"ஸ்டாலினின் குட்புக்".. ஒற்றை ஆளாக பாஜக கோட்டையை தகர்த்த திமுக "மகேஷ்".. நாகர்கோவிலை வென்றது எப்படி?
நாகர்கோவில்: பாஜக கோட்டையாக கருதப்பட்ட.. பாஜகவின் வலிமையாக கருதப்பட்ட நாகர்கோவில் மாநகராட்சியை திமுக கைப்பற்றி உள்ளது. இதனால் நாகர்கோவிலின் முதல் மாநகராட்சி மேயர் பதிவு திமுக கூட்டணி நாகர்கோவிலில் அலங்கரிக்க உள்ளது.
கடந்த 2019ல் நாகர்கோவில் நகராட்சி மாநகராட்சியாக அதிமுக ஆட்சியின் கீழ் உருவாக்கப்பட்டது. அதற்கு முன் இரண்டு முறை வரிசையாக நகராட்சியை பாஜகதான் கைப்பற்றியது,
கன்னியாகுமரியில் எம்பியாக பாஜகவின் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இருந்த வரை அங்கு பாஜக மிக வலிமையாக இருந்தது.

நாகர்கோவில்
தமிழ்நாட்டிற்கு பாஜக பயன்படுத்தும் நுழைவாயிலாகவே நாகர்கோவில் பயன்படுத்தப்பட்டது. நாகர்கோவில் வழியாக தென் மாவட்டங்களை கொஞ்சம் கொஞ்சமாக மீட்க பாஜக திட்டமிட்டு வந்தது. இப்படிப்பட்ட நேரத்தில்தான் சமீபத்தில் அரியலூர் மாணவி மரணம், மத மாற்ற புகார், ஹிஜாப் சர்ச்சை என்று பல விஷயங்களை பாஜக இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பயன்படுத்தியது. ஆர்எஸ்எஸ் வலுவாக இருக்கும் கன்னியாகுமரி மாவட்டத்தில் பாஜகவிற்கு இது பெரிய உதவியாக இருக்கும் என்றே கணிக்கப்பட்டது.

நாகர்கோவில் பாஜக
ஆனால் பாஜக கொஞ்சமும் எதிர்பார்க்காத வகையில் இருந்த இடத்தையும் இழந்துவிட்டு மோசமான தோல்வியை தழுவி உள்ளது. இங்கு இருந்த சிறுபான்மையினர் வாக்குகளை மொத்தமாக பாஜகவிற்கு எதிராக திரும்பி உள்ளதாகவே தெரிகிறது. அதாவது பாஜகவின் ஹிஜாப் மற்றும் மதமாற்ற வியூகம் அக்கட்சிக்கே எதிராகி உள்ளது. இந்த முறை மாநகராட்சியான நாகர்கோவிலில் உள்ள 52 வார்டுகளில் 25ஐ திமுக தனியாக கைப்பற்றி உள்ளது. காங்கிரஸ் 7 வார்டுகளில் வெற்றிபெற்றுள்ளது.

மேயர் பதவி
இதற்கு முன் நாகர்கோவில் நகராட்சியை 2 முறை கைப்பற்றிய பாஜக இப்போது நாகர்கோவில் மாநகராட்சியான பின் சந்தித்த முதல் தேர்தலில் தோல்வி அடைந்துள்ளது. இங்கு இருந்த 52 நகராட்சி வார்டுகள் மறுசீரமைப்பு செய்யப்பட்டு அப்படியே மாநகராட்சி வார்டுகளாக மாற்றப்பட்டது. பெரிதாக வார்டுகளில் மாற்றம் எதுவும் இல்லை என்றாலும் இங்கு பாஜக தோல்வி அடைந்து திமுக வென்றுள்ளது. இந்த முறை நாகர்கோவில் மாநகராட்சி தேர்தலில் பாஜக 11 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

திமுக கைப்பற்றியது
அதிமுக 7-ல் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் நாகர்கோவில் முதல் மேயர் பதவியை திமுக கைப்பற்றி உள்ளது. இங்கு பாஜக சார்பாக மீனாதேவ் மேயராக முன்னிறுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இப்படிப்பட்ட நிலையில் பாஜக தோல்வி அடைந்துள்ளது. இவர் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனின் ஆதரவு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இன்னொரு பக்கம் தி.மு.க-வில் மாநகர செயலாளர் மகேஷ் தற்போது மேயர் ஆகும் சூழ்நிலைகள் ஏற்பட்டுள்ளன.

யார் இவர்?
அமைச்சர் மனோதங்கராஜ் தொடக்கத்தில் இருந்து மகேஷை இந்த பதவிக்கு முன்னிறுத்தி வருகிறார். அமைச்சர் மனோதங்கராஜூக்கு நெருக்கமான மகேஷ் தனியாளாக தீவிரமாக தேர்தல் பணிகளை செய்தார். திமுக மேலிட தலைமை பெரிதாக நேரடியாக நாகர்கோவிலில் கவனம் செலுத்தாத நிலையிலும் மகேஷ் இந்த சாதனையை செய்து இருக்கிறார். இதனால் இவருக்கே மேயர் பதவி வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்டாலின் குட் புக்
அதிலும் முதல்வர் ஸ்டாலினின் குட் புக்கில் இவர் இருக்கிறார். சிறந்த மாநகரச் செயலாளர் என்னும் விருதை முதல்வர் ஸ்டாலினிடம் பெற்றவர். நன்றாக செயல்படுகிறீர்கள், கட்சியை நன்றாக வளர்த்து உள்ளீர்கள் என்று ஸ்டாலினே இவரை பாராட்டி இருக்கிறார். இப்படிப்பட்ட நிலையில்தான் பாஜகவின் கோட்டையாக இருக்கும், திமுகவிற்கு பெரிய வாய்ப்பு இல்லை என்று கருதப்பட்ட மாநகராட்சியை மகேஷ் தட்டி தூக்கி உள்ளார்.












Click it and Unblock the Notifications