மயிலாடுதுறையில் வீடு புகுந்து கடத்தப்பட்ட இளம்பெண்.. விக்கிரவாண்டி அருகே மீட்ட போலீஸ்!
நாகை : மயிலாடுதுறையில் வீட்டிற்குள் புகுந்து இளம்பெண்ணை கதற கதற கத்தி முனையில் வலுக்கட்டாயமாக கடத்திய கும்பலை, விக்கிரவாண்டி அருகே போலீசார் மடக்கிப் பிடித்தனர். கடத்தப்பட்ட இளம்பெண்ணையும் பத்திரமாக மீட்டனர்.
தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறை கஞ்சமேட்டுத்தெருவைச் சேர்ந்த விக்னேஸ்வரன் என்பவர், மயிலாடுதுறை மாவட்டம், மயிலம்மன் நகரில் உள்ள தனது பாட்டி பிரேமா வீட்டில் தங்கியிருந்தார். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த பட்டதாரி இளம்பெண்ணை காதலித்துள்ளார். எனினும், விக்னேஸ்வரனின் நடவடிக்கையை பிடிக்காமல், அவருடன் பழகுவதை அப்பெண் நிறுத்தி விட்டதாக கூறப்படுகிறது.

பெண் வீட்டுக்குச் சென்று தகராறு
எனினும், அந்த பெண்ணை விக்னேஸ்வரன் பின் தொடர்ந்ததோடு, அவரை காதலிப்பதாகக் கூறி, அந்த பெண்ணின் வீட்டுக்கே சென்று தகராறிலும் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து, அப்பெண் வீட்டார் மயிலாடுதுறை போலீஸில் 2 முறை புகார் அளித்துள்ளனர். இதுதொடர்பாக மயிலாடுதுறை போலீஸார், இருதரப்பினரையும் அழைத்து பேசி, இனிமேல் அப்பெண்ணை தொந்தரவு செய்யக்கூடாது என விக்னேஸ்வரனிடம் எழுதி வாங்கிக்கொண்டு அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.

இளம் பெண் கடத்தல் முயற்சி - புகார்
இதனால் ஆத்திரமடைந்த விக்னேஸ்வரன், அப்பெண்ணை கடத்த முயற்சித்துள்ளார். கடந்த ஜூலை 12-ஆம் தேதி கடத்தியபோது, அவரிடமிருந்து தப்பித்த இளம்பெண், இதுகுறித்து மயிலாடுதுறை போலீஸில் மீண்டும் புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக, வீடுபுகுந்து பெண்ணிடம் தவறாக நடக்க முயற்சித்து, கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளில் மயிலாடுதுறை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விக்னேஸ்வரனை தேடி வந்தனர்.

கதற தகற இளம் பெண் கடத்தல்
இந்நிலையில், நேற்று இரவு, கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் பயங்கர ஆயுதங்களுடன் வந்த விக்னேஸ்வரன் மற்றும் அவரது கூட்டாளிகள், அப்பெண்ணின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து, வலுக்கட்டாயமாக கதறகதற அவரை தூக்கிச் சென்றுள்ளனர். திரைப்படத்தையே விஞ்சும் இந்தப் பரபரப்பான காட்சிகள், அங்குள்ள வீட்டில் இருந்த சிசிடிவி பதிவுகளில் பதிவாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

காவல்துறை தீவிர விசாரணை
இதுகுறித்து, தகவலறிந்த மயிலாடுதுறை டிஎஸ்பி வசந்தராஜ் தலைமையிலான போலீஸார், கடத்தப்பட்ட வீட்டிற்குச் சென்று விசாரணை நடத்தினர். மேலும், வீட்டில் இருந்த சிசிடிவி பதிவுகளை கைப்பற்றி பெண்ணைக் கடத்திய நபர்களை தேடி வந்தனர். மேலும், இந்த கடத்தல் சம்பவத்தையடுத்து மாவட்டம் முழுவதும் உள்ள போலீஸார் உஷார்படுத்தப்பட்டனர்.

இளம் பெண்ணை மீட்ட போலீசார்
இளம்பெண்ணை கடத்திச் சென்ற கும்பலை, விழுப்புரம் விக்ரவாண்டி டோல்கேட் அருகே போலீசார் மடக்கி பிடித்தனர். பின்னர், காரில் கடத்தப்பட்ட இளம் பெண்ணையும் பாதுகாப்பாக மீட்டனர். மேலும் பெண்ணை கடத்திச் சென்ற விக்னேஸ்வரன் மற்றும் அவரது கூட்டாளிகளான மயிலாடுதுறையை சேர்ந்த சுபாஷ் சந்திரபோஸ், விழுப்புரத்தை சேர்ந்த செல்வகுமார் ஆகிய மூன்று பேரை கைது செய்த போலீசார் கைது சென்றனர்.
திரைப்படத்தை விஞ்சும் அளவுக்கு வீடு புகுந்து இளம்பெண் கடத்தப்பட்ட சம்பவம், மயிலாடுதுறை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications