மகாராஷ்டிரா முதல்வர் பதவி: ராஜினாமா செய்தார் ஏக்நாத் ஷிண்டே! முதல்வராகும் பாஜக தேவேந்திர பட்னாவிஸ்?
மும்பை: மகாராஷ்டிரா முதல்வர் பதவியில் இருந்து ஏக்னாத் ஷிண்டே ராஜினாமா செய்தார். மகாராஷ்டிரா ஆளுநர் ராதாகிருஷ்ணனை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை ஏக்னாத் ஷிண்டே வழங்கினார். மகாராஷ்டிரா சட்டசபை பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைய இருக்கும் நிலையில் ராஜினாமா செய்தார். இதற்கிடையே அடுத்த முதல்வர் யார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருக்கும் நிலையில், தேவேந்திர பட்னாவிஸ் ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பாஜக, ஏக்னாத் ஷிண்டே சிவசேனா, அஜித்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கூட்டணி வரலாறு காணாத வெற்றி பெற்றது. இதையடுத்து இந்த கூட்டணி ஆட்சி அமைக்க முனைப்பு காட்டி வருகிறது. ஆனால் இமாலய வெற்றி பெற்ற மகாயுதி கூட்டணியில் முதல்வர் வேட்பாளரை முடிவு செய்வதில் இழுபறி நீடிக்கிறது. தற்போது முதல்வராக இருக்கும் ஏக்னாத் ஷிண்டே முதல்வராக பதவியேற்பாரா? அல்லது 132 தொகுதிகளில் வெற்றி பெற்றதால் பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராக பதவியேற்பாரா? என்ற சஸ்பெண்ஸ் தொடர்ந்து நீடித்து வருகிறது. இத்தகைய பரபரப்பான சூழலில் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராக பதவியேற்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மகாராஷ்டிராவில் கடந்த 20 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி வெற்றி பெற்றது. மொத்தம் உள்ள 288 தொகுதிகளில் பெரும்பான்மைக்கு 145 இடங்கள் தேவை என்ற நிலையில், மகாயுதி கூட்டணி 230 இடங்களை வென்றது. பாஜக மட்டும் 132 தொகுதிகளிலும், சிவசேனா 57, தேசியவாத காங்கிரஸ் 41 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.
காங்கிரஸ், உத்தவ் சிவசேனா, சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் அடங்கிய மகாவிகாஸ் அகாடி கூட்டணி வெறும் 46 இடங்களில் மட்டுமே வென்று படுதோல்வி அடைந்துள்ளது. இமாலய வெற்றி பெற்ற மகாயுதி கூட்டணியில் முதல்வர் வேட்பாளரை முடிவு செய்வதில் இழுபறி நீடிக்கிறது. சிவசேனாவின் ஏக்நாத் ஷின்டே முதல்வர் பதவியை விட்டுக்கொடுக்க மறுப்பதாக சொல்லப்படுகிறது.
அதேவேளையில், தனிப்பெரும் கட்சியாக வென்றுள்ள பாஜக, முதல்வர் பதவியை தன்வசம் வைத்துக்கொள்ள விரும்புகிறது. இதனால், மகாராஷ்டிராவில் அடுத்த முதல்வர் யார் என்பதை இறுதி செய்வதில் சஸ்பென்ஸ் நீடித்துகொண்டே உள்ளது. பீகாரில், குறைந்த இடங்களை வென்றாலும் எப்படி நிதிஷ்குமாருக்கு முதல்வர் பதவி ஒதுக்கப்பட்டுள்ளதோ அது போல, ஷிண்டேவுக்கும் முதல்வர் பதவியை கொடுக்க வேண்டும் என சிவசேனா கூறி வருகிறது.
அஜித்பவார், தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராக ஆதரவு தெரிவித்ததாக சொல்லப்படுகிறது. முதல்வர் பதவியை விட்டுக்கொடுக்க இரு கட்சிகளும் தயாராக இல்லாத நிலையில், நேற்று தேவேந்திர பட்னாவிஸ் டெல்லி விரைந்தார். புதிய அரசு அமைப்பதில் ஏற்பட்டு உள்ள தாமதம் தொடர்பாகவும், அதற்கான தீர்வு குறித்தும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக சொல்லப்படுகிறது.
மகாராஷ்டிராவில் 14-வது சட்டமன்றத்தின் பதவி காலம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. இதனால், விரைவில் முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் மகாராஷ்டிரா முதல்வர் பதவியில் இருந்து ஏக்னாத் ஷிண்டே ராஜினாமா செய்துள்ளார். மகாராஷ்டிரா ஆளுநர் ராதாகிருஷ்ணனை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை ஏக்னாத் ஷிண்டே வழங்கினார். அப்போது அவருடன் தேவேந்திர பட்னாவிசும் இருந்தார். மகாராஷ்டிரா சட்டசபை பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைய இருக்கும் நிலையில் அவர் ராஜினாமா செய்துள்ளார். அடுத்த அரசு அமையும்வரை ஷிண்டே காபந்து முதல்வராக தொடர்வார் என்று கூறப்படுகிறது.
இதற்கிடையே, தேவேந்திர பட்னாவிஸ், இன்று ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோர உள்ளதாக கூறப்படுகிறது. அஜித்பவாரின் தேசியவாத காங்கிரஸ் தேவேந்திர பட்னாவிசுக்கு ஆதரவு தெரிவித்து இருப்பதால் பட்னாவிஸ் முதல்வர் பதவி வகிக்க வாய்ப்புஇருப்பதாக கூறப்படுகிறது. எனினும் ஏக்னாத் ஷிண்டேவில் சிவசேனாவினர், ஷிண்டே தான் முதல்வர் பதவி வகிக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்து வருகின்றனர். ஆனால் பாஜகவினர் பட்னாவிஸ் தான் முதல்வராக வேண்டும் என்று கூறி வருகின்றனர்.
இதனால் மகாராஷ்டிரா முதல்வர் யார் என்ற எதிர்பார்ப்பு தொடர்ந்து நிலவுகிறது. எனினும் பட்னாவிஸ் இன்று ஆட்சி அமைக்க ஆளுநரிடம் உரிமை கோருவார் என்று கூறப்படுகிறது. முன்னதாக சபாநாயகர் ஓம் பிர்லாவின் மகள் திருமணத்தில் பங்கேற்கவே டெல்லிக்கு வந்து இருப்பதாகவும், முதல்வர் விவகாரம் தொடர்பாக யாரையும் சந்திக்கவில்லை எனவும் தேவேந்திர பட்னாவிஸ் கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications