அறை எண் 21.. விடுதியில் டாடாவுடன் தங்கிப் படித்த நண்பர்..! மறக்க முடியாத நினைவுகள்
மும்பை: பாலிவுட் நடிகர் ஒருவர் ரத்தன் டாடாவுடன் கல்லூரியில் ஒரே விடுதியில் தங்கி படித்த பழைய நினைவுகளைப் பேட்டி ஒன்றில் பேசி இருந்த நிலையில், அந்தக் காணொளி இப்போது சமூக ஊடகங்களில் அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது.
இந்திய தொழிலதிபரும் டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவருமான ரத்தன் டாடா, அக்டோபர் 9 அன்று காலமானார். இவரது மறைவு பலரையும் சோகத்தில் ஆழ்ந்திருக்கிறது. வேறு எந்தப் பணக்காரருக்கும் கிடைக்காத அளவு மக்கள் அவரை நினைத்து வேதனையில் வாடி வருகின்றனர். அவர் பணக்காரராக மட்டும் இல்லாமல் மனிதநேய மிக்கவராக வாழ்ந்து மறைந்துள்ளார். பெரும் பங்கு பணத்தை அறக்கட்டளை மூலம் மக்கள் சேவைக்காகப் பயன்படுத்தி உள்ளார். அவரது மறைவை ஒட்டி அவரைப் பற்றிய காதல் கதை, எளிமையாக வாழ்ந்தது எனப் பல செய்திகள் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில் பாலிவுட் நடிகர் ஒருவர் ரத்தன் டாடாவின் அறை நண்பராக இருந்ததும் அந்த நட்பு பற்றி பேசியதும் இப்போது சமூக ஊடகங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. அந்த நடிகர் யார்? அமிதாப்பச்சனா? இல்லை ராஜேஷ் கன்னாவா? அல்லது திலீப் குமாரா என்று உங்களில் பலர் உடனே யோசிக்கக் கூடும். இவர்கள் யாருமே இல்லை.
அப்படி என்றால் ரத்தன் டாடாவுடன் விடுதி அறையைப் பகிர்ந்தவர் யார்? அவருடன் இளைமை காலத்தில் ஒன்றாகச் சுற்றுலா சென்றவர் யார்? மறைந்த டாடாவுடன் இளைமையில் ஒன்றாகக் கல்வி கற்ற இவர் தொலைக்காட்சியில் வெளியான மகாபாரதத் தொடரில் சகுனியாக நடித்து அதன்மூலம் பரவலான கவனத்தைப் பெற்றவர். ஆனால், அவரும் இப்போது உயிருடன் இல்லை. அவர் வேறு யாரும் அல்ல, மறைந்த நடிகர் குஃபி பெயின்டல்தான். 1960களின் பிற்பகுதியில் அவர் ஜாம்ஷெட்பூரில் பொறியியல் கல்லூரியில் படித்த போதுதான் இவர் ரத்தன் டாடாவுடன் ஒரே விடுதியில் தங்கிப் படித்தார்.
அந்த நினைவுகளை அவர் கடந்த 2023 ஜூன் மாதம் மறைவதற்கு முன்பு அளித்த பேட்டியில் நினைவுகூர்ந்திருந்தார். அவர் அப்போது, "அப்போது, ரத்தன் டாடா அமெரிக்காவில் பயிற்சி முடித்து இந்தியா திரும்பியிருந்தார். அவர் என்னைக் காட்டிலும் சில வயது மூத்தவர். எங்கள் விடுதியில் உள்ள அறை எண் 21இல் அவர் தங்கியிருந்தார். அப்போதே மிகப் பண்பான மனிதர். பெரிய மரியாதை உள்ள குடும்பத்திலிருந்து வந்தவர் அவர். இப்போது டாடா குழும நிறுவனங்களின் தலைவராக இருக்கிறார். நான் ஒரு இந்தியனாகவும் அவரது நண்பனாகவும் அவரைப் பற்றி பெருமை கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து குஃபி தனது பேட்டியில் கூறுகையில், "அவர் எங்களை அவரது காரில் இன்பச் சுற்றுலா கூட்டிக்கொண்டு போவார். நானும் அவரும் நெருங்கிய நட்புக் கொண்டிருந்தோம். அந்தக் காலத்தில் அவர் தன் அறைக்கு அழைத்து விவாதம் செய்யும் ஒரே மாணவர் நான்தான். 1960களின் முற்பகுதியில், அவர் ஒரு அழகான சில்வர் கலர் பிளைமவுத் வைத்திருந்தார். அப்போது அவர் காரில் ஒரு ரேடியோ இருந்தது. காரில் அந்தக் காலத்தில் ரேடியோ இருப்பது அதிசயம். நாங்கள் அதில் ஒலிபரப்பாகும் ஆங்கிலம், ஹிந்தி பாடல்களைக் கேட்போம். , சில சமயங்களில் பினாகா கீத்மாலா என்ற பாடல் நிகழ்ச்சியைக் கேட்போம்.

நான் பாந்த்ராவில் இருக்கும் லிங்க்கிங் சாலையைக் கடக்கக் காத்திருந்தபோது ஒரு பெரிய கார் என் அருகில் நின்றது. பின் இருக்கையில் இரண்டு பெரிய நாய்கள் இருந்ததை உடனே நான் கவனித்தேன். என்னைப் பார்த்த ரத்தன் டாடா, உடன் காரில் பயணிக்கத் தயவு செய்து வாருங்கள் என்று என்னை அழைத்தார். ஆனால் நான், "இல்லை, ரத்தன், மிக்க நன்றி. நான் சாலையைக் கடக்கிறேன். என் கார் அந்தப் பக்கம் நிறுத்தி வைத்துள்ளேன்' என்று பதிலளித்தேன். இது மின்னல் வேகத்தில் நடந்தேறியது. ஆனால், அது எனக்கு ஒரு மறக்க முடியாத நினைவை ஏற்படுத்திவிட்டது" என்று நெகிழ்ச்சியாகக் கூறியுள்ளார் குஃபி.
ரத்தன் டாரா 86வது வயதில் மும்பையிலுள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் புதன்கிழமை இரவு காலமானார். தேசத்தின் மீதான அவரது தாக்கம் வணிகத்திற்கு அப்பாற்பட்டது. அவர் தொழிலதிபர் மட்டுமல்ல. நல்ல காரியங்களுக்கு நன்கொடைகளை அள்ளி வழங்கிய வள்ளல். பல்வேறு சமூக சேவைகளுக்கு விதைப் போட்ட சமூகசேவகர். ஆகவேதான், அவரை இந்திய மக்கள் மிகப் பெரிய அளவில் வைத்து மரியாதை அளித்து வந்தனர்.












Click it and Unblock the Notifications