திமுக ஸ்டைல் திட்டம்.. மகளிர் உரிமைத் தொகை ரூ.1500ஐ வைத்து.. மகாராஷ்டிராவை அள்ளிய பாஜக கூட்டணி
மும்பை: மகாராஷ்டிராவில் தேர்தலை எதிர்கொள்ள பாஜக கூட்டணி மற்றும் காங்கிரஸ் கூட்டணி இரண்டும் அங்கே திமுக ஸ்டைல் வாக்குறுதிகளை அறிவித்தது. அந்த வாக்குறுதிகள் தேர்தல் முடிவுகளில் பெரிய அளவில் எதிரொலித்துள்ளன.
மகாராஷ்டிரா சட்டசபையின் 288 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான சட்டசபை தேர்தல் கடந்த ஒரே கட்டமாக நடந்தது. அங்கே மெஜாரிட்டி பெற்று ஆட்சி அமைக்க 145 இடங்களில் வெல்ல வேண்டும்.

மகாராஷ்டிரா தேர்தல்: மகாராஷ்டிரா தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. தற்போது வரை வெளியான முடிவுகளில் பாஜக கூட்டணி - பாஜக 147 இடங்கள், அஜித் பவார் தேசியவாத காங்கிரஸ் 41, ஷிண்டே சிவசேனா - 55 இடங்களில் முன்னிலை. பாஜக கூட்டணி மொத்தமாக 232 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
காங்கிரஸ் கூட்டணி - காங்கிரஸ் 16, சரத் பவார் தேசியவாத காங்கிரஸ் - 10 இடங்கள், உத்தவ் தாக்கரே சிவசேனா 21 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் கூட்டணி மொத்தமாக 51 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
எதிர்க்கட்சிகளின் 5 வாக்குறுதிகள்: சிவசேனா - காங்கிரஸ் - தேசியவாத காங்கிரசின் மகா விகாஸ் அகாடி சார்பாக வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில் 5 முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.
மகாலட்சுமி திட்டம்: மகாராஷ்டிரா முழுவதும் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.3,000 நிதியுதவி அளிப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவச போக்குவரத்து வழங்கப்படும்.
க்ருஷி சம்ருத்தி (விவசாய செழிப்பு): மாநில விவசாயிகளை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்டு, அனைத்து விவசாயிகளுக்கும் ரூ.3 லட்சம் வரையிலான விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்வதாக எம்.வி.ஏ. அறிவித்து உள்ளது. கூடுதல் ஊக்கத்தொகையாக, தொடர்ந்து கடனைத் திருப்பிச் செலுத்தும் விவசாயிகளுக்கு கூடுதலாக ரூ.50,000 வழங்கப்படும்.
யுவகண்ணா சப்தா (இளைஞர் ஆதரவு): வேலையில்லாத் திண்டாட்டத்தை போக்க, மகாராஷ்டிராவில் வேலையில்லாத ஒவ்வொரு இளைஞருக்கும் மாதம் ரூ.4,000 உதவி வழங்கப்படும்.
குடும்ப ரக்ஷன் (குடும்பப் பாதுகாப்பு): இந்தத் திட்டத்தின் கீழ், மகாராஷ்டிராவில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் ரூ. 25 லட்சம் மதிப்பிலான சுகாதாரக் காப்பீட்டுத் தொகையைப் பெறும். அரசு மருத்துவமனைகளில் அத்தியாவசிய மருந்துகளும் இலவசமாகக் கிடைக்கும்.
சமந்தேச்சி ஹமி (சமத்துவத்திற்கான திட்டம்): மஹாராஷ்டிரா முழுவதும் ஒடுக்கப்பட்ட சமூகங்களின் தேவைகளைக் கண்டறிந்து அவற்றை நிவர்த்தி செய்ய சமூக-பொருளாதார ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும். இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பைத் தொடர்ந்து, போதுமான பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வதற்காக 50% இடஒதுக்கீடு உச்சவரம்பை ரத்து செய்வோம்.
சிவசேனா அறிக்கை: அதேபோல் சிவசேனா (UBT) தேர்தல் அறிக்கை தனியாக தலைவர் உத்தவ் தாக்கரே மூலம் வெளியிடப்பட்டது. Vachan Nama அதாவது உறுதிமொழி என்ற பெயரில் இந்த வாக்குறுதி வெளியிடப்பட்டு உள்ளது. ஆண்களுக்கு இலவச கல்வி, அத்தியாவசிய பொருட்களின் விலையை கட்டுப்படுத்துவது, தனியார் மூலம் செய்யப்படும் தாராவி வளர்ச்சி திட்டத்திற்கு தடை விதிப்பது ஆகிய வாக்குறுதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
தற்போது மகாராஷ்டிராவில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் ஆட்சியின் கீழ், மாணவிகள் மாநில அளவில் இலவசக் கல்வியைப் பெறுகிறார்கள். இது பெண்களின் கல்வியறிவை அதிகரிப்பதற்கும் பெண்களுக்கு அதிகாரமளிப்பதற்கும் வாய்ப்பளிக்கிறது. இந்த நிலையில் சிவசேனாவின் மகா விகாஸ் அகாடி ஆட்சிக்கு வந்தால், மாநிலத்தில் உள்ள ஆண் மாணவர்களுக்கும் அதே சலுகை வழங்கப்படும் என்று உத்தவ் தாக்கரே உறுதியளித்தார்.
பாஜக அறிக்கை: அதே நேரம், பாஜக கூட்டணியும் தாங்கள் தற்போது பெண்களுக்கு கொடுத்து வரும் மாதம் 1500 ரூபாய் திட்டத்தை தேர்தல் வெற்றிக்கு பெரிதும் நம்பி இருக்கிறது. எங்கு பார்த்தாலும் இந்த திட்டம் தொடர்பான விளம்பரங்கள் மகாராஷ்டிராவை அலங்கரித்தன.
பல மாநிலங்களில் திமுக ஸ்டைல் தேர்தல் அறிக்கை காங்கிரசுக்கு உதவின. தெலுங்கானா, இமாச்சல பிரதேசம் இதற்கு உதாரணம். இதை சமாளிக்கவே தேர்தலுக்கு முன்பாகவே மகாராஷ்டிராவில் மகளிர் உரிமை தொகை திட்டத்தை பாஜக கூட்டணி அங்கே கொண்டு வந்தது. ஆட்சியை இழக்க கூடாது என்பதால் கடந்த சில மாதங்களாக பாஜக கூட்டணியும் அங்கே பெண்களுக்கு மாதம் 1500 ரூபாய் திட்டத்தை கொடுத்து வருகிறது.
தமிழகத்தில் இலவசத்தை எதிர்க்கும் பாஜக, மகாராஷ்டிராவில் 1500 ரூபாய் கொடுக்கும் திட்டத்தைதான் தங்கள் தேர்தல் பிரச்சாரத்தின் பிரம்மாஸ்திரமாக பார்த்தது. அந்த திட்டம் தற்போது பாஜக கூட்டணிக்கு தேர்தல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியை தந்துள்ளது.












Click it and Unblock the Notifications