ரியல் எஸ்டேட் பிசினஸ் மேன் டூ அமெரிக்க அதிபர்! யார் இந்த டொனால்ட் டிரம்ப்!
நியூயார்க்: அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளில் டொனால்ட் டிரம்ப் முன்னணியில் இருக்கிறார். இன்னும் கொஞ்ச நேரத்தில் அவரது வெற்றி அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுவிடும். இந்நிலையில் யார் இந்த டொனால்ட் டிரம்ப்? அவரது தனிப்பட்ட வாழ்க்கை, தொழில் உள்ளிட்டவை குறித்து இந்த செய்தி விளக்குகிறது.
உலகையே ஆட்டுவிக்கும் அமெரிக்காவை ஆள்வதற்கு ஒவ்வொரு 4 ஆண்டுகளுக்கும் ஒருமுறை அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. அந்த வகையில் புதிய அதிபருக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலில் முதலில் டிரம்பை எதிர்த்து ஜோ பைடன்தான் களமிறங்கினார். ஆனால், அவருடைய அரசியல் டிரம்புக்கு எதிராக வீரியமாக எடுபடவில்லை. எனவே அப்போதே டிரம்பின் வெற்றி ஏறத்தாழ உறுதி செய்யப்பட்டுவிட்டது. ஆனால், அதன் பின்னர் வேட்பாளர் மாற்றப்பட்டு, பைடனுக்கு பதில் கமலா ஹாரிஸ் களமிறக்கப்பட்டார். கமலாவின் வருகை டிரம்புக்கு கடும் சவாலை ஏற்படுத்தியது.

இந்த தேர்தலில் வெற்றி பெற 270 எலக்டோரல் வாக்குகளை பெற வேண்டும். பகல் 1 மணி நிலவரப்படி குடியரசு கட்சியின் டிரம்ப் 267 வாக்குகளையும், ஜனநாயக கட்சியின் கமலா ஹாரிஸ் 214 வாக்குகளையும் பெற்றிருக்கிறார்கள். இதன் மூலம் டிரம்பின் வெற்றி உறுதி செய்யப்பட்டிருக்கிறது. டிரம்ப் தரப்பு அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் அவை மற்றும் செனட் அவை என இரண்டையும் கைப்பற்றியுள்ளது. எனவே விரைவில் அமெரிக்காவின் 47வது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவி ஏற்க இருக்கிறார்.
இந்நிலையில் யார் இந்த டிரம்ப்? என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய சுதந்திரத்திற்கு ஓராண்டுக்கு முன்னர், அதாவது 1946ல் நியூயார்க்கில் உள்ள குயின்ஸில் தந்தை ஃபிரெட் மற்றும் தாய் மேரி டிரம்புக்கு 4வது குழந்தையாக டொனால்ட் டிரம்ப் பிறந்தார். இவரது அப்பா ஒரு ரியல் எஸ்டேட் ஓனர். நிலத்தை வாங்குவதும், தகுந்த ரேட் வரும்போது அதை கைமாற்றி விடுவதையும் சிறப்பாக செய்து வந்திருந்தார். இதனால் டொனால்ட் டிரம்ப்பின் குடும்பம் செழிப்பாக இருந்திருக்கிறது.
பிற்காலத்தில் டொனால்ட் டிரம்புக்கும் ரியல் எஸ்டேட் தொழில் மீது ஆர்வம் வந்தது. ராணுவத்தில் சில காலம் பணியாற்றிய பின்னர், 1968ல் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் வார்டன் நிதி மற்றும் வணிகப் பள்ளியில் பயின்ற டிரம்ப், பொருளாதாரத்தில் பட்டம் பெற்று தனது கல்வியை முடித்தார். படித்தது வணிகம், ஏற்கெனவே அப்பாவின் தொழிலும் தெரியும்.. எனவே இதையெல்லாம் வைத்து சீக்கிரமாகவே தானே ஒரு ரியல் எஸ்டேட் தொழிலை தொடங்கினார். அதில் அவர் வெற்றியும் கண்டார்.
இதில் கிடைத்த வெற்றி மேலும் பல முதலீடுகளை நோக்கி அவரை நகர்த்தியது. குறிப்பாக கேமங்லிங், ஹோட்டல்கள், கோல்ஃப் மைதானங்கள் போன்றவற்றை தொடங்கி அதற்கு டிரம்ப் என்கிற அடைமொழியை கொண்ட பெயரை வைத்தார். அடுத்தடுத்த தன்னுடைய எல்லா பிசினஸ்களுக்கு பெயர் வைக்கும்போது டிரம்ப் என்கிற அடைமொழியை சேர்த்துக்கொண்டார். இப்படி தொழில் துறையில் வெற்றி கண்ட இவருக்கு அரசியல் மீது அதீத ஆர்வம் ஏற்பட்டது. 1987ல் அரசியலில் நுழைவதற்கான சில முயற்சிகளை எடுத்தார். ஆனால் அது கைகொடுக்கவில்லை. எனவே முதலில் தன்னை பிரபலமானவராக காட்டிக்கொள்ள வேண்டும் என்று தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்கினார்.
பின்னர் கிடைக்கும் வாய்ப்புகளை எல்லாம் பயன்படுத்தி தன்னை பிரபலமாக்கிக்கொண்டார். பின்னர் அதிபர் தேர்தலில் போட்டியிடுவது என முடிவு செய்து 2015ம் ஆண்டு அதற்காக வேட்புமனுவையும் தாக்கல் செய்தார். இந்த தேர்தலில் அவர் குறைவான வாக்குகளை பெற்றிருந்தாலும், வெற்றி பெற்று அமெரிக்காவின் 45வது அதிபராக தேர்வானார்.
அரசியல், தொழில்துறை என்பதை தாண்டி வாசிப்பு மீது இவருக்கு அதீத ஆர்வம் இருக்கிறது. இதுவரை 14க்கும் அதிகமான புத்தகங்களை எழுதியிருக்கிறார். இதில் 'தி ஆர்ட் ஆஃப் தி டீல்' என்கிற படைப்பு பெரும் கவனம் பெற்றிருந்தது.
இவர் அதிபராக இருந்த காலத்தில் வரி குறைப்பு, வெளிநாட்டு மக்கள் அமெரிக்காவில் நுழைவதை தடுப்பது என பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார். எனவே இவரது ஆட்சிக்காலம் பெரும் விவாதமாக இருந்தது. அதேபோல, 2021ல் இவரது ஆட்சிக்காலம் நிறைவந்த போதும் கூட, அதிபர் பதவியை விட்டுக்கொடுக்கமால் பிடிவாதம் பிடித்திருந்தார். மட்டுமல்லாது, இவரது ஆதரவாளர்கள் வெள்ளை மாளிகையை தாக்கியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications