சொத்தை அபகரிக்க பாஜக நிர்வாகி சோனாலி போகட்டுக்கு வலுக்கட்டாயமாக போதை மருந்து.. சிபிஐ பகீர் தகவல்
மும்பை: பாஜக நிர்வாகியும் டிக்டாக் பிரபலமுமான சோனாலி போகட் சொத்துக்காக கொலை செய்யப்பட்டார் என சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
பாஜக நிர்வாகி சோனாலி போகட், இவர் கடந்த ஆகஸ்ட் மாதம் 22 ஆம் தேதி கோவாவில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார். ஹரியானாவை சேர்ந்த இவர் டிக்டாக் பிரபலம். இவர் இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்றிருந்தார்.
இவரது மரண வழக்கை போலீஸார் கொலை வழக்காக பதிவு செய்து சோனாலியின் உதவியாளர்கள் உள்பட 5 பேரை கைது செய்தனர். சோனாலியின் உதவியாளர்கள் அவருக்கு வலுக்கட்டாயமாக போதை மருந்தை அளித்த சிசிடிவி வீடியோ காட்சிகளை கோவா போலீஸார் கைப்பற்றி விசாரணை நடத்தி வந்தனர்.

சோனாலி
இந்த நிலையில் அந்த வீடியோவில் சோனாலி நடக்க முடியாத நிலைக்கு தத்தி தடுமாறும் காட்சிகளும் அவரை அவரது உதவியாளர்கள் கைத்தாங்கலாக பிடித்து அழைத்து செல்வதும் வெளியாகியிருந்தது. இந்த நிலையில் சோனாலி போகட்டின் மரண வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டதை அடுத்து விசாரணை நடத்தப்பட்டு வந்தது.

சோனாலி போகட்
இந்த நிலையில் சோனாலி போகட்டின் இறப்பில் 1000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை கோவாவில் உள்ள குற்றவியல் நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்தது. அப்போது அதில் சோனாலி இறப்பதற்கு முன்னர் அவருக்கு கட்டாயப்படுத்தி போதை மருந்துகள் கொடுக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அஞ்சுனா கடற்கரை
சிசிடிவி காட்சிகளில் அஞ்சுனா கடற்கரையில் போகட்டின் தனிச் செயலாளர் சுதீர் சங்கவான் அவரது வாயில் போதை மருந்தை கட்டாயப்படுத்தி ஊற்றுவது போன்று உள்ளது. இதை குடித்ததும் சோனாலியால் நடக்கக் கூட முடியவில்லை. அவர் அசவுகரியமாக உணருகிறார். எம்டிஎம்ஏ எனும் போதை மருந்தை கொடுத்ததால் சோனாலி போகட் இரண்டு மணிநேரமாக கழிவறையில் வாந்தி எடுத்துள்ளார்.

தனிச் செயலாளர்
பின்னர் அவர் கிளப்பிலிருந்து அதிகாலை 4.30 மணிக்கு தனி செயலாளரால் அழைத்து வரப்படுகிறார். அங்கிருந்து போகட்டை கிராண்ட் லியோனி ரிசார்ட்டுக்கு அழைத்து செல்கிறார்கள். சிறிது நேரத்தில் சோனாலி அந்தோணி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்படுகிறார். அங்கு அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். சங்கவானும் சோனாலியின் நண்பர் சுக்வீந்தரும் அளவுக்கு அதிகமான அளவில் போதை மருந்தை சோனாலிக்கு கொடுத்துள்ளனர்.

சோனாலியின் பணத்தை கொள்ளையடிக்க
போதை மருந்து கொடுத்து சோனாலியின் பணத்தை அபகரிக்கவும் அவரது சொத்துகளை பெற பத்திரத்தில் கையெழுத்தை பெறவும் சங்கவானும் சுக்வீந்தரும் முயற்சித்துள்ளனர். இவ்வாறு அந்த குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சோனாலியின் வழக்கு வரும் டிசம்பர் 5 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் போகட் ஹரியானாவில் ஒரு தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இவர் 2008 ஆம் ஆண்டு முதல் பாஜகவில் இருந்து வந்தார்.

பாலியல் பலாத்காரம்
சோனாலி போகத் இறப்பு குறித்து அவருடைய சகோதரர் ரிங்கு தாகா போலீஸில் புகார் அளித்திருந்தார். அந்த புகாரில் சுதிர் தனக்கு போதை மருந்து கலந்த உணவை கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்து அதை வீடியோஎடுத்து சமூகவலைதளங்களில் பதிவேற்றம் செய்து விடுவேன் என மிரட்டியதாக சோனாலி என்னிடம் ஒரு முறை தெரிவித்திருந்ததாக சகோதரர் ரிங்கு கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications