ஒரே ஒரு திருமண ஊர்வலம்.. ஒட்டுமொத்த வால் ஸ்ட்ரீட்டை முடக்கிய இந்தியர்கள்.. ஒரு நொடி ஸ்டன் ஆன அமெரிக்கர்கள்! வீடியோ
நியூயார்க்: ஒட்டுமொத்த அமெரிக்காவும் வியக்கும் வகையில் அங்கு இந்தியத் தம்பதி ஒருவரின் திருமணம் நடந்துள்ளது. அமெரிக்கப் பொருளாதார மையமாகக் கருதப்படும் புகழ்பெற்ற வால் ஸ்ட்ரீட்டில் திருமண ஊர்வலம் நடந்த நிலையில், அதில் சுமார் 400 பேர் பங்கேற்று ஆட்டம் போட்டனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
இந்தியக் கலாச்சாரத்தில் திருமணங்களுக்கு எப்போதும் மிக முக்கியமான ஒரு பங்கு இருக்கிறது. கொண்டாட்டங்கள் நிறைந்த ஒன்றாகவே திருமணங்கள் இருக்கும். சில பகுதிகளில் நடைபெறும் திருமணங்கள் சில நாட்கள் வரை நீடிக்கும். ஒவ்வொரு நாளும் ஒரு சடங்கு கொண்டாட்டம் என உற்சாகமாகவே இருக்கும்.

திருமண ஊர்வலம்
மணமகன், மணமகள் ஊர்வலங்களின் போது தெரு முழுக்க சொந்த பந்தங்களே இருப்பர். ஊர்வலத்தில் ஆட்டம் பாட்டத்திற்கும் ஒரு முக்கியமான இடம் இருக்கும். ஊர் முழுக்க இதுபோலத் தான் ஆட்டம் பாட்டத்தோடு சுற்றி வருவார்கள். இந்த காட்சிகளைப் பார்க்கவே அவ்வளவு அழகாக இருக்கும். இருப்பினும், வெளிநாட்டில் செட்டிலாகும் இந்தியர்களால் இதுபோன்ற திருமணங்கள் செய்ய முடிவதில்லை என்ற வேதனை இருக்கவே செய்கிறது.
அதிலும் குறிப்பாக இந்த காலத்தில் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்று செட்டிலாகும் இந்தியர்கள் எண்ணிக்கை அதிகரித்தே வருகிறது. இந்திய வம்சாவளியைக் கொண்டவர்களின் எண்ணிக்கையும் இந்த நாடுகளில் அதிகரித்து வருகிறது. அவர்கள் அங்கேயே திருமணம் செய்யும் போது, இதுபோன்ற இந்திய கலாச்சாரங்களை மிஸ் செய்கிறார்கள். ஆன்லைனில் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் பலரும் இது குறித்துப் புலம்புவதை நாம் பார்த்திருக்கிறோம்.
நியூயார்க்கில் களைக்கட்டிய திருமணம்
ஆனால், இங்கு அமெரிக்காவின் நியூயார்க்கில் நடந்த ஒரு இந்தியத் திருமணம் ஒட்டுமொத்த உலகையும் வியக்க வைத்துள்ளது. அமெரிக்கப் பொருளாதாரத்தின் மையமாகக் கருதப்படும் புகழ்பெற்ற வால் ஸ்ட்ரீட்டில் இந்த திருமணத்திற்காக ஒரு பிரம்மாண்ட ஊர்வலத்தையே நடத்தியுள்ளனர். இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் இப்போது தீயாகப் பரவி வருகிறது.
400 பேர் ஊர்வலம்
லோயர் மன்ஹாட்டனின் நடந்த இந்த மணமகனின் திருமண ஊர்வலத்தில் பங்கேற்ற சுமார் 400க்கும் மேற்பட்டோர் வால் ஸ்ட்ரீட் உள்ளிட்ட தெருக்களில் ஊர்வலமாகச் சென்று நடனமாடும் வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. பாரம்பரிய இந்திய உடை அணிந்திருந்த இவர்கள், டிஜே பாடல் போட பயங்கரமாக டான்ஸ் ஆடிக் கொண்டே சென்றனர். டிஜே ஒரு வண்டியில் அமர்ந்து கொண்டு பாடல்களைப் போட உற்சாகத்தில் ஊர்வலத்தில் இருந்த அனைவரும் ஆட்டம் போட்டனர்.
முடங்கிய வால் ஸ்ட்ரீட்
இந்த ஊர்வலம் வால் ஸ்ட்ரீட்டை இந்தியத் திருமணம் நடக்கும் இடத்தை போலவே மாற்றிவிட்டது. இந்த ஊர்வலத்தில் தெறிக்கவிடும் இசைகளை மும்பையைச் சேர்ந்த டிஜே ஏஜே என்பவர் போட்டிருக்கிறார். 400 பேர் பங்கேற்ற இந்த ஊர்வலத்திற்காக வால் ஸ்டீர்ட்டே கொஞ்ச நேரம் முடங்கி விட்டதாகவும் இதெல்லாம் வாழ்நாளில் ஒரே ஒரு முறை மட்டுமே நடக்கும் மேஜிக் என அவர் பதிவிட்டிருக்கிறார்.
இதில் மணமகன், மணமகளையும் தூக்கி வைத்துக் கொண்டு ஆட்டம் போட்டனர். இதை அங்கிருந்த அமெரிக்கர்கள் வியப்போடு பார்த்தனர்.. பலர் தங்கள் செல்போனிலும் வீடியோ எடுத்து வைத்துக் கொண்டனர். அமெரிக்காவின் நிதி மையமாகக் கருதப்படும் வால் ஸ்ட்ரீட்டில் இப்படி ஆட்டம் பாட்டத்தோடு நடந்த திருமணம் கிட்டதட்ட சினிமாவில் வருவது போல இருந்தது என்றே தாராளமாகச் சொல்லலாம்.












Click it and Unblock the Notifications