'வெள்ளை டீசர்ட்,கருப்பு மாஸ்க்..' போலீஸ் ஸ்டேஷனில் ஆரியன் கான்.. வைரல் வீடியோ:மவுனம் காக்கும் ஷாருக்
மும்பை: பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக் கானின் மகன் ஆரியன் கான் மும்பை அருகே சொகுசு கப்பலில் நடைபெற்ற பார்ட்டியில் போதைப் பொருள் எடுத்துக் கொண்டதாகக் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் தடுப்பு காவலில் இருந்த போது எடுத்த வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது.
பாலிவுட் உலகில் பல்வேறு நட்சத்திரங்களும் போதைப் பொருட்களைப் பயன்படுத்துவதாகப் புகார்கள் பல ஆண்டுகளாகவே இருக்கிறது. குறிப்பாக, சிலர் முக்கிய நட்சத்திரங்கள் போதைப்பொருள் தலைவர்களுடன் நேரடியாகத் தொடர்பில் இருப்பதாகவும் பகீர் தகவல்கள் கிளம்பின.
குறிப்பாக சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணத்தின் சமயத்தில் இது குறித்த தகவல்கள் அதிகளவில் வெளி வரத் தொடங்கியது. இருந்தாலும் கூட இவை அனைத்தும் வெறும் சமூக வலைத்தளங்களில் மட்டுமே பேசப்படுகிறதே தவிர, முறையான நடவடிக்கை எதுவும் போலீசார் இதுவரை எடுத்ததாகத் தெரியவில்லை.
|
ரேவ் பார்டி
இந்தச் சூழலில் போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் நேற்று அதிரடி நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளனர். மும்பையில் இருந்து கோவா செல்லும் மும்பையில் எம்ப்ரெஸ் என்ற சொகுசு கப்பலில் ரேவ் பார்டி நடைபெறுவதாக 15 நாட்களுக்கு முன் போதைப் பொருள் தடுப்பு பிரிவினருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலையடுத்து குற்றவாளிகளை கையும் களவுமாகப் பிடிக்க போலீசார் விரிவான திட்டம் ஒன்றைப் போட்டுள்ளனர்.
|
சொகுசு கப்பல்
அதன்படி மாறுவேடத்தில் சொகுசு கப்பலில் டிக்கெட் வாங்கி பயணித்த போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள், ரேவ் பார்ட்டி ஸ்டார்ட் ஆனதும் தங்கள் அதிரடி நடவடிக்கையைத் தொடங்கியுள்ளனர். அங்குப் போதைப் பொருள் பயன்படுத்தியவர்களை கையும் களவுமாகப் பிடித்த அதிகாரிகளை, பல கோடி மதிப்பிலான போதைப் பொருட்களையும் கைப்பற்றினார்கள். அனைத்தையும் மும்பைக்கு எடுத்து வந்த போதைப் பொருள் தடுப்பு பிரிவினர், இது தொடர்பாக 8 பேரைத் தடுப்பு காவலில் வைத்து தீவிர விசாரணையைத் தொடங்கினர்.
|
பல பாலிவுட் பிரபலங்கள்
அப்படித் தடுப்பு காவலில் இருந்தவர்களில் பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக் கானின் மகன் ஆரியன் கானும் ஒருவர். ஆரியன் கானுக்கு எதிராக வலுவான ஆதாரங்கள் இருந்த நிலையில், இன்று மதியம் அவர் கைது செய்யப்பட்டார். இது தொடர்பாகப் போதைப் பொருள் தடுப்பு பிரிவு மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், "இந்த கப்பலில் பாலிவுட் பிரபலங்கள் இருப்பார்கள் என்று எதுவும் எங்களுக்குத் தெரியாது. ஆனால் பல்வேறு பாலிவுட் பிரபலங்களும் இந்த கப்பலில் இருந்தனர். ஆனால் அவர்கள் யாரும் போதைப்பொருளை எடுத்துக் கொண்டிருக்கவில்லை. அதனால் மற்றவர்கள் கைது செய்யப்படவில்லை" என்றார்.

வைரல் வீடியோ
இந்நிலையில், ஆர்யான் கானின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது. ஒரு சில நொடிகள் மட்டுமே ஓடும் அந்த வீடியோவில் ஆர்யன் கான் வெள்ளை டீ சார்ட், சிவப்பு சட்டை அணிந்து கையில் பையுடன் அமர்ந்து கொண்டிருக்கிறார். இந்த வீடியோ எங்கே எடுக்கப்பட்டது என்பது குறித்து தெளிவான தகவல்கள் இல்லை. இருப்பினும், விசாரணை சமயத்தில் தடுப்பு காவலில் இருந்த போது இந்த வீடியோ எடுக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

ஷாருக் கான்
மேலும், ஆர்யன் கான் கைது செய்யப்பட்டது தொடர்பாகச் சாருக் கான் தரப்பில் இருந்து இதுவரை எந்தவொரு கருத்தும் கூறவில்லை. அதேபோல போலீசார் தரப்பிலும் இதுவரை தெளிவாக எதுவும் கூறப்படவில்லை. ஷாருக் கான் தற்போது அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இப்போது ஆர்யன் கான் கைது செய்யப்பட்டுள்ளதால், அந்த படத்தின் ஷூட்டிங் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications