வாத்தி ரெய்டு! ட்விட்டர் உள்ளே புகுந்த எலான் மஸ்க்.. அடுத்தடுத்த ஆக்சன்! மீண்டும் வரும் "பழைய" தலை?
நியூயார்க்: ட்விட்டர் நிறுவனத்தின் போர்ட் மெம்பர்களில் ஒருவராக எலான் மஸ்க் இணைந்து இருப்பது மிகப்பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது. அந்த நிறுவனம் இதனால் வரும் நாட்களில் மிகப்பெரிய மாற்றங்களை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Recommended Video
டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் தற்போது ட்விட்டர் நிறுவனத்தின் போர்ட் உறுப்பினர்களில் ஒருவராக இணைந்து உள்ளார். ட்விட்டர் நிறுவனத்தின் 9.2 சதவிகித பங்குகளை மஸ்க் வாங்கினார்.
இதன் மூலம் அந்த நிறுவனத்தில் அதிக பங்கு கொண்டு இருக்கும் தனி நபராக மஸ்க் உருவெடுத்தார். முன்னதாக இந்த நிறுவனத்தில் வான்கார்ட் குழு வைத்திருந்த 8.8 சதவிகித பங்குதான் அதிகபட்ச பங்காக இருந்தது.

ட்விட்டர்
ட்விட்டர் நிறுவனத்தின் நிறுவனர் முன்னாள் சிஇஓ ஜேக் டோர்ஸி கூட 2.2 சதவிகிதம் மட்டுமே ட்விட்டர் நிறுவனத்தில் பங்குகளை வைத்து இருக்கிறார். இந்த நிலையில்தான் அதிக பங்குகளை வைத்து இருக்கும் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தின் போர்ட் மெம்பர் குழுவில் இணைந்து உள்ளார். இனி வரும் நாட்களில் அவர் ட்விட்டர் நிறுவனத்தில் அதிரடி மாற்றங்களை கொண்டு வர முடியும். போர்ட் கூட்டங்களில் அவரின் குரலுக்கு பெரிய அளவில் முக்கியத்துவம் கொடுக்கப்படும்.

ட்விட்டர் எலான் மஸ்க்
ஏற்கனவே ட்விட்டர் செயலியில் மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்று மஸ்க் பலமுறை பேசி இருக்கிறார். ட்விட்டர் நிறுவனம் வெளிப்படையாக இல்லை. கருத்து சுதந்திரத்தை காக்கும் வகையில் ட்விட்டர் செயல்பட வேண்டும். இன்னும் வெளிப்படையாக இருக்க வேண்டும் என்று மஸ்க் கூறி இருந்தார். அதோடு சமீபத்தில் புதிதாக ஒரு சமூக வலைத்தளத்தை கொண்டு வரலாம் என்று யோசிக்கிறேன் என்றும் கூட பேசி இருந்தார்.

எலான் மஸ்க் பிளான்
இந்த நிலையில்தான் புதிய சமூக வலைத்தளத்தை கொண்டு வருவதற்கு பதில் ட்விட்டர் நிறுவனத்தின் பங்குகளை வாங்கி உள்ளார். எதிர்காலத்தில் மொத்தமாக ட்விட்டர் நிறுவனத்தை மஸ்க் கைப்பற்றினால் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. இந்த பங்குகளை மொத்தம் 3 பில்லியன் டாலருக்கு எலான் மஸ்க் வாங்கி இருக்கிறார். இனி இவர் பரிந்துரை செய்யும் மாற்றங்கள் ட்விட்டர் நிறுவனத்தில் செய்யப்படும் வாய்ப்புகள் உள்ளன.

எடிட் பட்டன்
முன்னதாக ட்விட்டர் செயலியில் எடிட் பட்டன் கொண்டு வர வேண்டுமா என்ற கேள்வி ஒன்றை மஸ்க் வைத்து இருந்தார். இந்த கேள்விக்கு கவனமாக பதில் அளிக்கும்படி ட்விட்டர் சிஇஓ பராக் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில்தான் அதிரடி திருப்பமாக இந்த வருட இறுதிக்குள் பெரும்பாலும் ட்விட்டர் செயலியில் எடிட் பட்டன் கொண்டு வரப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் எலான் மஸ்க் நடத்திய poll காரணமாக இந்த வசதியை கொண்டு வரவில்லை.

சிஇஓ பராக்
அதற்கு முன்பில் இருந்தே எடிட் பட்டன் வசதியை சோதனை செய்து வருகிறோம் என்று ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது. ட்விட்டர் நிறுவனத்திற்குள் எலான் மஸ்க் புகுந்த நிலையில் அவர் பல்வேறு மாற்றங்களை கொண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ட்விட்டர் நிறுவனம் அரசியல் சார்புடன் இருப்பதாக பல்வேறு இடங்களில் புகார் வைக்கப்பட்டு இருக்கிறது. உதாரணமாக அமெரிக்காவில் குடியரசு கட்சி மற்றும் டிரம்ப் ஆகியோருக்கு எதிராக ட்விட்டர் செயல்படுவதாக புகார் உள்ளது.

டிரம்ப்
அமெரிக்க அதிபர் தேர்தல் சமயத்தில் நீக்கப்பட்ட டிரம்ப் கணக்கு இன்னும் மீட்கப்படவில்லை. இந்த நிலையில்தான் முன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்ப் கணக்கை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்று மஸ்க்கிடம் டிரம்ப் ஆதரவாளர்கள் கோரிக்கை வைக்க தொடங்கி உள்ளனர். மஸ்க் பெரும்பாலும் இதற்கு அனுமதி அளிக்க வாய்ப்பு உள்ளதாகவே தோன்றுகிறது. மீண்டும் "பழைய தலை" டிரம்ப் ட்விட்டரில் வலம் வர நிறைய வாய்ப்புகள் உள்ளன.

கருத்துரிமை
பொதுவாக free speech எனப்டும் கருத்துரிமைக்கு ஆதரவாக பேச கூடியவர் மஸ்க். முன்னதாக உக்ரைனுக்கு இணையத்தை வழங்க மஸ்க் தனது ஸ்டார் லிங்க் சாட்டிலைட்டுகளை அனுப்பினார். அதே சமயம் ரஷ்யாவின் சேனல்களை தடை செய்ய மாட்டேன் என்றும் அவர் குறிப்பிட்டு இருந்தார். எதிரி நாடாக இருந்தாலும் கருத்துரிமை முக்கியம் என்பதால் அவர் இப்படி பேசி இருந்தார். சமீபத்தில் ட்விட்டர் நிறுவனத்தின் கருத்துரிமை ஒடுக்குதலை மஸ்க் விமர்சனம் செய்த நிலையில், அவரின் இந்த வருகை அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications