அவமானம்.. காந்தியின் சிலையை அவமதித்துவிட்டனர்.. பொங்கி எழுந்த அதிபர் டிரம்ப்.. கடும் கண்டனம்!
நியூயார்க்: மகாத்மா காந்தியின் சிலையை அமெரிக்காவில் அவமதித்ததற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் கடும் கண்டனம் தெரிவித்து இருக்கிறார்.
அமெரிக்காவில் கருப்பின இளைஞர் ஜார்ஜ் பிளாய்டு கொல்லப்பட்டது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இன்னும் அங்கு போராட்டங்கள் இதற்காக நடந்து வருகிறது. அமெரிக்காவில் கடந்த மாதம் 24ம் தேதி ஜார்ஜ் பிளாய்டு என்ற கருப்பின இளைஞர் போலீசாரால் கொல்லப்பட்டார்.
அவரை போலீசார் கைது செய்து அழைத்து செல்லும் போது கழுத்தை நெரித்தலில் சம்பவ இடத்திலேயே ஜார்ஜ் பலியானார்.ஜார்ஜ் கழுத்தை நெரித்து போலீஸ் கொலை செய்யும் வீடியோ இணையம் முழுக்க வைரலாகி வந்தது. இதனால் அங்கு போராட்டம் வெடித்தது.

வெள்ளை மாளிகை
போலீஸ் செய்த இந்த கொடூரத்திற்கு எதிராக அமெரிக்காவில் போராட்டங்கள் நடந்து வருகிறது. வாஷிங்டனில் நடந்த போராட்டத்தின் போது அங்கிருக்கும் மகாத்மா காந்தியின் சிலை அவமதிக்கப்பட்டது. வாஷிங்டனில் நேஷனல் பார்க் அருகே இந்த சிலை இருக்கிறது. இந்த போராட்டத்தில் அங்கு இருக்கும் இந்த மகாத்மா காந்தியின் சிலை அவமதிக்கப்பட்டது. சிலையில் சில பாகங்கள் உடைக்கப்பட்டது.

காந்தி சிலை
அதேபோல் சிலையில் ஸ்பிரே அடிக்கப்பட்டு அவமதிக்கப்பட்டது. போராட்டக்குழுவில் இருந்த சில விஷமிகள் இப்படி செய்தனர். இதனால் அமெரிக்காவில் இருக்கும் இந்தியர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது. இந்த புகைப்படங்கள் கூட இணையத்தில் வந்தது. இந்திய தூதரகம் சார்பாக இதற்கு எதிராக கடுமையாக கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

கண்டனம் தெரிவித்தார்
இந்த நிலையில் அதிபர் டிரம்ப் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். மகாத்மா காந்தியின் சிலையை அமெரிக்காவில் அவமதித்ததை ஏற்க முடியாது. நமக்கு இது மிகப்பெரிய அவமானம் என்று கூறியுள்ளார். அதேபோல் இவரின் மகள் இவாங்கா டிரம்ப் இதை கடுமையாக கண்டித்து உள்ளார். இந்த போராட்டக்காரர்களை கைது செய்ய வேண்டும் என்று இவாங்கா கூறியுள்ளார்.

மன்னிப்பு
முன்னதாக இந்த சிலை அவமதிக்கப்பட்டதற்கு இந்தியாவிற்கான அமெரிக்க தூதரகம் மன்னிப்பு கேட்டு இருந்தது. இந்த சிலை வாஜ்பாய் பிரதமராக இருந்த போது கடந்த 2000 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. அதிபர் பில் கிளிண்டன் மற்றும் வாஜ்பாய் இணைந்து இதை திறந்து வைத்தனர். இந்த சிலை அவமதிக்கப்பட்டது தொடர்பாக தற்போது அங்கு போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications