"எப்புட்றா.." படிப்பும் இல்லை! திறமையும் இல்லை.. ஆனா சம்பளம் மட்டும் 1.3 கோடி.. கதறும் நெட்டிசன்கள்
நியூயார்க்: எந்தத் திறமையும், கல்வியும் இல்லாத ஒருவருக்கு 1,60,000 டாலர், அதாவது இந்திய மதிப்பில் ரூ. 1.3 கோடி சம்பளம் கிடைக்கிறது. அவருக்கு அப்படி என்ன வேலை என்பதைப் பார்க்கலாம்.
இந்த நவீனக் காலத்தில் நல்ல வேலைகளுக்குப் போட்டி கூட பல மடங்கு அதிகரித்துவிட்டது. படித்து முடித்து ஒரு நல்ல வேலைக்குச் செல்வதை நம்ம ஊரில் பெரும் சிரமமாக உள்ளது.
பல இளைஞர்கள் படித்து முடித்துவிடும் கூட வேலை கிடைக்காமல் இருக்கிறார்கள். ஆனால், அமெரிக்காவைச் சேர்ந்த இந்த இளைஞருக்கு எந்தவொரு கல்வித் தகுதி இல்லாத போதிலும் கோடி ரூபாய் சம்பளத்தில் வேலை கிடைத்துள்ளது.

அமெரிக்கா
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சில்ஸ் பகுதியைச் சேர்ந்தவர், கோரி ராக்வெல்.. 38 வயதான இவர் சில காலத்திற்கு முன்பு என்னடா வாழ்க்கை இது என்றே உணர்ந்துள்ளார். வாழ்க்கையில் அர்த்தப்பூர்வமாக எதையும் செய்யவே இல்லாமல் இருப்பதாக நினைத்து வேதனைப்பட்டுள்ளார். காலையில் 9 மணிக்குச் சென்று மாலை 5 மணிக்கு வீடு திரும்பும் ஆபீஸ் வேலைகளில் அவருக்குப் பெரியளவில் நாட்டம் இருந்ததே இல்லையாம். இதனால் வாழ்க்கையை வெறுத்தே சுற்றிக் கொண்டிருந்துள்ளார்.

படிப்பும் இல்லை திறமையும் இல்லை
வாழ்க்கையின் அந்த காலகட்டம் குறித்துப் பேசியுள்ள அவர், "நான் அப்போது என்ன செய்து கொண்டிருந்தேன் என்று எனக்கே தெரியவில்லை. அந்த நேரத்தில் எனக்குப் படிப்பு இல்லை, திறமை இல்லை, காதலி இல்லை, குழந்தை இல்லை. வாழ்நாள் முழுக்க இதேபோல இருந்துவிடுவேனோ என்று எனக்குப் பயம் இருந்தது" என்று அவர் தெரிவித்தார். அப்போது அவர் உள்ளூர் சூப்பர் மார்கெட் ஒன்றில் வேலைக்குச் சேர முயன்றுள்ளார். இருப்பினும், அங்குக் கூட அவருக்கு வேலை கிடைக்கவில்லை. அந்தளவுக்குத் தான் அவரது நிலைமை இருந்தது.

மாறிய வாழ்க்கை
இப்படி படுமோசமாக இருந்த அவரது வாழ்க்கை திடீரென மாற தொடங்கியது. சுரங்க நிறுவனம் ஒன்று அவருக்கு வேலை கொடுத்தது. மைனிங் நிறுவனமான ஜியோடெம்ப்ஸ், கோரிக்கு நெவாடா மாகாணத்தில் இருக்கும் ஒரோவாடாவில் ஆறு மாத காண்டிராக்ட் வேலையை வழங்கியது. இருப்பினும், அங்கேயே அவர் ஓராண்டிற்கு வேலை செய்துள்ளார். தொடர்ந்து காண்டிராக்ட் நீட்டிக்கப்பட்ட அவர் 4 ஆண்டுகள் அங்கேயே வேலை செய்துள்ளார். ஆனால், அப்போது அவர் சுரங்கத்திற்கு மேலே மட்டுமே வேலை செய்துள்ளார்.

சுரங்க வேலை
சுரங்கத்திற்குள் சென்று வேலை செய்ய வேண்டும் என்ற ஆசை அவருக்கு வந்துள்ளது. இதையடுத்து அவர் வேறு ஒரு சுரங்க நிறுவனத்தில் சேர்ந்து தனது ஆசையை நிறைவேற்றிக் கொண்டாராம். கோரி இப்போது யெரிங்டன் நகரில் உள்ள செப்புச் சுரங்கமான நெவாடா காப்பரில் சுரங்கத் தொழிலாளியாகப் பணிபுரிகிறார். சுரங்கத்திலேயே மிகவும் அழுக்கான நபராக அவர் தான் அறியப்படுகிறார். அதற்காக அவருக்குச் சம்பளம் குறைவு என்றெல்லாம் நினைத்துவிடாதீர்கள். கை நிறைய நல்ல சம்பளமாம்.

ஒரு கோடி சம்பளம்
இது குறித்து அவர் கூறுகையில், "உண்மையில் எனக்கு அப்போது எதுவுமே தெரியாது. படிப்பும் இல்லை.. திறமையும் இல்லை. ஆனால், முயன்றால் அனைத்தையும் கற்றுக் கொள்ளலாம் என்பதற்கு நானே மிகச் சிறந்த ஒரு உதாரணம்,. அப்போது நான் ஒரு நாள் உணவுக்கே கஷ்டப்பட்டேன். ஆனால், இப்போது எனக்கு நல்ல சம்பளம் கிடைக்கிறது. அதிகபட்சமாக ஒரு வருடத்தில் நான் $160,000 (சுமார் 1 கோடி ரூபாய்) வரை சம்பாதித்துள்ளேன். காண்டிராக்ட் ஊழியர் என்பதால் சம்பளம் பல்வேறு காரணிகளைப் பொறுத்து மாறும்.

என்ன வேலை
இப்போது நான் நெவாடா காப்பரில் நல்ல சம்பளம் பெறுகிறேன். அடியே அவர்கள் சுரங்கத்தில் துளைகளைப் போட்டு வைப்பார்கள். அங்கே வெடிபொருட்களை நிரப்புவது தான் எனது வேலை, நிலத்திற்கு அடியே சுரங்கத்தில் வேலை செய்வது என்பது தினசரி 9-6 ஆபீஸ் வேலை போன்றது இல்லை. திடீரென சுவரில் இருந்து கொதிக்கும் நீர் வரும். இடிபாடுகள், தண்ணீர் என்று சுரங்கத்தின் கீழே வாழ்க்கை பயங்கரமானதாக இருக்கும்.

டயர்ட்
காலை 6 மணிக்கு வேலையைத் தொடங்கினால் மாலை 6 மணி வரை வேலை இருக்கும். நான் மாலையில் வீடு திரும்பும்போது, மனரீதியாகவும், உடல் ரீதியாகவும், மிகவும் சோர்வாக இருப்பேன். அதன் பிறகு சுமார் 20 மணி நேரம் விட்டாலும் தூங்குவேன். அவ்வளவு டயர்ட் ஆகிவிடுவேன். இப்படிப் பல சிக்கல்கள் இருந்தாலும் நான் எனது வேலையை நேசிக்கிறேன். சுரங்கத்தில் மிகவும் அழுக்கான நபராக என்ற பெயர் எனக்கு மிகவும் பிடித்தே இருக்கிறது" என்றார்.












Click it and Unblock the Notifications