அமெரிக்காவில் இருந்து.. பில்லியன் கணக்கில்.. கொத்து கொத்தாக தங்கம் வாங்கும் இந்தியா! என்ன காரணம்?
நியூயார்க்: அமெரிக்கா இந்தியா இடையிலான வர்த்தக பற்றாக்குறையை போக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக அமெரிக்காவிலிருந்து தங்கம், வெள்ளி, பிளாட்டினம் மற்றும் விலைமதிப்பற்ற கற்கள் உள்ளிட்ட உயர் மதிப்புள்ள பொருட்களை இறக்குமதி செய்ய இந்தியா பரிசீலித்து வருகிறது.
வர்த்தக அமைச்சகத்தின் தரவுகளின்படி, நடப்பு நிதியாண்டின் முதல் 11 மாதங்களில் (ஏப்ரல் 2024-பிப்ரவரி 2025) இந்தியா 76.37 பில்லியன் டாலர் மதிப்பிலான சரக்குகளை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்துள்ளது அதே சமயம் $41.62 பில்லியன் பொருட்களை இறக்குமதி செய்தது, இதன் விளைவாக $34.75 பில்லியன் வர்த்தக பற்றாக்குறை ஏற்பட்டது.

அமெரிக்காவுடனான இருதரப்பு வர்த்தகப் பற்றாக்குறையைக் குறைப்பதற்கான வழிகளில் ஒன்றாக Trade diversification எனப்படும் வர்த்தகப் பல்வகைமை முறையை கையாள மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் விலைமதிப்பற்ற உலோகங்கள் மற்றும் நகைகளை இறக்குமதி செய்ய உள்ளனர்.
தங்கம், வெள்ளி மற்றும் பிளாட்டினம் உற்பத்தியில் அமெரிக்கா முன்னணியில் உள்ளது. இவற்றில் கணிசமான அளவை அமெரிக்காவிலிருந்து இந்தியா எளிதாக பெற முடியும். இதன் மூலம் தங்கம், வெள்ளியின் கையிருப்பு இந்தியாவில் அதிகரிக்கும். நடப்பு நிதியாண்டின் முதல் 11 மாதங்களில் (ஏப்ரல் 2024-பிப்ரவரி 2025) இந்தியாவின் தங்கம் மற்றும் வெள்ளி உட்பட விலைமதிப்பற்ற உலோகங்களின் மொத்த இறக்குமதி 74 பில்லியன் டாலர்களைத் தாண்டி உள்ளது.
2023-24ல் இந்தியா $74.81 பில்லியன் மதிப்புள்ள தங்கம் மற்றும் வெள்ளி பொருட்களை இறக்குமதி செய்தது. இதில் சுமார் 5 பில்லியன் டாலர்கள் இறக்குமதிகள் அமெரிக்காவிலிருந்து வந்தவை. இதை இரண்டு மடங்கு அல்லது மூன்று மடங்கு உயர்த்த இந்தியா முடிவு செய்துள்ளது.
தங்கம் விலை
தங்கத்தின் விலை இதனால் இந்தியாவில் குறையலாம். இந்தியா அதிக அளவில் தங்கத்தை இறக்குமதி செய்வதால் தங்க இருப்பு அதிகரிக்கும். இதனால் ரூபாய் மதிப்பு உயரும். அதே சமயம் தங்கம் விலை லேசாக குறையலாம். ஆனால் சர்வதேச சந்தையின் பாதிப்பையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
வர்த்தக போர் காரணமாக ஏற்பட்ட டாலரின் வீழ்ச்சி மற்றும் அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே அதிகரித்து வரும் வர்த்தகப் போர் காரணமாக, தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த 3 நாட்களில் கிட்டத்தட்ட 3% உயர்ந்து தங்கம் தொடர்ந்து ராக்கெட் வேகத்தில் உச்சம் அடைந்து வருகிறது. சென்னை நகரில் இன்று 1 கிராம் 24 கேரட் தங்கம் விலை ₹9,551 ஆக உள்ளது, இதேபோல் 1 கிராம் 22 கேரட் தங்கம் விலை ₹8,755 ஆகவும், 1 கிராம் 18 கேரட் தங்கம் விலை ₹7,250 ஆகவும் உள்ளது.
ஸ்பாட் தங்கம் 1 அவுன்ஸுக்கு 2.8% உயர்ந்து $3235ஆக இருந்தது. அமெரிக்க தங்கம் 3.5% உயர்ந்து $3238ஆக இருந்தது. 1 அவுன்ஸ் என்பது 28 கிராம் ஆகும். கிட்டத்தட்ட மூன்றரை பவுன் தங்கத்தின் விலை ஆகும் இது. இதன் இந்திய மதிப்பு 2.72 லட்சம் ரூபாய் ஆகும். உலக வரலாற்றில் முதல்முறையாக இந்த தொகையை தங்கம் அடைந்து உள்ளது.
தினமும் தங்கத்தின் விலை கிட்டத்தட்ட 0.3 முதல் 0.5 சதவிகிதம் வரை உயருகிறது. டாலரின் மதிப்பு 0.2- 0.3 சதவிகிதம் வரை குறைகிறது. இப்போது வர்த்தக போர் தொடங்கினால் சர்வதேச அளவில் 1 அவுன்ஸ் தங்கம், அதாவது கிட்டத்தட்ட 4 பவுன் நகையின் விலை தற்போது இருக்கும் விலையை விட 17 ஆயிரம் ரூபாய் உயரும் வாய்ப்புகள் உள்ளன. அதாவது கிட்டத்தட்ட ஒரு பவுன் தங்கம் 4 ஆயிரம் ரூபாய் வரை இந்த வருடம் உயரும் வாய்ப்புகள் என்று கணிக்கப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications