அய்யா வைகுண்டர் 187வது அவதார தினம்.. குமரி மாவட்டத்தில் இன்று விடுமுறை
Recommended Video

நாகர்கோவில்: அய்யா வைகுண்டரின் 187 ஆவது அவதார தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் அய்யா வழி அன்புகொடி மக்கள் கலந்து கொண்ட பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது.
அய்யாவின் அகில திரட்டு நூல்கள் அடங்கிய பூப்பல்லாக்கு முன் செல்ல முத்துக்குடைகள் ஏந்தியும் மற்றும் சிறுமிகளின் கோலாட்டம், கிராமிய நடனம் உள்ளிட்ட கலை நிகக்ச்சிகளுடன் நடைபெற்ற இந்த பேரணியில் குமரி, நெல்லை, தூத்துக்குடி, மதுரை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் மற்றும் கேரளாவை சேர்ந்தவர்கள் என நாற்பதாயிரத்திற்கும் மேற்பட்ட அய்யா வழி அன்பு கொடி மக்கள் கலந்து கொண்டனர்.

சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடியவர் அய்யா வைகுண்டர். சிவன் பிரம்மா விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகள் ஒருங்கிணைந்த அவதாரமாக அய்யா வைகுண்டரை அவர் வழியை பின்பற்றும் மக்கள் பார்க்கின்றனர். அதன் படி அவர் அவதரித்த நாளான மாசி மாதம் 20-ம் தேதி அய்யா வைகுண்டரின் அவதார தினவிழாவாக 'அய்யா வழி சமூகத்தினர் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.
அதன் படி அய்யா வைகுண்டரின் 187-வது அவதார தின விழா இன்று கொண்டாடப்பட்டது. அய்யா வைகுண்டரின் 187-வது அவதார தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நடைபெற்ற பிரமாண்ட ஊர்வலத்தில் நாற்பதாயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பாதயாத்திரையாக சுவாமி தோப்பு நோக்கி சென்றனர். பேரணியையொட்டி நேற்று முதலே நெல்லை, துாத்துக்குடி, உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கேரளாவில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நாகர்கோவில் வந்தனர்.
தொடர்ந்து இன்று காலை நாகர்கோவில் நாகராஜா திடலில் இருந்து சுவாமி தோப்பு நோக்கி அய்யா அவதார தின விழா பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது. முன்பாக அய்யாவின் 'அகில திரட்டு' புத்தகத்தை, காவிக்கொடி பக்தர்கள் பூப்பல்லக்கில் எடுத்து சென்றனர். கோட்டார், இடலாக்குடி, சுசீந்திரம், தென்தாமரை குளம் வழியாக சென்று சுவாமித்தோப்பு சென்றடைந்த இந்த பேரணியில் முத்துக்குடைகள், பலதரப்பட்ட மேள தாளஹ்கள், உள்ளிட்ட பல்வேறு பாரம்பரிய களைநிகழ்ச்சிகளும் இடம் பெற்று இருந்தன.
இந்த பேரணியில் இடம் பெற்று இருந்த குழந்தைகளின் கோலாட்டம் வழி நெடுகிலும் கூடி இருந்த பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. வைகுண்டர் பிறந்த நாளில், சுவாமித்தோப்புக்கு நடந்து சென்று அய்யாவை வழிபட்டால் நினைப்பது நிறைவேறும், சகல செல்வங்களும் கிடைக்கும் என்பது தங்களின் நம்பிக்கை என தெரிவித்த பக்தர்கள் சிவராத்திரி தினத்தில் அய்யா வைகுண்டர் அவதார தினம் வருவது கூடுதல் சிறப்பு என தெரிவித்தனர்.
அய்யா வைகுண்டர் அவதார தின பேரணியை முன்னிட்டு நாகர்கோவில் முதல் சுவாமி தோப்பு வரையிலான போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. பேரணி நடைபெறும் பகுதிகளில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணிகள் பலப்படுத்தப்பட்டு இருந்தது. அய்யா வைகுண்டர் அவதார தினத்தை முன்னிட்டு குமரி, நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களுக்கு இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications