தாயின் இடுப்பு எலும்பை உடைத்து, அப்பா மண்டையை பிளந்த புனே மகன்கள்! பூர்வீக நிலம் சொத்துக்காக? வீடியோ
மும்பை: மகாராஷ்டிர மாநிலம் புனே மாவட்டத்தில் சொந்த நிலத்தை விற்பனை செய்த ஆத்திரத்தில், பெற்ற தாயையும் தந்தையையும் இரண்டு மகன்கள் நடுரோட்டில் உருட்டுக் கட்டைகளால் தாக்கிய கோரச் சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் வெளியாகி, காண்போரை பதற செய்து வருகிறது. என்ன நடந்தது?
புனே மாவட்டம் இந்தூர் அருகே உள்ளது மால்வாடி என்ற பகுதி.. இங்கு வசித்து வருகிறார் துகாராம் கிசான் என்ற விவசாயி.. இவருக்கு 65 வயதாகிறது.. மனைவி பெயர் அஞ்சனா.. ஆனால் உடல்நலக் குறைவால் மிகவும் அவதிப்பட்டு வருகிறார்.

இவர்களுக்கு சஞ்சய் மற்றும் ராஜேந்திர ரௌத் என்ற 2 மகன்கள் உள்ளனர். அஞ்சனாவுக்கு சொந்தமான சில சென்ட் நிலம் மற்றும் ஏக்கர் கணக்கிலான பூர்வீக மனையை விற்க துகாராம் முடிவு செய்திருக்கிறார்.
புனே தம்பதி
பெற்ற தாயின் சொத்தை விற்றால், கிரயம் செய்து கொடுக்கப்படும் அந்த சொத்தில், தங்களுக்கு பங்கு இருக்காதே என்று என்று 2 மகன்களும் நினைத்துள்ளனர். இதனால், அப்பா நிலத்தை விற்றது மகன்களுக்கு பிடிக்கவில்லை. நிலத்தை விற்ற பணத்தையோ அல்லது சொத்தையோ தங்களுக்கு கொடுக்க வேண்டும் என்று தகராறு செய்துள்ளனர்.
சம்பவத்தன்று மாலை, துகாராமும், அஞ்சனாவும் தெருவில் நடந்து சென்றுகொண்டிருந்தனர். அப்போது அங்கு காரில் வந்த சஞ்சய் மற்றும் ராஜேந்திர ரௌத் ஆகிய 2 மகன்களும், பெற்றோரை வழிமறித்து நிறுத்தியுள்ளனர்.. நிலம் விற்ற காசு எங்கே என்று கேட்டு வாக்குவாதம் செய்துள்ளனர்.. "அம்மாவுக்கு சிகிச்சை தர வேண்டியுள்ளது, அதனால் நிலத்தை விற்க வேண்டி வந்தது" என்று துகாராம் சொல்லியும், மகன்கள் அதை ஏற்கவில்லை.
பூர்வீக சொத்து விற்பனை
ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றியது.. ஆத்திரமடைந்த பிள்ளைகள் 2 பேரும், அம்மா, அப்பாவை கெட்ட வார்த்தைகளால் திட்ட துவங்கினார்கள்.. சொத்து பரிவர்த்தனையை உடனடியாக ரத்து செய்யாவிட்டால், 2 பேரையுமே கொலை செய்து விடுவதாகவும் மிரட்டினார்கள்.. அதுமட்டுமல்ல, கையோடு கொண்டு வந்திருந்த மரக்கட்டைகளால் அப்பாவை கண்மூடித்தனமாக தாக்கினார்கள்..
இதில் வலி பொறுக்க முடியாமல் துகாராம் கதறி அலறினார்.. துகாராமின் முதுகு, முகம், தொடைகள் மற்றும் இடது தோள்பட்டைகளில் அடித்து நொறுக்கினார்கள்.. இதனை தடுக்க முயன்ற அம்மாவையும் மனசாட்சியே இல்லாமல் தாக்கினார்கள்.. இதனால் அம்மாவின் கை உடைந்துவிட்டது.. இடுப்புப் பகுதியிலும் எலும்பு உடையும் அளவுக்குத் தாக்கியிருக்கிறார்கள்.
தாயின் இடுப்பு எலும்பை உடைத்து
நடுரோட்டில் முதிய தம்பதியினர் ரத்த வெள்ளத்தில் அழுதுகொண்டே விழுந்தனர்.. இவர்களின் சத்தம் கேட்டு அந்த வழியாக சென்றவர்கள் பதறி ஓடிவந்தனர்.. சிலர் இந்த வெறிச்செயலை தங்களது செல்போன்களில் வீடியோவாகப் பதிவு செய்து சோஷியல் மீடியாவிலும் பதிவிட்டனர்.. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது..
பொதுமக்கள் இதுகுறித்து தந்த தகவலின் பேரில் காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, முதிய தம்பதியை மீட்டு இந்தூர் துணை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
பாதிக்கப்பட்ட துகாராம் அளித்த புகாரின் அடிப்படையில், பெற்றோர் என்றும் பாராமல் கட்டையால் அடித்து உதைத்த சஞ்சய் மற்றும் ராஜேந்திர ரௌத் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாய், தந்தை என்றுகூட பாராமல், வெறும் நிலத்துக்காகவும் பணத்துக்காகவும் நடுரோட்டில் வைத்து உருட்டுக் கட்டைகளால் அடித்து விரட்டிய இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களை பதற வைத்து வருகிறது.. பெற்ற தாயும் தந்தையும் கடவுளுக்குச் சமம் என்பார்கள்; ஆனால் இவர்களோ அந்த வார்த்தைக்கே களங்கம் கற்பித்துவிட்டார்கள்..!!


Click it and Unblock the Notifications
