ரத்தன் டாடா கடைசி வரை திருமணம் செய்யாதது ஏன் தெரியுமா? பழைய நேர்காணலில் அவரே சொன்ன காரணம்
மும்பை: உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த ரத்தன் டாடா, நேற்றைய தினம் காலமானார். அவருக்கு வயது 86. ரத்தன் டாடா கடைசி வரை திருமணம் செய்து கொள்ளாமலேயே இருந்தார். இதற்கான காரணத்தை அவரே முன்பு ஒரு நேர்காணலில் பகிர்ந்து இருந்தார். அது குறித்து நாம் பார்க்கலாம்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ரத்தன் டாடா உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனில்லாமல் அவர் உயிரிழந்தார்.

அவரது உடல் இன்று பொதுமக்கள் அஞ்சலி செலுத்த வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை அவரது உடலுக்கு இறுதிச் சடங்கு நடைபெறும் நிலையில், அரசு மரியாதை வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் ஷிண்டே அறிவித்துள்ளார்.
திருமணம் செய்யவில்லை: ரத்தன் டாடா மறைவு குறித்த செய்தி வெளியானதும்.. பலரும் அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் குறித்தே தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டினர். 86 வயதாகி இருந்தாலும் ரத்தன் டாடா கடைசி வரை திருமணம் செய்து கொள்ளவில்லை. அவருக்குக் குழந்தைகளும் இல்லை. இதற்கான காரணத்தை அவரே கடந்த காலங்களில் விளக்கியுள்ளார். அது குறித்து நாம் பார்க்கலாம்.
ரத்தன் டாடா முதலில் அமெரிக்காவில் தனது கல்லூரி படிப்பை முடித்திருந்தார். அமெரிக்காவிலேயே அவர் ஒரு நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்து இருந்தார்.. அப்போது அங்கு ஒரு பெண்ணை காதலித்து வந்ததாகவும் இருப்பினும் அதைத் தொடர முடியாமல் போனதாக அவர் முன்பு ஒரு நேர்காணலில் குறிப்பிட்டு இருந்தார்.
முதல் காதல் முறிந்தது எப்படி: இது தொடர்பாகப் பழைய நேர்காணல் ஒன்றில் ரத்தன் டாடா கூறுகையில், "அமெரிக்காவில் வேலை செய்த போது நன்றாக இருந்தது. அங்கு கிளைமேட் கூட அருமையாக இருக்கும்.. எனக்குச் சொந்தமாக கார் இருந்தது, நான் என் வேலையை விரும்பினேன். அப்போது ஒரு பெண்ணை காதலித்து வந்தேன். கிட்டத்தட்ட திருமணம் செய்யும் நிலைக்குச் சென்றுவிட்டேன்.
இருப்பினும், அப்போது திடீரென எனது பாட்டியின் உடல்நிலை மோசமானது. இதனால் உடனடியாக இந்தியா திரும்ப வேண்டியதாகிவிட்டது. எனது காதலியை இந்தியாவுக்கு வந்துவிடுவார் என்றே நம்பினேன். ஆனால், அப்போது தான் 1962 இந்திய-சீனப் போர் வெடித்து இருந்தது. இதனால் காதலியின் பெற்றோர் அவரை இந்தியா அனுப்பச் சம்மதிக்கவில்லை. இதனால் அந்த உறவு அப்படியே முறிந்து போனது" என்று குறிப்பிட்டு இருந்தார்.
பயம்: இது மட்டுமின்றி 4 முறை அவர் திருமணம் செய்து கொள்ள இருந்தாராம். இருப்பினும், 4 முறையும் அது தள்ளிப்போனதாகவும் அவர் குறிப்பிட்டார். இது குறித்துக் கடந்த 2011ம் ஆண்டு அளித்த பேட்டியில் அவர் கூறுகையில், "நான் நான்கு முறை திருமணத்திற்கு மிக அருகில் வந்தேன். இருப்பினும், ஒவ்வொரு முறையும் பயம் அல்லது வேறு எதாவது ஒரு காரணத்தினால் பின்வாங்கிவிட்டேன்" என்று குறிப்பிட்டு இருந்தார். அதன் பிறகு தனிப்பட்ட காரணங்களால் அப்படியே சிங்கிளாக இருக்க முடிவு செய்துவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தனிமை: அவர் மேலும் கூறுகையில், "அதேநேரம் எனது இந்த முடிவால் சில நேரங்களில் நான் தனிமையையும் உணர்ந்துள்ளேன்.. மனைவி, குடும்பம் இல்லாததால் சில முறை நான் தனிமையாக உணர்ந்துள்ளேன். ஏக்கமாக இருக்கும். அதேநேரம் சில நேரங்களில் சுதந்திரமாக இருக்கும் உணர்வும் இருக்கும். யாரைப் பற்றியும் கவலைப்படாமல் சுதந்திரமாக இருக்க முடிவதாக சில நேரம் உணர்வேன்" என்று கூறியிருந்தார்.
1970கள் மற்றும் 80களில் பாலிவுட்டில் மிக முக்கிய கதாநாயகியாக வலம்வந்த ஐகான் சிமி கரேவால் என்பவரை ரத்தன் டாடா டேட்டிங் செய்து வந்தார். அவர்கள் சீரியஸாக காதலித்து வருவதாகவும் அவர்கள் திருமணம் செய்து கொள்வார்கள் என்றே அப்போது பலரும் எதிர்பார்த்தனர். இருப்பினும், சில காரணங்களால் அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளவில்லை.
ரத்தன் டாடா திருமணம் செய்து கொள்ளவில்லை என்ற போதிலும், அவர் தனது சகோதரர்கள் மற்றும் உறவினர்களுடன் நெருக்கமாக உறவைக் கொண்டிருந்தார். குறிப்பாக நோயல் டாடா உடன் நெருக்கமான உறவைக் கொண்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications