அமெரிக்கா vs இந்தியா.. மருத்துவ துறையில் எந்த நாடு பெஸ்ட்! உண்மையை உடைத்து சொன்ன அமெரிக்க பெண்!
மும்பை: இந்தியாவில் வசிக்கும் அமெரிக்கப் பெண் ஒருவர் இரு நாட்டிலும் இருக்கும் சுகாதாரக் கட்டமைப்பை ஒப்பிட்டு இருக்கிறார். காத்திருக்கும் நேரம், செலவுகள் காப்பீடு எனப் பல்வேறு விஷயங்கள் குறித்தும் அவர் விரிவாக ஒப்பீட்டு இருக்கிறார். கடைசியில் இதில் நமக்குக் கிடைக்கும் பதில் சர்ப்ரைஸ் தருவதாக இருக்கிறது.
எந்தவொரு நாடாக இருந்தாலும் சரி, நமக்குக் கிடைக்கும் மருத்துவ வசதி என்பது ரொம்பவே முக்கியமானது. தேவையற்ற மரணங்களைக் குறைப்பது முதல் குழந்தைகள் ஆரோக்கியம், விபத்துகளுக்கான சிகிச்சை என மருத்துவம் தான் அடிப்படை. ஒரு நாட்டில் எந்தளவுக்குச் சுகாதாரக் கட்டமைப்பு வலுவாக இருக்கிறதோ.. அந்தளவுக்கு அந்த நாட்டில் வளர்ச்சியும் இருக்கும்.

அமெரிக்கா vs இந்தியா
பொதுவாக அமெரிக்கா சுகாதாரத் துறை அதன் மேம்பட்ட மருத்துவத் தொழில்நுட்பத்திற்குப் பெயர் பெயர் பெற்றது. மற்றொருபுறம் இந்தியாவில் மருத்துவச் செலவுகள் குறைவாக இருக்கும். மேலும், யார் நினைத்தாலும் மருத்துவரை எளிதாக அணுக முடியும். இரு நாடுகளுக்கும் இடையேயான மருத்துவக் கட்டமைப்பை ஒப்பிட்டுப் பார்த்தால் இது நமக்குப் புரியும். மேலும், பொத்தாம் பொதுவாக அமெரிக்க மருத்துவம் பெஸ்ட் எனச் சொல்லிவிட முடியாது. ஏனென்றால் இதில் பல விஷயங்கள் இருக்கிறது.
இந்தியாவில் வாழும் அமெரிக்கப் பெண்
இதற்கிடையே கிறிஸ்டன் பிஷ்ஷர் என்ற அமெரிக்கப் பெண் ஒருவர் இரு நாடுகளுக்கும் இடையேயான சுகாதாரக் கட்டமைப்பில் இருக்கும் வேறுபாடுகளைப் பட்டியலிட்டு வீடியோவாக வெளியிட்டு இருக்கிறார். இரு நாடுகளுக்கும் இடையேயான மிகப் பெரிய வேறுபாடு என்றால் காத்திருக்கும் நேரம் தான். காத்திருக்கும் நேரமா புரியலயே எனக் கேட்கலாம். நமது நாட்டில் உங்களுக்கு உடம்பு சரி இல்லை என்றால் என்ன செய்வீர்கள்.. நேரடியாக மருத்துவமனைக்குப் போவீர்கள். அங்கு டோக்கன் போட்டால் கொஞ்ச நேரத்தில் மருத்துவரைப் பார்த்துவிடலாம்.
காத்திருப்பு நேரம்
ஆனால், அமெரிக்காவில் அப்படி இல்லையாம். சாதாரணமாக ஒரு மருத்துவரைப் பார்க்கவே இரண்டு முதல் நான்கு வாரங்கள் வரை காத்திருக்க வேண்டுமாம் என்கிறார் கிறிஸ்டன் பிஷ்ஷர். மேலும் ஒரு சிறப்பு மருத்துவரைச் சந்திக்க வேண்டும் என்றால் நமது நாட்டில் அதிகபட்சம் சில நாட்கள் தான் காத்திருக்க வேண்டும். ஆனால், அமெரிக்காவில் 3 மாதங்கள் வரை அதற்குக் காத்திருக்க வேண்டி வரலாமாம்.
மேலும், திட்டமிடப்பட்ட அல்லது எமர்ஜென்சி இல்லாத ஆப்ரேஷன் என்றால் அதை நாம் ஒரு வாரத்தில் செய்துவிடலாம். ஆனால், அமெரிக்காவில் அதற்கும் மூன்று முதல் ஆறு மாதங்கள் வரை காத்திருக்க வேண்டுமாம்.
செலவுகள்
காத்திருக்கும் நேரம் மட்டுமில்லை.. மருத்துவ செலவும் முக்கியம். மருத்துவச் செலவு அதிகமாக இருந்தால் அதை அனைவராலும் அணுக முடியாது. இதனால் மருத்துவக் கட்டமைப்பு இருந்தும் பலன் இல்லாமல் போகும். அமெரிக்காவில் இதுதான் மேஜர் பிரச்சினை. அமெரிக்காவில் உள்ள இந்தியர்களே கூட இது குறித்துப் புலம்பி நீங்கள் பார்த்து இருக்கலாம்.
இந்தியாவில் நீங்கள் ஒரு மருத்துவரிடம் செக் அப் சென்றால் ரூ.500 முதல் ரூ.1500 வரை செலவாகும். அதேநேரம் அமெரிக்காவில் இதற்கு 150 டாலர் முதல் 600 டாலர், அதாவது ரூ.12,000 முதல் ரூ.50,000 வரை ஆகுமாம். இந்தளவுக்கு அதிகமாக இருப்பதாலேயே அமெரிக்காவில் பெரும்பாலானோர் மிக மோசமாக உடல்நிலை பாதிக்கப்பட்டால் மட்டுமே மருத்துவரிடம் செல்வார்கள். மருத்துவரிடம் செல்ல அமெரிக்கர்கள் தவிர்க்கவே பார்ப்பார்கள்.
தலை சுத்துது
அடுத்து இதுதான் ரொம்ப முக்கியமானது. அதாவது உடம்புக்கு ரொம்ப முடியவில்லை என்றால் மருத்துவமனையில் தங்க வேண்டி இருக்கலாம். இந்தியாவில் ஒரு நாள் பெட்டிற்கு சராசரியாக ரூ.6 ஆயிரம் ஆகும். அதற்கே நல்ல பெட் கிடைக்கும். ஆணால், அமெரிக்காவில் நீங்கள் ஒரு நாள் மருத்துவமனையில் தங்கச் சுமார் $3,000 (2.5 லட்சம்) செலவாகுமாம்.
இன்சூரன்ஸ்
அதேநேரம் பொதுவாக நீங்கள் கேட்டால் அமெரிக்காவில் மருத்துவக் காப்பீடு இருக்கும்.. இதனால் செலவு அதிகம் என்றாலும் அமெரிக்காவில் பிரச்சினை இருக்காது எனச் சொல்வார்கள். ஆனால், உண்மை அப்படி இல்லை. அமெரிக்காவில் சராசரியாக மருத்துவக் காப்பீட்டிற்கே நீங்கள் மாதம் $800 முதல் $1,500 (ரூ.64,000 முதல் ரூ.1.2 லட்சம்) வரை கட்ட வேண்டும். அப்படிச் செலுத்தினாலும் கூட மருத்துவமனையில் அட்மிட் ஆகும்போது கணிசமான தொகையை நீங்கள் கையில் இருந்து போட வேண்டும்.
எது பெஸ்ட்
அதேநேரம் இந்தியாவில் மக்கள் தொகை எண்ணிக்கை அதிகமாக இருப்பதால்.. மருத்துவக் காப்பீடு மிகவும் குறைந்த விலைக்கே கிடைக்கிறது. இங்குச் சராசரி மருத்துவக் காப்பீட்டிற்கு நாம் மாதம் ரூ.2 ஆயிரம் முதல் 5 ஆயிரம் வரை செலவழித்தாலே போதும். பெரும்பாலான சிகிச்சைகள் இதில் கவர் ஆகிவிடுவதாகக் கூறுகிறார் கிறிஸ்டன் பிஷ்ஷர். அமெரிக்காவில் என்னதான் மருத்துவ தொழில்நுட்பம் மற்றும் வசதிகள் மிக சிறப்பாக இருந்தாலும் காத்திருக்கும் நேரம் மற்றும் செலவு எனப் பார்த்தால் இந்தியா தான் பெஸ்ட் என்கிறார் கிறிஸ்டன் பிஷ்ஷர்












Click it and Unblock the Notifications