ஒரே நேரத்தில் 4 மனைவியருடன் வாழ முஸ்லிம் தனிநபர் சட்டம் உரிமை தருவதால், முஸ்லிம் ஆண்கள் ஒன்றுக்கு மேற்பட்ட திருமணங்களை பதிவு செய்து கொள்ளலாம்" எனறு மும்பை ஹைகோர்ட் தீர்ப்பளித்திருக்கிறது. அத்துடன் 3வது திருமண அங்கீகாரம் கோரி தாக்கல் செய்த முஸ்லிம் நபரின் கோரிக்கை மீது முடிவு எடுக்கவும் பதிவுத்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம், தானேவை சேர்ந்த முஸ்லிம் இளைஞருக்கு 2 மனைவிகள் இருக்கிறார்கள். பிறகு அந்த நபர் 3வதாக இன்னொரு திருமணமும் செய்து கொண்டார்.. அந்த பெண் அல்ஜீரியாவைச் சேர்ந்தவர்..

திருமணம்: இதையடுத்து, தங்களின் 3வது திருமணத்தை பதிவு செய்யக்கோரி, தானே மாநகராட்சி அலுவலகத்துக்கு சென்றிருக்கிறார் முஸ்லிம் இளைஞர்.. ஆனால், மகாராஷ்டிரா திருமண பதிவு சட்டத்தின் கீழ், மாநகராட்சி அதிகாரிகள், அந்த இளைஞரின் 3வது திருமணத்தை பதிவு செய்ய மறுத்துவிட்டார்கள்.
மகாராஷ்டிர திருமண அமைப்புகளை ஒழுங்குபடுத்துதல் மற்றும் திருமணப் பதிவு சட்டத்தின்கீழ், ஒருமுறை மட்டுமே திருமணம் நடைபெறுவது வழக்கம் என்றும், பலமுறை நடத்தப்படுவது அல்ல என்றும் கூறி, அந்த இளைஞருக்கு திருமண பதிவு சான்றிதழை வழங்க மறுத்துவிட்டது.. அத்துடன் சில முக்கிய ஆவணங்களை, சம்பந்தப்பட்ட இளைஞர் சமா்ப்பிக்கவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துவிட்டனர்.
மும்பை கோர்ட்: எனவே இதை எதிர்த்து அந்த இளைஞர் மும்பை ஹைகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.. கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்த மனுவில், " எனக்கு 3வது திருமணம் என்பதால் அதை பதிவு செய்ய அதிகாரிகள் தொடா்ந்து மறுக்கிறார்கள்.. எனவே, இந்த திருமணத்தை அங்கீகரித்து திருமணப் பதிவு சான்றிதழை வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்" என்று கேட்டுக் கொண்டிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கோலபவல்லா மற்றும் சோமசேகர் சுதர்சன் அமர்வு பிறப்பித்திருக்கும் உத்தரவு இதுதான்: "இந்த விவகாரத்தில் திருமணத்தை பதிவு செய்ய அதிகாரிகள் மறுப்பு தெரிவித்துள்ளது அவா்களின் தவறான புரிதலை வெளிக்காட்டுகிறது.
தவறான புரிதல்: அதிகாரிகள் கூறியபடி மகாராஷ்டிர திருமண அமைப்புகள் ஒழுங்குபடுத்துதல் மற்றும் திருமண பதிவு சட்டத்தை ஏற்றுக்கொண்டால் அது இஸ்லாமிய தனிப்பட்ட சட்டங்களை மீறுவதுபோல் அமையும். இந்த சட்டத்தில் இஸ்லாமியா்களின் தனிப்பட்ட சட்டங்களுக்கு விலக்களிப்பது குறித்து எதுவும் கூறப்படவில்லை.
முஸ்லிம் தனிநபர் சட்டம் ஒரே சமயத்தில் 4 பெண்களை மணக்க அனுமதிக்கிறது. அப்படி இருக்கும்போது, முஸ்லிம் ஆணின் 3வது திருமணத்தை பதிவு செய்ய மறுப்பது முற்றிலும் தவறானது.. இன்னும் 2 வாரத்திற்குள் தேவையான ஆவணங்களை திருமண ஜோடிகள் மாநகராட்சியிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
திருமண சான்றிதழ்: அவை அனைத்தும் சமா்ப்பிக்கப்பட்ட பிறகு, அதன் அடிப்படையில் தம்பதியரிடம் தனிப்பட்ட முறையில் விசாரணை நடத்தி திருமண சான்றிதழ் வழங்குவதா வேண்டாமா என்பது குறித்து தானே மாநகராட்சி அதிகாரிகள் முடிவெடுக்க வேண்டும்.. ஆனால், அதுவரை அல்ஜீரியாவைச் சோ்ந்த அந்தப் பெண் மீது எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளக்கூடாது .. மாநகராட்சி அதிகாரிகள் விசாரணை நடத்தி, 10 நாட்களுக்குள் திருமணத்தை பதிவு செய்து சான்றிதழ் வழங்க வேண்டும்" என்றும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications