போலீஸ் சீருடையில் பாஜகவில் ஐக்கியம்! நாகையில் 2 ஏஎஸ்ஐக்கள் அதிரடி சஸ்பெண்ட்.. யார் இவர்கள் தெரியுமா
நாகப்பட்டினம்: அண்ணாமலையின் ‛என் மண் - என் மக்கள்' யாத்திரையின்போது போலீஸ் சீருடையில் பாஜகவில் இணைந்த நாகப்பட்டின மாவட்டத்தை சேர்ந்த 2 ஏஎஸ்ஐக்களை அதிரடியாக சஸ்பெண்ட் செய்து தஞ்சை சரக டிஐஜி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தமிழகத்தில் அதிக இடங்களை வெல்லும் முனைப்பில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ‛என் மண் என் மக்கள்' என்ற பெயரில் யாத்திரையை தொடங்கி உள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இந்த யாத்திரை தொடங்கி தென்மாவட்டங்கள், கொங்கு மாவட்டங்களில் நிறைவு பெற்றது. தற்போது டெல்டா மாவட்டங்களில் இந்த யாத்திரை நடந்து வருகிறது. இந்த யாத்திரையின்பாது பாஜகவுக்கு உறுப்பினர் சேர்க்கையும் நடந்து வருகிறது.
இந்நிலையில் தான் கடந்த மாதம் 27 ம் தேதி நாகையில் ‛என் மண் என் மக்கள்' பாதயாத்திரை என்பது நடந்தது. அப்போது தற்காலிகமாக கூடாரம் அமைத்து பாஜகவுக்கு உறுப்பினர் சேர்க்கை என்பது நடந்தது. அப்போது யாத்திரையின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட வெளிப்பாளையம் காவல் நிலையத்தில் ஏஎஸ்ஐக்கள் ராஜேந்திரன், கார்த்திகேயன் ஆகியோர் போலீஸ் சீருடையில் பாஜகவில் இணைந்ததாக கூறப்படுகிறது.
இதுதொடர்பான வீடியோ என்பது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து இருவரையும் உடனடியாக ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து நாகை மாவட்ட எஸ்பி ஹர்ஷ் சிங் அதிரடியாக உத்தரவிட்டார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணையின்போது இருவரும் போலீஸ் சீருடையில் பாஜகவில் இணைந்தது உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில் தான் தஞ்சை சரக டிஐஜி ஜெயச்சந்திரன் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். அதன்படி பாஜகவில் இணைந்த ஏஎஸ்ஐக்களான ராஜேந்திரன் மற்றும் கார்த்திகேயன் ஆகியோர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். பொதுவாக போலீஸ் சீருடையில் இருக்கும்போது கட்சி சார்ந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்க கூடாது. ஆனால் இவர்கள் 2 பேரும் அதனை மீறி பாஜகவில் தங்களை இணைத்து கொண்ட வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications