கோரிக்கை மனுக்களுடன் அலைந்தது நாங்கள்! கொடியசைப்பது எல்.முருகனா? கொதிக்கும் நாமக்கல் திமுகவினர்!
நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ரயில் நிலையத்தில் புதிதாக 3 ரயில்கள் நின்று செல்லும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ள நிலையில் அதற்கான கொடியசைப்பு நிகழ்வில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கலந்து கொள்ளவிருக்கிறார்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை பொறுத்தவரை கொல்லிமலை சுற்றுலா தலத்திற்கு செல்வதற்கான முக்கிய ஜங்சனக விளங்குகிறது. அதேபோல் ராசிபுரம் பகுதியை சுற்றிலும் நெய், பட்டு, சேகோ மற்றும் கோழிப்பண்ணை தொழில்களும் அதிகம் நடைபெறுகின்றன.

இதனால் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் இந்தப் பகுதிக்கு வியாபாரம் நிமித்தமாக அதிகளவில் வந்து செல்கின்றனர். இந்தச் சூழலில் ராசிபுரம் ரயில் நிலையத்தில் சென்னை பழனி எக்ஸ்பிரஸ், நாகர்கோயில் பெங்களூர் எக்ஸ்பிரஸ், தாதர் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில்கள் நின்று செல்ல வேண்டும் என திமுக எம்.பி.யும், நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுகச் செயலாளருமான ராஜேஷ்குமார் தென்னக ரயில்வேயின் உயர் அதிகாரிகளை பலமுறை நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களை கொடுத்திருக்கிறார்.
திமுக எம்.பி. ராஜேஷ்குமார் தொடர்ச்சியாக முன்னெடுத்த முயற்சியின் காரணமாக ராசிபுரத்தில் மூன்று ரயில்கள் நின்று செல்லும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் வாராந்தர இரயில் ராசிபுரம் வழித்தடத்தில் வாரம் ஒருமுறை காலை 11.58 மணிக்கு நின்று செல்லும் எனவும் சனிக்கிழமை காலை திருப்பதி செல்வதற்கு காலை 5.50 மணிக்கு நின்று செல்லும்.
சென்னை - பாலக்காடு எக்ஸ்பிரஸ் இரயில் பழனி வழியாக ராசிபுரத்தில் காலை 3.27 மணிக்கு நின்று செல்லும்.
நாகர்கோயில் - பெங்களுர் செல்லும் இரயில் காலை 3.31 மணிக்கு ராசிபுரத்தில் நின்று செல்லும் என தென்னக இரயில்வே அறிவித்துள்ளது.இந்த அறிவிப்பானது 06.07.2023 முதல் அமலுக்கு வருகிறது. இதனிடையே இதற்கான நிகழ்வில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கலந்துகொள்ளவிருக்கிறார்.
இதனிடையே கோரிக்கை மனுக்களுடன் அலைந்தது நாங்கள்! கொடியசைப்பது எல்.முருகனா? என நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் ஆதங்கம் தெரிவிக்கிறார்கள். ராசிபுரத்தில் ரயில் நின்று செல்ல வேண்டும் என்பதற்கான முயற்சிகளை எடுத்தது அனைத்தும் திமுக எம்.பி. ராஜேஷ்குமார் என்றும் ஆனால் பாஜக இதில் ஸ்கோர் செய்வதா எனவும் கேள்வி எழுப்புகின்றனர்.
புரோட்டகால் படி தமிழகத்துக்கான மத்திய இணை அமைச்சர் என்ற முறையில் எல்.முருகன் கலந்துகொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அண்மையில் கூட போடி -சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் தொடக்க விழாவில் அவர் கலந்துகொண்டார்.












Click it and Unblock the Notifications