முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் வாசுதேவன் காலமானார்.. கடைசி வரை நிறைவேறாத ஆசை!
மைசூர்: மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் அண்ணன் வாசுதேவன், கர்நாடக மாநிலம் மைசூரில் காலமானார். அவருக்கு வயது 92. ஜெயலலிதாவின் தந்தை ஜெயராமின் முதல் மனைவியின் மகன் வாசுதேவன்.
கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள பன்னூர் நகர் சமனஹள்ளியில் இருக்கும் தனது வளர்ப்பு மகள் பவித்ரா வீட்டில் தங்கியிருந்த வாசுதேவன், வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தார். கடந்த சில நாட்களாக மருத்துவ சிகிச்சை பெற்று வந்து அவர், சிகிச்சை பலனளிக்காமல் நேற்று அதிகாலை காலமானார். வாசுதேவனின் இறுதிச்சடங்குகள் ரங்கராஜபுராவில் நடைபெற்றன.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தந்தை ஜெயராமுக்கு இரண்டு மனைவிகள் இருந்தனர். இவர்களில் முதல் மனைவி ஜெயம்மாவிற்கு பிறந்தவர்தான் வாசுதேவன். இரண்டாவது மனைவி வேதவல்லி என்கிற சந்தியாவுக்கு பிறந்தவர்கள் ஜெயலலிதாவும், ஜெயக்குமாரும்.
கர்நாடக மாநிலம், மாண்டியா மாவட்டத்தில் உள்ள மேல்கோட்டையில் பிறந்த வாசுதேவன், ரங்கராஜபுராவில் தனது மனைவி வேதவல்லி, மகன் வேணுகோபால் உடன் வசித்து வந்தார். மகன் வேணுகோபால் 12 வயதாக இருக்கும்போது இறந்துவிட்டதால், அதன் பிறகு பவித்ரா என்ற பெண்ணை தத்தெடுத்து வளர்த்தார்.
வாசுதேவனின் மனைவி 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். அதன் பிறகு வளர்ப்பு மகள் பவித்ரா மற்றும் மருகன் ஶ்ரீகாந்த், பேரன், பேத்திகளுடன் வாசுதேவன் வசித்து வந்தார். இந்நிலையில், வயது மூப்பால் காலமானார்.
உறவு முறையில் அண்ணன் - தங்கை என்றபோதும், ஜெயலலிதாவுக்கும் இவருக்கும் இடையே எந்த பந்தமும் இல்லை. ஜெயலலிதா தமிழ்நாடு முதலமைச்சராக இருந்தபோது அவரை சந்திக்க இரண்டு முறை கொடநாடு எஸ்டேட்டுக்கு சென்றிருந்தார் வாசுதேவன். ஆனால், ஜெயலலிதாவை நேரில் சந்திக்க வாசுதேவனுக்கு கடைசி வரை வாய்ப்பு கிடைக்கவில்லை .
மேலும், ஜெயலலிதா மறைந்த பிறகு அவரது சொத்தில் பங்கு கேட்டு வாசுதேவன் வழக்கு தொடர்ந்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. தனது தந்தை ஜெயராமனின் இரண்டாவது மனைவியின் மகளான ஜெயலலிதாவின் சொத்தில் தனக்கு 50 சதவீதம் பங்கு தர தீபா, தீபக்குக்கு உத்தரவிட வேண்டும் என்று அவர் கோரி இருந்தார்.












Click it and Unblock the Notifications