1,200 கோடி டாலர் தங்கத்தை விற்ற ரிசர்வ் வங்கி? அப்படியெல்லாம் இல்லவே இல்லை! விளக்கம் சொன்ன ஆளுநர்!

Subscribe to Oneindia Tamil

மும்பை: இந்திய ரிசர்வ் வங்கி தனது தங்க இருப்பில் இருந்து சுமார் 1,200 கோடி டாலர் மதிப்பிலான தங்கத்தை விற்றுவிட்டதாக அண்மையில் வெளியான தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன. குறிப்பாக, அந்நியச் செலாவணி கையிருப்பில் ஏற்பட்ட மாற்றங்களை அடிப்படையாகக் கொண்டு சில பொருளாதார ஆய்வுகள் வெளியான நிலையில், ரிசர்வ் வங்கி தங்கத்தை விற்று டாலர் சொத்துகளை அதிகரித்திருக்கலாம் என்ற ஊகங்கள் பரவின. ஆனால் இந்த தகவல்களை ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

மே 29-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்திற்கான ரிசர்வ் வங்கியின் புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவின் தங்க கையிருப்பின் மதிப்பு 2.19 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு குறைந்துள்ளது. இதே காலகட்டத்தில் அந்நிய நாணய சொத்துக்கள் 3.12 பில்லியன் டாலர் அதிகரித்து 546.15 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளன.

RBI Gold Sanjay Malhotra

இந்த இரண்டு தரவுகளும் வெளியானதைத் தொடர்ந்து, ரிசர்வ் வங்கி தனது தங்க இருப்பின் ஒரு பகுதியை விற்று அந்நியச் செலாவணி சொத்துகளை அதிகரித்திருக்கலாம் என்ற சந்தேகம் சில பொருளாதார வட்டாரங்களில் எழுந்தது.

குறிப்பாக, ஒரு சர்வதேச பொருளாதார ஆய்வு நிறுவனம் வெளியிட்ட மதிப்பீட்டில், மே 22-ஆம் தேதியுடன் முடிவடைந்த இரண்டு வாரங்களில் இந்திய ரிசர்வ் வங்கி சுமார் 1,200 கோடி டாலர் மதிப்பிலான தங்கத்தை விற்றிருக்கலாம் என்று கூறப்பட்டிருந்தது. இந்த தகவல் வெளியாகியதையடுத்து, பணவியல் கொள்கை அறிவிப்புக்குப் பிறகு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ராவிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர், " ரிசர்வ் வங்கி எந்த தங்கத்தையும் விற்கவில்லை. மாறாக, எங்களது தங்க இருப்பு மிகச் சிறிய அளவில் அதிகரித்துள்ளது" என்று தெளிவாக தெரிவித்தார். ரிசர்வ் வங்கியின் விளக்கப்படி, தங்க இருப்பின் மதிப்பு குறைந்திருப்பது தங்கம் விற்கப்பட்டதால் அல்ல. உலக சந்தையில் தங்கத்தின் விலை மாற்றம் மற்றும் அமெரிக்க டாலருக்கு எதிரான நாணய மதிப்பு மாற்றங்களால் இந்த கணக்கீட்டு மதிப்பில் ஏற்ற இறக்கங்கள் ஏற்படுவது இயல்பான ஒன்றாகும்.

ரிசர்வ் வங்கியின் தங்க இருப்புகள் ஒவ்வொரு வாரமும் சர்வதேச சந்தை விலைகளின் அடிப்படையில் மறுமதிப்பீடு செய்யப்படுகின்றன. இதனால், தங்கத்தின் அளவு மாறாமல் இருந்தாலும் அதன் மதிப்பு மட்டும் உயரவோ குறையவோ வாய்ப்புள்ளது. தற்போது ஏற்பட்டிருப்பதும் அதுபோன்ற மதிப்பீட்டு மாற்றம்தான் என்று அதிகாரிகள் விளக்கியுள்ளனர். மேலும், இந்திய அரசின் உண்மைத் தகவல் சரிபார்ப்பு பிரிவும் இந்த விவகாரத்தில் விளக்கம் அளித்துள்ளது. ரிசர்வ் வங்கி தங்கத்தை விற்றதாக வெளியான தகவல்கள் தவறானவை என்றும், அதிகாரப்பூர்வ தரவுகளில் அத்தகைய எந்த பதிவும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உண்மையில், இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பில் தங்கத்தின் பங்கு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 2025 செப்டம்பர் மாத இறுதியில் மொத்த அந்நியச் செலாவணி கையிருப்பில் தங்கத்தின் பங்கு 13.92 சதவீதமாக இருந்தது. அது 2026 மார்ச் மாத இறுதியில் 16.70 சதவீதமாக உயர்ந்தது. பின்னர் 2026 மே 22-ஆம் தேதியளவில் அது 16.85 சதவீதமாக மேலும் அதிகரித்துள்ளது. ரிசர்வ் வங்கியின் சமீபத்திய அறிக்கையின்படி, 2026 மார்ச் மாத இறுதியில் இந்தியாவிடம் 880.52 மெட்ரிக் டன் தங்கம் இருந்தது. இந்த அளவு மாற்றமின்றி தொடர்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல், இந்தியாவின் தங்க கையிருப்பில் பெரும்பகுதி தற்போது நாட்டுக்குள்ளேயே பாதுகாக்கப்படுகிறது. ஆறு மாதங்களுக்கு முன்பு 66 சதவீதமாக இருந்த உள்நாட்டு சேமிப்பு தற்போது 77 சதவீதமாக உயர்ந்துள்ளதாக ரிசர்வ் வங்கி குறிப்பிட்டுள்ளது.

உலகளவில் பல நாடுகளின் மத்திய வங்கிகள், புவிசார் அரசியல் பதற்றங்கள், பணவீக்கம் மற்றும் நாணய சந்தை நிலையற்ற தன்மை போன்ற அபாயங்களை எதிர்கொள்ள தங்க இருப்புகளை அதிகரித்து வருகின்றன. இந்தியாவும் அதே பாதையை பின்பற்றி வருகிறது.

இதனால், தங்க கையிருப்பின் மதிப்பு குறைந்திருந்தாலும், இந்தியா தனது தங்க இருப்பை விற்றுவிட்டதாக வெளியான தகவல்களுக்கு எந்த ஆதாரமும் இல்லை என்பது தற்போது ரிசர்வ் வங்கியின் விளக்கத்தின் மூலம் தெளிவாகியுள்ளது. தங்கம், இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பில் முக்கிய தூணாக தொடர்ந்து இருந்து வருகிறது என்பதையும் ரிசர்வ் வங்கி மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+