இந்திய மாணவர்களுக்குத்தான் சிக்கல்! டிரம்ப் மூலம் எவ்வளவு இந்தியர்கள் வெளியேற்றப்படுவார்கள் தெரியுமா
நியூயார்க்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தொடங்கியுள்ளார் . இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் இருந்து சட்டவிரோதமாக அமெரிக்கா வந்து குடியேறியவர்களை நாடு கடத்தும் நடவடிக்கை தற்போது நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு கட்டமாக அமெரிக்க ராணுவ விமானம், அமெரிக்காவில் உள்ள 11 மில்லியன் ஆவணமற்ற குடியேறிகளை வெளியேற்ற தொடங்கி உள்ளது.

அதன்படி டெக்சாஸின் சான் அன்டோனியோவில் இருந்து 140+ இந்தியர்களை ஏற்றிக்கொண்டு C-17 விமானம் இன்று அதிகாலை 3 மணியளவில் புறப்பட்டது என்று அந்நாட்டு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நோக்கி இந்த விமானம் வந்து கொண்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதோடு எரிபொருள் நிரப்புவதற்காக ஜெர்மனியின் ராம்ஸ்டீனில் இந்த விமானம் நிறுத்தப்படும் எனத் தெரிகிறது.
இந்த நாடு கடத்தலானது இறுதி கிடையாது.. திட்டமிடப்பட்ட பல நாடு கடத்தல் பிளான்களில் இதுவும் ஒன்று. வரும் நாட்களில் இன்னும் பல இந்தியர்கள் நாடு கடத்தப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.
யாரெல்லாம் அனுப்பப்படுகிறார்கள்:
டிரம்ப் நிர்வாகம் ஆவணமற்ற அல்லது சட்டவிரோதமாக குடியேறியவர்களை மட்டுமே குறிவைக்கிறது. முதல் கட்டமாக முந்தைய ஜோ பிடன் நிர்வாகத்தின் கீழ் கைது செய்யப்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டு உள்ளனர். அடுத்தது புதிய கணக்கெடுப்பின் அடிப்படையில் மக்கள் வெளியேற்றப்படுவார்கள். இதற்காக போர் விமானம், பயணிகள் விமானம் இரண்டும் பயன்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
அடுத்த சில நாட்களில் டெக்சாஸின் எல் பாசோ மற்றும் கலிபோர்னியாவின் சான் டியாகோவிலிருந்து 5,000 க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் நாடு கடத்தப்படுவார்கள் என்று பென்டகன் தெரிவித்துள்ளது. இதுவரை, ராணுவ விமானங்கள் மூலம் குவாட்டமாலா, பெரு மற்றும் ஹோண்டுராஸ் ஆகிய நாடுகளுக்கு மக்கள் நாடு கடத்தப்பட்டனர். இப்போது இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டு வருகின்றனர்.
எத்தனை இந்தியர்கள் வெளியேற்றப்படுவார்கள்:
அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய 20,407 இந்தியர்களை அமெரிக்கா அடையாளம் கண்டுள்ளது.
குறைந்தபட்சம் 20,407 ஆவணமற்ற இந்தியர்கள் இந்த நடவடிக்கையால் பாதிக்கப்படலாம். இவர்களில், 17,940 பேர் முறையான ஆவணங்களற்ற நபர்கள் என்று அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை (DHS) தெரிவித்துள்ளது. 2,467 பேர் தற்போது அமெரிக்க குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கத்தின் (ICE) பிரிவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த புள்ளிவிவரங்கள் கடைசியாக 2022 இல் புதுப்பிக்கப்பட்டன. அடுத்த சில மாதங்களில் இது மீண்டும் புதுப்பிக்கப்படலாம் என்பதால்.. இந்த எண்ணிக்கை வரும் நாட்களில் உயரலாம்.
இந்தியாவில் இருந்து சுமார் 725,000 சட்டவிரோத குடியேறிகள் அமெரிக்காவில் வாழ்கின்றனர், இது மெக்ஸிகோ மற்றும் எல் சால்வடாருக்கு அடுத்தபடியாக அங்கீகரிக்கப்படாத குடியேற்றவாசிகளின் மூன்றாவது பெரிய மக்கள்தொகை ஆகும்.
இதில் மாணவர்கள்தான் அதிகம். அங்கே படிக்க சென்றுவிட்டு விசா காலம் முடிந்தும் இவர்கள் அங்கே அதிகமாக தங்கும் நிலை உள்ளது. இவர்களை கண்டுபிடிப்பது மிகவும் எளிது. இதனால் இவர்கள்தான் அதிக அளவில் நாடு கடத்தப்பட வாய்ப்புகள் உள்ளன. இதனால் அங்கே ஓவர் ஸ்டே செய்யும் இந்திய மாணவர்கள் இடையே பதற்றம் ஏற்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications