1.4 கோடி வரை சம்பளம்.. வீடியோ கேம் விளையாட தெரிந்தால்.. அமெரிக்காவில் லட்டு மாதிரி வேலை
நியூயார்க்: அமெரிக்காவில் ஏர் டிராபிக் கன்ட்ரோலர்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வரும் சூழலில், ஆயிரக்கணக்கான காலிப்பணியிடங்களை நிரப்ப அமெரிக்க அரசு. தற்போது 'கேமர்களை' (வீடியோ கேம் விளையாடுபவர்கள்) நாடியுள்ளது. அடுத்த வாரம் இதற்கான ஆட்கள் சேர்ப்பு தொடங்கும் நிலையில், கேமர்களைக் குறிவைத்து ஒரு புதிய விளம்பரத்தை அமெரிக்க அரசின் ஃபெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் வெள்ளிக்கிழமை வெளியிட்டிருக்கிறது. இதில் வேலைக்கு சேர்ந்தால் 3 வருடங்களில் 1.4 கோடி சம்பளம் வரை கிடைக்குமாம்.
அமெரிக்க அரசின் ஃபெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் அமைப்பு வெளியிட்ட விளம்பரத்தில் 'Xbox One' லோகோ மற்றும் புகழ்பெற்ற போர்க்கள விளையாட்டான போர்ட்நை காட்சிகள் இடம் பெற்றுள்ளன. மேலும், கேமர்களுக்கு இது ஒரு லாபகரமான வாழ்க்கைப் பாதையாக இருக்கும் என்றும், பணியில் சேர்ந்து வெறும் மூன்று ஆண்டுகளில் ஒருவருடைய சம்பளம் $155,000 (இந்திய மதிப்பில் சுமார் ₹1.4 கோடி) வரை எட்டும் என்றும் அந்த விளம்பரத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

விளம்பரம் என்ன
ஃபெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் வெளியிட்ட விளம்பரத்தில் கூறப்பட்டுள்ளதாவது: "இந்தச் சவாலுக்கு நீங்கள் தயாரா கேமர்களே? இதற்காகத்தான் நீங்கள் இவ்வளவு காலம் பயிற்சி பெற்று வருகிறீர்கள். வான் போக்குவரத்து கட்டுப்பாட்டாளர் ஆகுங்கள். இது ஒரு விளையாட்டு அல்ல, இது உங்கள் எதிர்காலம். நீங்கள் தினமும் கோடிக்கணக்கான மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, நிறைய பணமும் சம்பாதிப்பீர்கள்" என்று அந்த வீடியோ விளம்பரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோ யூடியூபில் 12,000-க்கும் மேற்பட்ட பார்வைகளைப் பெற்றிருக்கிறது.
அமெரிக்கா சொல்வது என்ன
அமெரிக்க விமான போக்குவரத்து துறை செயலாளர் ஷான் டஃபி கூறுகையில், "இந்த புதிய ஆட்கள் சேர்ப்பு முயற்சி, கேமிங் மூலம் வான் போக்குவரத்து கட்டுப்பாட்டாளருக்குத் தேவையான திறன்களை வளர்த்துக்கொண்ட இளைஞர்களை இலக்காகக் கொண்டது" என்றார்.
"அடுத்த தலைமுறை கட்டுப்பாட்டாளர்களைச் சென்றடைய, நாம் மாற வேண்டியது அவசியம். இந்த பிரச்சாரத்தின் புதுமையான தகவல் தொடர்பு ஸ்டைல் மற்றும் கேமிங் மீதான கவனம், வெற்றிகரமான கட்டுப்பாட்டாளராக ஆவதற்குத் தேவையான கடின உழைப்பு மற்றும் திறன்களைக் கொண்ட இளைஞர்களை ஈர்க்கும்," என்று டஃபி தெரிவித்துள்ளார்.
வரவேற்பு
கட்டுப்பாட்டாளர்களின் தொழிற்சங்கமான 'தேசிய வான் போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்கள் சங்கத்தின்' தலைவர் நிக் டேனியல்ஸ் கூறுகையில், இந்த ஆட்கள் பற்றாக்குறையைச் சமாளிக்க கேமர்களைத் தேர்ந்தெடுக்கும் உத்தியை தொழிற்சங்கங்கள் வரவேற்பதாகத் தெரிவித்தார். "கேமர்கள் போன்ற உயர் மட்டத் திறன் கொண்டவர்களை உள்ளடக்கிய இந்த புதிய அணுகுமுறையை எங்கள் சங்கம் வரவேற்கிறது. ஆனால், இந்த பாதுகாப்பு சார்ந்த பணியின் கடுமையான தரநிலைகள் மற்றும் விதிமுறைகள் சரியாகப் பின்பற்றப்பட வேண்டும்" என்று தனது ஆதங்கத்தையும் வெளிப்படுத்தினார்.
அமெரிக்க அரசு விருப்பம்
தற்போது அமெரிக்க அரசின் எப்ஏஏ அமைப்பில் 11,000 கட்டுப்பாட்டாளர்கள் பணிபுரிகின்றனர், மேலும் 4,000 பேர் பயிற்சியில் உள்ளனர். இருப்பினும், முழுமையாகச் செயல்பட இன்னும் ஆயிரக்கணக்கான பணியாளர்கள் தேவைப்படுகிறார்கள். 10 வருடங்களுக்கு மேலாக இந்தப் பணியிடங்களை நிரப்ப அமெரிக்க அரசாங்கம் போராடி வருகிறது. ஆட்கள் விலகிச் செல்வது, பயிற்சிக்காக எடுத்துக்கொள்ளப்படும் நீண்ட காலம் மற்றும் பயிற்சியின் போது பலர் தோல்வியடைவது போன்ற காரணங்களால் இந்த வேலைக்கு தட்டுப்பாடு நீடிக்கிறது.
வீடியோ கேமர்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு
சமீபத்திய ஆண்டுகளில் வீடியோ கேமர்களை இலக்காகக் கொண்ட ஒரே அமெரிக்க அரசு நிறுவனம் எப்ஏஏஏ மட்டுமே கிடையாது. அமெரிக்க ராணுவம் மற்றும் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையும் கேமர்களைத் தங்கள் பணிகளுக்கு வரவேற்று வருகின்றன. கேமர்களின் கை-கண் ஒருங்கிணைப்பு , சிக்கலான சூழல்களில் விரைவாக முடிவெடுக்கும் திறன் மற்றும் பல மணிநேரம் திரையையே கூர்ந்து கவனிக்கும் திறன் ஆகியவை இந்தப் பணிகளுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்று அவர்கள் கருதுகிறார்கள்.
ஏன் வீடியோ கேம் விளையாடுபவர்களுக்கு வேலை
எல்லாம் ஓகே.. வீடியோ கேம் விளையாடுவதற்கும், விமானப் போக்குவரத்தைக் கட்டுப்படுத்துவதற்கும் என்ன சம்பந்தம் என்று பலருக்கும் தோன்றும். ஆனால், ஒரு கேமர் இயல்பாகவே வளர்த்துக்கொள்ளும் சில திறன்கள் ஏர் டிராபிக் கன்ரோலர் பணிக்கு மிகவும் அவசியமானவை ஆகும். அமெரிக்க அரசு ஏன் இவர்களைத் தேர்வு செய்கிறது என்பதற்கான காரணங்களையும் சற்று விரிவாகவே நாம் பார்ப்போம்.
கை-கண் ஒருங்கிணைப்பு மிக அவசியம்
கேமர்கள் திரையில் நடக்கும் வேகமான மாற்றங்களைக் கவனித்து, அதே வேகத்தில் தங்கள் கைகளால் கட்டுப்படுத்தி எதிர்வினையாற்றுவார்கள். ஏடிசி பணியிலும், ரேடார் திரையில் நகரும் பல விமானங்களைக் கவனித்துக்கொண்டே, துல்லியமாகச் செயல்பட வேண்டியதிருக்கும் எனவே தான் வீடியோ கேம் விளையாடுபவர்களை நாடுகிறது அமெரிக்கா
சூழல் விழிப்புணர்வு
குறிப்பாக 'Fortnite' அல்லது 'Call of Duty' போன்ற விளையாட்டுகளில், எதிரி எங்கிருந்து வருகிறான், தன் குழுவினர் எங்கே இருக்கிறார்கள் என 360 டிகிரியிலும் கேமர்கள் கவனிப்பார்கள். அதேபோல், ஒரு ஏடிசி அதிகாரி வானில் வெவ்வேறு திசைகளில், வெவ்வேறு உயரங்களில் பறக்கும் பல விமானங்களின் நிலையைச் சரியாகக் கணிக்க வேண்டியது இருக்கும்.
ஒரே நேரத்தில் பல வேலைகள் செய்ய முடியும்
கேமர்கள் ஒரே நேரத்தில் சக வீரர்களுடன் பேசிக்கொண்டே, திரையைக் கவனித்து, கேமையும் விளையாடுவார்கள். ஏடிசி பணியிலும் விமானிகளுடன் ரேடியோவில் பேசிக்கொண்டே, தரவுகளைப் பதிவு செய்து, பிற விமானங்களைக் கண்காணிக்க வேண்டியதிருக்கும். சிறு தவறு கூட இல்லாமல் மிக கவனமாக செய்ய வேண்டியதிருக்கும்.
விரைவான மற்றும் அழுத்தமான சூழலில் முடிவெடுப்பார்கள்
விளையாட்டின் இக்கட்டான தருணங்களில் ஒரு நொடி தாமதித்தாலும் தோல்வி நிச்சயம். அதேபோல், வான் போக்குவரத்தில் ஒரு சிறிய தவறு பெரிய விபத்தை ஏற்படுத்தலாம். கேமர்களுக்குத் திரையில் தோன்றும் தரவுகளைப் பகுப்பாய்வு செய்து நொடிப் பொழுதில் சரியான முடிவை எடுக்கும் பழக்கம் ஏற்கனவே இரத்தத்தில் ஊறியிருக்கும். எனவே தான் வீடியோ கேம் விளையாடி விளையாடி ஊறிப்போனவர்களை இந்த வேலைக்கு எடுக்க அமெரிக்கா விரும்புகிறது.
நீண்ட நேரக் கவனிக்ககூடிய திறமை இருக்கும்
வீடியோ கேம் விளையாடுபவர்கள் பல மணிநேரம் திரையையே பார்த்துக் கொண்டிருக்கும் ஆற்றல் கொண்டவர்கள். ஏடிசி பணியில் ஷிப்ட் முடியும் வரை தொய்வில்லாமல் ரேடார் திரையைக் கவனிப்பது மிக முக்கியம் என்பதால் அவர்களை அமெரிக்கா லட்டு மாதிரி தூக்கி செல்ல விரும்புகிறது.
தேர்வு முறை எப்படி இருக்கும்?
அமெரிக்க அரசு இவர்களை நேரடியாக வேலைக்குச் சேர்த்துவிடாது. இதற்கான வழிமுறைகள் சற்று சவாலானதாகவே இருக்கும். கேமர்களுக்கு இருக்கும் அதே திறன்களைச் சோதிக்கும் வகையில் கணினி வழித் திறனரிவுத் தேர்வுகள் நடத்தப்படும். தேர்வான பிறகு பல மாதங்கள் சிமுலேட்டர்கள் மூலம் நிஜ விமானங்களைக் கையாள்வது போன்ற பயிற்சி அளிக்கப்படும். முன்பு வீடியோ கேமில் கண்ட்ரோல் செய்தவர்கள், நிஜத்தில் கண்ட்ரோல் செய்ய வேண்டியதிருக்கும்.. அதேபோல் மனநலத் தேர்வு: எவ்வளவு பெரிய பதற்றமான சூழலிலும் நிதானமாகச் செயல்படுவார்களா என்பதை அறிய மனநல தேர்வும் வைப்பார்கள்.. சரியாக சொல்வது என்றால், "கேமிங் என்பது வெறும் பொழுதுபோக்கு அல்ல, அது ஒரு சிக்கலான பணியைச் செய்வதற்கான அடிப்படைப் பயிற்சி" என்ற புதிய கோணத்தில் அமெரிக்க அரசு இதைப் பார்க்கிறது.












Click it and Unblock the Notifications