இதெல்லாம் எதிர்பார்க்காத ட்விஸ்ட்.. இந்தியாவிற்காக அமெரிக்காவுடன் மோதும் சீனா.. மிரண்ட டிரம்ப்
நியூயார்க்: அமெரிக்கா இந்தியா மீது விதித்துள்ள 50% இறக்குமதி வரிகளுக்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கை நியாயமற்றது, மோசமானது என்றும், இதை பெய்ஜிங் உறுதியாக எதிர்க்கிறது என்றும் சீனா தெரிவித்து உள்ளது.
இந்தியாவிற்கான சீனத் தூதர் ஸு ஃபெய்போங், அமெரிக்கா நீண்ட காலமாக சுதந்திர வர்த்தகத்தைப் பயன்படுத்தி வந்தது, இதனால் பலனும் அடைந்தது, சுதந்திர வர்த்தகம் அமெரிக்காவின் ஒரு பாகமாக இருந்தது. ஆனால் இப்போது அதை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்துவதாகவும் கூறினார்.
இந்தியா டிரம்ப் வரி
ஆகஸ்ட் 27 முதல் இந்தியா மீது டிரம்ப் 25% பரஸ்பர வரிகளையும், ரஷ்ய எண்ணெய் கொள்முதல் செய்ததற்காக இந்தியா மீது கூடுதலாக 25% வரிகளையும் விதித்துள்ளார். இதனால் இந்தியா மீதான மொத்த வரிகள் 50% ஆக உயர்ந்துள்ளது. டிரம்ப் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 50% கூடுதல் வரி விதிக்கும் நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டார். இந்த உத்தரவில், ரஷ்ய எண்ணெயை இந்தியா நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இறக்குமதி செய்வது அமெரிக்காவிற்கு அசாதாரணமான மற்றும் மோசமான அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. தேசிய பாதுகாப்பு, வெளியுறவுக் கொள்கை கவலைகள் மற்றும் பிற வர்த்தக சட்டங்களை மேற்கோள் காட்டி அவர் இந்தியாவிற்கு எதிராக அபராதம் விதித்தார்.

அமெரிக்கா இந்தியா மீது விதித்துள்ள 50% இறக்குமதி வரிகளுக்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. சீன மக்கள் ஜப்பானிய ஆக்கிரமிப்புக்கு எதிரான போரின் வெற்றி மற்றும் உலக பாசிச எதிர்ப்பு போரின் 80வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் கருத்தரங்கில் பேசிய ஸு, "அமெரிக்கா நீண்ட காலமாக சுதந்திர வர்த்தகத்தால் பயனடைந்துள்ளது. ஆனால் இப்போது அது அதிக விலைகளைக் கோருவதற்கு வரிகளை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்துகிறது. இந்தியாவின் மீது 50% வரி விதிப்பது நியாயமற்றது, மோசமானது, அதை சீனா உறுதியாக எதிர்க்கிறது," என்று குறிப்பிட்டார்.
இந்தியா சீனா உறவு முக்கியம்
உலகளாவிய வளர்ச்சிக்கு இந்தியா-சீனா இடையிலான வலுவான உறவுகளின் முக்கியத்துவத்தையும் தூதர் வலியுறுத்தினார். "உலகின் இரண்டு மிக முக்கியமான வளர்ந்து வரும் பொருளாதாரங்களாக, சீனாவும் இந்தியாவும் வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும், மேலும் பரஸ்பர ஆதரவு மற்றும் வெற்றியை பேண வேண்டும். இதைத்தான் அதிபர் ஜி பிரதமர் மோடியிடம் கூறினார். இந்தியா-சீனா ஒத்துழைப்பு 21 ஆம் நூற்றாண்டை ஒரு உண்மையான ஆசிய நூற்றாண்டாக மாற்றும்," என்று ஏ.என்.ஐ செய்தி வெளியிட்டுள்ளது.
இதற்கு இடையே முன்னாள் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன், டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தின் இந்தியக் கொள்கைகளை கடுமையாக விமர்சித்துள்ளார். இந்தியா மீது 50% வரி விதித்ததன் மூலம் அமெரிக்க-இந்தியா உறவுகளை டிரம்ப் பாதித்துவிட்டதாகவும், இது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை ரஷ்யா மற்றும் சீனாவை நோக்கித் தள்ளியுள்ளதாகவும் போல்டன் கூறியுள்ளார்.
முக்கியமாக எஸ்சிஓ கூட்டத்தில் பிரதமர் மோடி - சீன அதிபர் ஜி ஜிங்பிங் - ரஷ்ய அதிபர் புடின் ஆகியோர் ஒன்றாக இருந்தனர். இவர்கள் ஒன்றாக எடுத்த புகைப்படம் பெரிய அளவில் கவனம் பெற்றது. இவர்கள் ஒன்றாக உள்ள புகைப்படம் அமெரிக்க அரசியலை உலுக்கி உள்ளது. உலக அரசியலின் அடுத்த கட்டமாக இது பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவை உலுக்கிய மோடி போட்டோ
எக்ஸ் தளத்தில் இது குறித்து பதிவிட்ட முன்னாள் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன், "வெள்ளை மாளிகை அமெரிக்க-இந்தியா உறவுகளை பல பத்தாண்டுகளுக்குப் பின்னோக்கித் தள்ளிவிட்டது. மோடியை ரஷ்யா மற்றும் சீனாவை நோக்கித் தூண்டியுள்ளது. அமெரிக்கா மற்றும் டொனால்ட் டிரம்ப்பிற்கு மாற்றாக பெய்ஜிங் தன்னைக் காட்டிக்கொண்டுள்ளது," என்று குறிப்பிட்டுள்ளார்.
டிரம்ப் விதித்த வரிகள், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் மேற்கு நாடுகள் இவ்வளவு காலம் மேற்கொண்ட ராஜதந்திர முயற்சிகளை தகர்த்துவிட்டதாக போல்டன் சாடினார். சோவியத் யூனியனுடனான (ரஷ்யா) இந்தியாவின் பனிப்போர் கால உறவை முடிவுக்குக் கொண்டுவரவும், சீனாவின் வளர்ந்து வரும் செல்வாக்கைச் சமாளிக்கவும் மேற்கத்திய நாடுகள் தொடர்ந்து முயற்சித்தன.. ஆனால் அதை எல்லாம் டிரம்ப் இப்போது நாசம் செய்துவிட்டார் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
டிரம்பின் பொருளாதாரக் கொள்கைகள் ராஜதந்திர ரீதியாக இத்தனை காலம் அமெரிக்கா அடைந்த சாதனைகளை பலவீனப்படுத்திவிட்டதாக போல்டன் கூறினார். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) மாநாட்டில், பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் ஆகியோருடன் நட்பு ரீதியான புகைப்படங்கள் எடுத்துக்கொண்டது அமெரிக்காவை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இது புதிய வேர்ல்டு ஆர்டருக்கான தொடக்கமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications