என்னது அம்பானி இல்ல திருமணத்திற்காக ஜாம்நகர் ஏர்போர்ட்டுக்கு சர்வதேச அந்தஸ்தா? அதிகாரிகள் விளக்கம்
காந்திநகர்: ஆனந்த் அம்பானியின் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்களில் உலக தலைவர்கள் கலந்து கொள்ள ஏதுவாக ஜாம்நகர் ஏர்போர்ட்டிற்கு சர்வதேச விமான நிலைய அந்தஸ்து வழங்கப்பட்டுள்ள நிலையில், இதற்கான காரணம் இப்போது தெரிய வந்துள்ளது.
குஜராத் மாவட்டத்தில் இந்தியாவின் மிக கோடீஸ்வரரான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோரின் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்கள் நடக்கிறது.

உலகின் பல முக்கிய புள்ளிகள், தொழிலதிபர்கள் கோடீஸ்வரர்கள் இந்த கொண்டாட்டங்களில் கலந்து கொள்ள உள்ளனர். இதன் காரணமாக ஜாம் நகரில் பல கொண்டாட்டங்கள் நடந்து வருகிறது.
ஜாம்நகர் ஏர்போர்ட்: இதற்கிடையே ஜாம்நகர் விமான நிலையத்திற்கு அடுத்த 10 நாட்களுக்கு மட்டும் தற்காலிகமாக சர்வதேச விமான நிலைய அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. பில் கேட்ஸ், மார்க் ஜுக்கர்பெர்க், ரிஹானா, இவான்கா டிரம்ப் மற்றும் பல முன்னாள் பிரதமர்கள் உள்ளிட்ட உலகத் தலைவர்கள் மற்றும் பிரமுகர்கள் இந்த விழாவுக்கு வரும் நிலையில், அதை கருத்தில் கொண்டு ஜாம்நகர் விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த பிப். 25ஆம் தேதி இந்த சர்வதேச விமான நிலைய அந்தஸ்து வழங்கப்பட்ட நிலையில், இந்த மார்ச் 5ஆம் தேதி வரை செல்லுபடியாகும். அதேநேரம் இதற்கான விமர்சனங்களும் எழுந்துள்ளது. இதற்கிடையே ஜாம்நகர் ஏர்போர்ட்டிற்கு ஏன் சர்வதேச விமான நிலைய அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது என்பது குறித்து சிவில் ஏவிஷேன் துறையை சேர்ந்த அதிகாரி சில முக்கிய தகவல்களை பகிர்ந்துள்ளார்.
காரணம்: ஒரு விமான நிலையத்திற்கு சர்வதேச விமான நிலைய அந்தஸ்து தரப்படவில்லை என்றாலும் அதில் சர்வதேச விமானங்கள் வந்து இறங்கலாம். நம்ம மதுரை ஏர்போர்ட் அதற்கு ஒரு உதாரணம். இருப்பினும், அதில் பல்வேறு கட்டுப்பாடுகள் இருக்கும். அதேநேரம் சர்வதேச விமான நிலையமாக அறிவிக்கப்பட்டால் கட்டுப்பாடுகள் எதுவும் இருக்காது. இப்போது ஜாம்நகரில் கஸ்டம் துறை, குடிவரவு உள்ளிட்ட தேவையான ஏற்பாடுகளை செய்யவும் மத்திய அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
முதலில் ஜாம்நகர் பாதுகாப்பு விமான தளமாக மட்டுமே இருந்தது. சமீபத்தில் அங்கே பயணிகள் முனையத்தை இந்திய விமான நிலைய ஆணையம் கட்டிய நிலையில், அதன் பிறகு அங்கே வணிக விமான போக்குவரத்தும் தொடங்கியது. இருப்பினும், வழக்கமாக அங்கே தினசரி 6 விமானங்கள் தான் வந்து செல்லும். ஆனால், ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட் திருமணம் காரணமாக நேற்று 100+ விமானங்கள் வந்து சென்றுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
அந்த ஒரு படம் போதுமே.. ஊரே வியக்குது! ஆரம்பித்தது ஆனந்த் அம்பானி திருமண கொண்டாட்டங்கள்! வாவ் செம
அதிகாரிகள் சொல்வது என்ன: இப்படி அதிகப்படியான சர்வதேச தலைவர்கள் ஜாம்நகருக்கு வருவதாலேயே ஜாம்நகர் விமான நிலையத்திற்கு சர்வதேச விமான நிலைய அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளதாக சிவில் ஏவியேஷன் துறை அதிகாரிகள் கூறுகின்றனர். ஜாம்நகரில் இப்போது ஒரே நேரத்தில் மூன்று விமானங்களை கையாள முடியும். அதாவது ஒரே நேரத்தில் சிறிய விமானங்கள் என்றால் 3 விமானங்களையும், பெரிய விமானங்கள் என்றால் ஆறு விமானங்களையும் ஜாம்நகர் ஏர்போர்ட்டால் கையாள முடியும்.
முகேஷ் அம்பானியின் இளைய மகனான ஆனந்த் அம்பானி இப்போது ரிலையன்ஸின் எரிசக்தி நிறுவனத்தின் இயக்குநராக இருக்கிறார். அவர் தொழிலதிபர் வீரேன் மெர்ச்சன்ட்டின் மகள் ராதிகா மெர்ச்சண்டை காதலித்து வந்த நிலையில், இருவருக்கும் இடையே திருமணம் நடக்க உள்ளது. வரும் ஜூலை மாதம் இவர்களின் திருமணம் நடக்கலாம் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications