ஓடும் ரயிலில் 4 பேரை கொன்ற ஆர்பிஎஃப் வீரர்! நல்ல மனநிலையில்தான் இருந்தார்! போலீஸ் விளக்கம்
மும்பை: கடந்த ஜூலை மாதம், ஓடும் ரயிலில் பாதுகாப்பு பணியில் இருந்த ஆர்பிஎஃப் வீரர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் ஆர்பிஎஃப் உயர் அதிகாரி ஒருவரும் 3 இஸ்லாமியர்களும் உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட ஆர்பிஎஃப் வீரர் சம்பவம் நடந்தபோது சரியான மனநிலையில்தான் இருந்திருக்கிறார் என ரயில்வே போலீஸ் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய குற்றப்பத்திரிகையில் தெரிவித்திருக்கிறது.
அன்று ஜூலை 31, ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இருந்து மும்பை நோக்கி 'ஜெய்ப்பூர்-மும்பை சென்ட்ரல் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ்' வந்துக்கொண்டிருந்தது. ரயில் மும்பையின் பால்கர் ரயில் நிலையத்தை கடந்து சென்றுக்கொண்டிருந்தபோது, ரயிலுக்குள் திடீரென துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டிருக்கிறது. சத்தம் கேட்ட பயணிகள் அலறி ஓட ரயில் முழுவதும் ஒரே களேபரமாகியுள்ளது. இந்த சம்பவம் குறித்து விசாரணையில் இறங்கிய ரயில்வே போலீஸ், துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட சேத்தன்சிங் சவுத்ரியை கைது செய்தது.

துப்பாக்கி சூட்டில் மொத்தம் 4 உயிர்கள் பறிபோயுள்ளது. ஒன்று, துப்பாக்கிசூட்டில் ஈடுபட்ட ஆர்பிஎஃப் வீரர் சவுத்ரியின் உயர் அதிகாரி டிக்கா ராம் மீனா. மற்ற மூவரும் இஸ்லாமிய பயணிகள். ஆகவே வழக்கின் திசை வேறு கோணத்திற்கு மாறியது. அதாவது இஸ்லாமிய எதிர்ப்பால் இந்த கொலை நடந்திருக்கிறதா? என்கிற கேள்விகள் எழுந்தன. ஆனால் சிலர் சவுத்ரிக்கு மனநல பிரச்னை இருந்தது என்று கூற தொடங்கினர். இதற்கு வலு சேர்க்கும் விதமாக சவுத்ரியின் குடும்பத்தினரும் சில தகவல்களை செய்தி ஊடகங்களுக்கு கூறியிருந்தனர்.
அதாவது சவுத்ரி சில வருடங்களுக்கு முன்னர் வீட்டு வாசலில் தவறி விழுந்துவிட்டதாகவும், இதனால் நீண்ட காலமாக தீராத தலைவலியால் அவதிபட்டு வந்ததாகவும் தெரிவித்திருந்தனர். விடுமுறைக்கு வீட்டுக்கு வரும் சவுத்ரி யாருடனும் பேசாமல் தூங்கிக்கொண்டே இருப்பார் என்றும் கூறியிருந்தனர். இதனையடுத்து சவுத்ரியின் மனநிலை குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்தன. இந்த கேள்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, ரயில்வே போலீஸ் சில தகவல்களை மும்பை புறநகரில் உள்ள கீழமை நீதிமன்றத்தில் தற்போது குற்றப்பத்திரிக்கையாக தாக்கல் செய்திருக்கிறது.
அதில், துப்பாக்கிசூட்டில் ஈடுபட்டபோது சவுத்ரியின் மனநிலை இயல்பானதாகவே இருந்ததாகவும், தான் என்ன செய்கிறோம் என்று தெரிந்தே செய்ததாகவும் கூறியுள்ளது. இதனை உறுதிப்படுத்த 150க்கும் அதிகமான சாட்சியங்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இது தவிர ரயில் பெட்டியில் இருந்த சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்ததாகவும் ரயில்வே போலீஸ் கூறியுள்ளது. மேலும், விசாரணைக்கு சவுத்ரியை நேரில் ஆஜர்படுத்துவது ஆபத்தானது, வீடியோ கான்பிரன்சில் ஆஜர் படுத்தலாம் என்றும் கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications