அஜித் பவார் உடலை தகனம் செஞ்சு ஒரு நாள் கூட ஆகல! ஆரம்பித்த பவர் பாலிடிக்ஸ்.. மகாராஷ்டிராவில் பரபரப்பு
மும்பை: மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் இரு தினங்களுக்கு முன்பு எதிர்பாராத விதமாக உயிரிழந்தார். அஜித் பவார் உடல் நேற்று தான் தகனம் செய்யப்பட்ட நிலையில், இன்றே அங்கு பவர் பாலிடிக்ஸ் ஆரம்பித்துவிட்டது. மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் இல்லத்திற்குச் சென்றுள்ள என்சிபி தலைவர்கள் முக்கிய டிமாண்ட்களை வைத்துள்ளனர்.
மகாராஷ்டிரத் துணை முதல்வரா இருக்கும் அஜித் பவார் சென்ற விமானம் பாராமதியில் புதன்கிழமை காலை எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கியது. இதில் அஜித் பவார் மட்டுமின்றி, அதில் சென்ற அனைவரும் உயிரிழந்தனர். தொடர்ந்து அஜித் பவாரின் உடல் நேற்றைய தினம் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

பவர் பாலிடிக்ஸ்
இதற்கிடையே அவரது உடல் தகனம் செய்யப்பட்டு ஒரு நாள் கூட ஆகாத நிலையில், அங்கு பவர் பாலிடிக்ஸ் ஆரம்பித்துள்ளது. மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் இல்லத்தில் என்சிபி கட்சியின் முக்கிய தலைவர்கள் கூடியுள்ளனர். துணை முதல்வர் அஜித் பவார் வகித்திருந்த முக்கிய இலாகாக்களைத் தங்களுக்கே வேண்டும் என அவர்கள் ஒவ்வொருவரும் பட்னாவிஸிடம் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். மூத்த தலைவர்களான பிரபுல் படேல், சுனில் தட்கரே மற்றும் சகன் புஜ்பால் ஆகியோர் இதற்காக பட்னாவிஸின் 'வர்ஷா' பங்களாவிற்குச் சென்றுள்ளனர்.
சந்திப்பு
அஜித் பவார் இல்லை என்றாலும் முக்கிய அமைச்சரவை பதவிகள் தங்கள் கட்சி வசமே இருக்க வேண்டும் என்பதற்காகவே அவர்கள் பட்னாவிஸை நேரில் சந்தித்து வலியுறுத்தியுள்ளனர். அஜித் பவார் முன்பு கையாண்ட முக்கிய துறைகளான நிதி, மாநில கலால் மற்றும் விளையாட்டுத் துறைகள் உள்ளிட்ட இலாகாக்கள் என்சிபி கோட்டாவிலேயே நீடிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். இது தொடர்பாக என்சிபி சார்பில் முறையாகக் கடிதம் சமர்ப்பிக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தனர்..
இந்தச் சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பிரபுல் படேல், "எந்தவொரு முடிவும் மக்களின் உணர்வுகளைக் கருத்தில் கொண்டு எடுக்கப்படும். நாங்கள் மகாயுதி கூட்டணியில் ஒரு அங்கம். எனவே, அஜித் பவார் வகித்த பதவியை விரைவில் நிரப்பச் சரியான முடிவை எடுக்க வேண்டும். அதே சமயம், எந்த முடிவு எடுப்பதற்கு முன்னரும் மக்களின் உணர்வுகளைக் கருத்தில் கொள்ள வேண்டும் என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். அவரது குடும்பத்தினர் துயரத்திலிருந்து மீளச் சிறிது காலம் அவர்களுக்கு அவகாசம் கொடுக்க வேண்டும். விரைவில் சுனேத்ரா பவார் மற்றும் அவரது குடும்பத்தினருடன் கட்சியின் எதிர்காலப் போக்கு குறித்து நாங்கள் விவாதிப்போம்" என்றார்.
பல கேள்விகள்
அஜித் பவாரின் திடீர் மறைவு, தேசியவாத காங்கிரஸ் கட்சிக்குள் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. வலிமையான தலைவர் இல்லாத நிலையில் அஜித் பவார் கட்சி என்னவாகும் என்பதில் கேள்வி நிலவுகிறது. மீண்டும் என்சிபி கட்சி சரத் பவார் உடன் இணையலாம் என்றும் கூடச் சொல்லப்படுகிறது.. இப்படி அஜிக் பவாரின் திடீர் மறைவு கட்சியின் எதிர்காலத் தலைமை குறித்த நிச்சயமற்ற தன்மையையும் ஏற்படுத்தி, ஒரு பெரிய வெற்றிடத்தை உருவாக்கியுள்ளது.
இந்தச் சூழலில் தான் வரும் ஞாயிற்றுக்கிழமை தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் நடக்கிறது. இதில் என்சிபி சட்டமன்றக் கட்சியின் தலைவராக அஜித் பவாரின் மனைவியும், ராஜ்யசபா எம்.பி.யுமான சுனேத்ரா பவார் தேர்ந்தெடுக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக நாளைய தினம் இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் சொல்லப்படுகிறது.
அடுத்து என்ன நடக்கும்!
இதற்கு நடுவே பிளவுபட்டு இருக்கும் கட்சியை மீண்டும் ஒருங்கிணைக்க வேண்டும் என்ற குரல்களும் கேட்க தொடங்கியுள்ளன. தேசியவாத காங்கிரஸ் ஒன்றிணைப்பது அஜித் பவாரின் கடைசி ஆசை என்றும், அது மதிக்கப்பட வேண்டும் என்றும் சரத் பவார் தரப்பு தலைவரான அனில் தேஷ்முக் தெரிவித்தார். இப்படி ஒவ்வொரு தலைவரும் ஒவ்வொரு மாதிரியான கருத்துகளைச் சொல்லி வருவதால் மகாராஷ்டிர அரசியலில் தெளிவற்ற சூழலே நிலவுகிறது.












Click it and Unblock the Notifications