மகளிர் உதவித்தொகை திட்டத்தில் முறைகேடு.. 14 ஆயிரம் ஆண்களுக்கு மாதா மாதம் அக்கவுண்டில் போன பணம்.. மகாராஷ்டிரா அரசு ஷாக்
மும்பை: மகாராஷ்டிராவில் மகளிருக்கு மாதம் தோறும் வழங்கப்படும் ரூ.1,500 உதவித்தொகை திட்டத்தின் கீழ் சுமார் 14 ஆயிரம் ஆண்கள் முறைகேடாக உதவித்தொகை பெற்று வந்தது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர்களிடம் இருந்து இதுவரை செலுத்தப்பட்ட தொகையை திரும்ப பெற மகாராஷ்டிரா அரசு முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் மகளிருக்கு மாதம் தோறும் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. பெண்கள் மத்தியில் இந்த திட்டம் பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், பல்வேறு மாநிலங்களிலும் இதை பின்பற்றி மகளிருக்கு உதவித்தொகை அளிக்கும் திட்டத்தை அறிவித்து செயல்படுத்தி வருகின்றன.

மகாராஷ்டிரா மகளிர் உரிமைத்தொகை
தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை என்ற பெயரில் இந்த திட்டமானது செயல்படுத்தப்பட்டு வருகிறது. கர்நாடகாவில் "கிருஹ லட்சுமி யோஜனா" என்ற பெயரில் மகளிருக்கு நிதி உதவி அளிக்கும் திட்டமானது செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் மாதம் தோறும் ரூ. 2000 அளிக்கப்படுகிறது. இதேபோல் பாஜக ஆட்சி நடைபெற்று வரும் மகாராஷ்டிராவில் கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலுக்கு முன்பாக இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.
மகாராஷ்டிராவில் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்க இந்த திட்டம் பெரும் பங்காற்றியதாக கூறப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ், 21 வயது முதல் 65 வயது உடைய பெண்களுக்கு மாதம் ரூ.1,500 வழங்கப்படுகிறது. ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்திற்கும் கீழ் உள்ள குடும்பத்தினருக்கு இந்த தொகையானது அளிக்கப்பட்டு வருகிறது. "லட்கி பகின்" என்ற பெயரில் செயல்படுத்தப்பட்டு வரும் இந்த திட்டத்தின் கீழ் 14 ஆயிரம் ஆண்கள் மாதம் தோறும் ரூ.1,500 நிதி உதவியை முறைகேடாக பெற்று வந்தது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
14,298 ஆண்கள் மகளிர் உரிமைத்தொகை பெற்றுள்ளனர்
பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை மேற்கொண்ட தணிக்கை நடவடிக்கையில் இந்த முறைகேடு தெரியவந்துள்ளது. 14,298 ஆண்களுக்கு இதுவரை ரூ.21.44 கோடி ரூபாய் வரை இந்த தொகை அனுப்பப்பட்டுள்ளது. ஆன்லைன் பதிவு முறையில் முறைகேடாக பதிவு செய்து இந்த மோசடி அரங்கேறியுள்ளது. திட்டம் ஆரம்பித்து கிட்டத்தட்ட 10 மாதங்கள் கழித்தே இப்படி ஒரு முறைகேடு நடபெற்றது கண்டறியப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் ஆளும் பாஜக தேசிய ஜனநாயக கூட்டணி அரசுக்கு பெரும் தர்மசங்கடத்தை இந்த விவகாரம் ஏற்படுத்தியுள்ளது. இவ்விவகாரம் குறித்து துணை முதல்வர் அஜித் பவார் கூறுகையில், "ஏழை மகளிருக்கு உதவும் வகையில் இந்த திட்டமானது செயல்படுத்தப்பட்டது. இதில் ஆண்கள் பயனாளிகளாக இருப்பதில் எந்த அர்த்தமும் இல்லை.
ரூ. 1,640 கோடி இழப்பு
எனவே அவர்களுக்கு அளித்த பணத்தை திரும்ப பெருவோம். முறைகேடாக பணம் பெற்றவர்கள் ஒத்துழைப்பு அளிக்காவிட்டால் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார். இது மட்டும் இன்றி இந்த லட்கி பகின் திட்டத்தின் கீழ் மேலும் பல்வேறு முறைகேடுகளும் நடைபெற்று இருப்பது அறிக்கையில் தெரியவந்துள்ளது. தகுதியற்றவர்கள் இந்த திட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளதால் முதல் ஆண்டில் மட்டும் ரூ.1,640 கோடி இழப்பைச் சந்தித்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
ஒரு குடும்பத்தில் இரண்டு பெண்கள் மட்டுமே பயன்பெற முடியும் என்ற விதி உள்ள நிலையில், பலரும் மூன்றாவதாக ஒருவரையும் சேர்த்து இருப்பதாக உள்ளது. இதன் மூலம் சுமார் 7.97 லட்சம் மகளிர் கூடுதலாக திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதனால் மட்டும், அரசு கருவூலத்திற்கு ரூ.1,196 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications