நாமக்கல் அருகே நடந்த கொடூரம்.. தோட்டத்து வீட்டில் மூதாட்டி படுகொலை! கொலையாளிகளை பிடிக்க 8 தனிப்படை
நாமக்கல்: நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூா் அருகே தோட்டத்து வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை மர்ம நபா்கள் வெட்டிக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அதுகுறித்து போலீசார் 8 தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அடுத்துள்ள சித்தம்பூண்டி கிராமம் குளத்துப்பாளையம் பகுதியை சேர்ந்த சாமியாத்தாள் என்ற 67 வயது மூதாட்டி, விவசாயம் செய்து கொண்டு தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்தார்.

சாமியாத்தாளுக்கு கிருஷ்ணமூா்த்தி என்ற மகனும், கிருஷ்ணவேணி என்ற மகளும் உள்ளனர். கிருஷ்ணமூா்த்தி பணி காரணமாக குடும்பத்துடன் கோவையில் தங்கியுள்ளார். கிருஷ்ணவேணி திருமணமாகி மணியனூரில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் சனிக்கிழமை இரவு வீட்டின் வெளியே கட்டிலில் அவர் தூங்கி கொண்டிருந்த போது நள்ளிரவில் அங்கு வந்த மர்ம நபர்கள் நகை, பணத்தை கேட்டு மிரட்டி உள்ளனர். அவர் கூச்சலிட்டதால் கத்தியால் கழுத்து, வாய், முகத்தில் சரமாரியாக குத்திவிட்டு மர்ம நபர்கள் தப்பி ஓடியுள்ளனர். இதையடுத்து ரத்த வெள்ளத்தில் மூதாட்டி சாமியாத்தாள் சரிந்துள்ளார்.
எனினும் பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு போன் செய்துள்ளார். ஆனால் அவரால் பேச முடியவில்லை. அவர்கள் சந்தேகமடைந்து வந்து பார்த்துள்ளனர். அப்போதுதான் மூதாட்டி ரத்த வெள்ளத்தில் கிடந்ததைப் பார்த்து அதிர்ந்து போயுள்ளனர்.
சாமியாத்தாள் ரத்த வெள்ளத்தில் கிடப்பதாக அவரது வீட்டுக்கு அருகே வசித்து வரும் குழந்தைவேல் நல்லூா் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து, அங்கு வந்த நல்லூா் போலீசார் சாமியாத்தாளை மீட்டு ஈரோட்டில் உள்ள தனியாா் மருத்துவமனையில் முதலுதவி அளித்தனர்.
பின்னா் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், சிகிச்சை பலனின்றி சாமியாத்தாள் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த சேலம் சரக டிஐஜி உமா, நாமக்கல் காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ்கண்ணன், பரமத்தி வேலூர் காவல் துணை கண்காணிப்பாளா் சங்கீதா ஆகியோர் அப்பகுதியில் விசாரணை நடத்தினார்.
மேலும் கைரேகை நிபுணா்கள், தடய அறிவியல் நிபுணா்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. மேலும், அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து மர்ம நபா்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா். பரமத்தி வேலூர் காவல் துணை கண்காணிப்பாளர் தலைமையில் 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொலையில் தொடா்புடைய மர்ம நபா்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications
