வீட்டு வரி ரசீது.. ரூ.1.25 கோடி வீட்டின் மின் இணைப்புக்கு இப்படியொரு வேலை? நாமக்கல்லில் என்ன நடந்தது
நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் வீட்டு வரி ரசீதை இப்படிக்கூட யாராவது செய்வார்களா? ரூ.1.25 கோடியில் புதுசா வீடு கட்டிய ஒருவர், மின் இணைப்பு பெற வீட்டு வரி ரசீது இல்லாமல் தவித்திருக்கிறார். கடைசியில் அவரே ஒரு ரசீதை தயாரிக்க முடிவு செய்துவிட்டார்.. ஆனால், அந்த ரசீதை அதிகாரிகள் பார்த்தபோதுதான் அடுத்தடுத்து நடந்த விஷயங்கள் வெளியில் வந்திருக்கிறது...!!
ஒரு வீட்டுக்கு வரி செலுத்திய பிறகு நமக்கு கிடைக்கும் முக்கியமான ஆவணம்தான் வீட்டு வரி ரசீது... மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி போன்ற உள்ளாட்சி அமைப்புகளுக்கு வீட்டுக்கான வரியை செலுத்தியிருக்கிறோம் என்பதற்கான ஆதாரமாக இந்த ரசீது தரப்படுகிறது.

வீட்டு வரி ரசீது அவசியம்
வீட்டின் விவரம், வரி செலுத்திய காலம், செலுத்திய தொகை உள்ளிட்ட தகவல்கள் அதில் இருக்கும். வீடு தொடர்பான சில அரசு பணிகள், சொத்து தொடர்பான நடைமுறைகள், மின் இணைப்பு பெறுவது போன்ற தேவைகளிலும் இந்த ரசீது கேட்கப்படலாம். அதனால்தான் வீட்டு வரியை செலுத்திய பிறகு கிடைக்கும் ரசீதை பலரும் பத்திரமாக வைத்திருப்பார்கள்..
ஒரு வீட்டுக்கு முறையாக வரி செலுத்தப்பட்டிருக்கிறது என்பதைக் காட்டுவதோடு, அந்த சொத்து தொடர்பான அரசு பதிவுகளிலும் இது முக்கியமான ஆவணமாக இருக்கும். ஆனால், நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டையில் இந்த வீட்டு வரி ரசீது விவகாரமே ஒரு நபருக்கு பெரிய சிக்கலை கொண்டு வந்துள்ளது.
நாமக்கல் சத்தீஸ்வரன்
நாமகிரிப்பேட்டை அய்யாசாமி தோட்டத்தைச் சேர்ந்தவர் சத்தீஸ்வரன். 58 வயதாகும் இவர், சுமார் ரூ.1.25 கோடி மதிப்பில் புதிதாக வீடு ஒன்றை கட்டியுள்ளார். இந்த வீட்டுக்கு மின் இணைப்பு பெறுவதற்காக அவர் விண்ணப்பிக்க வேண்டியிருந்தது. ஆனால், அதற்கு தேவையான வீட்டு வரி ரசீது அவரிடம் இல்லை...
இதனால் என்ன செய்வது என்று யோசித்த சத்தீஸ்வரன், போலியாக வீட்டு வரி ரசீது ஒன்றை, தானே தயாரித்து விடுவது என முடிவெடுத்தர்.. அந்த ரசீதை மின்வாரிய அலுவலகத்தில் சமர்ப்பித்து, ஏற்கனவே இருந்த தற்காலிக மின் இணைப்பை வீட்டு பயன்பாட்டுக்கான மின் இணைப்பாகவும் மாற்றிக் கொண்டார்..
இதனிடையே, சத்தீஸ்வரன் போலி வரி ரசீது தயாரித்து மின் இணைப்பு பெற்றதாக புகார் எழுந்தது... இதனால், மின்வாரிய அதிகாரிகளும் உடனடியாக விசாரணையை நடத்தினார்கள்.. அப்போது அந்த ஆவணம் போலி என்பது உறுதியானது, அத்துடன் ஆவணத்தின் உண்மைத்தன்மையை முழுமையாக சரிபார்க்கும் வகையில், நாமகிரிப்பேட்டை டவுன் பஞ்சாயத்து செயல் அலுவலர் ஆறுமுகம், ரசீதை ஆய்வு செய்தார்.
நாமகிரிப்பேட்டை போலி ஆவணம்
அதில், டவுன் பஞ்சாயத்து நிர்வாகத்தின் அரசு முத்திரை மற்றும் அதிகாரியின் கையெழுத்தை போலியாக போட்டு மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டுது.. அதாவது, சாதாரணமாக கிடைக்க வேண்டிய ஒரு வீட்டு வரி ரசீது இல்லாததால், அதை போலியாக தயாரித்து அரசு ஆவணம் போல பயன்படுத்தியதும் அம்பலமானது.
இதையடுத்து செயல் அலுவலர் ஆறுமுகம், நேற்று நாமகிரிப்பேட்டை போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். அரசு முத்திரையை முறைகேடாக பயன்படுத்தி போலி ஆவணம் தயாரித்த சத்தீஸ்வரன் மற்றும் அவருக்கு உடந்தையாக செயல்பட்டவர்கள் மீது உரிய விசாரணை நடத்தி, குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனடிப்படையில் நாமகிரிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்திருக்கிறார்கள்.. இந்த சம்பவத்துக்குப் பிறகு சத்தீஸ்வரன் தலைமறைவாகியுள்ளதாக கூறப்படும் நிலையில், அவரை இப்போது போலீசார் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.. ஒரு வீட்டுக்கு தேவையான ஆவணமாக இருக்கும் வீட்டு வரி ரசீது, இப்படியொரு போலீஸ் வழக்காக மாறியிருப்பதுதான் இந்த சம்பவத்தின் ஹைலைட்டாகும்...!!


Click it and Unblock the Notifications
