UNGA: மரண தண்டனைக்கு இடைக்கால தடை! ஐ.நா. தீர்மானத்திற்கு இந்தியா எதிர்ப்பு!
நியூயார்க்: உலகளவில் மரண தண்டனைக்கு (தூக்கு) இடைக்காலத் தடை விதிக்கக் கோரி ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் கொண்டு வரப்பட்ட வரைவுத் தீர்மானத்திற்கு எதிராக இந்தியா வாக்களித்தது. இந்தியாவுடன் சேர்ந்து 33 நாடுகளும் எதிராகவே வாக்களித்தன.
ஐ.நா பொதுச் சபையில் 193 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்த நிலையில் மரண தண்டனைக்கு இடைக்கால தடை கோரிய தீர்மானத்தை கடந்த வெள்ளிக்கிழமை மெக்ஸிகோவில் அறிமுகப்படுத்தியது.

இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக 133 நாடுகள் வாக்களித்தன. ஆனால் இந்தியா இந்த தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்துள்ளது. அது போல் சீனா, அமெரிக்கா, ஜப்பான், பாகிஸ்தான், ஈரான், சவுதி, ஈராக், எகிப்து, ஓமன், கத்தார், மாலத்தீவு, பஹ்ரைன் உள்ளிட்ட 33 நாடுகளும் அந்த தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தன. 16 நாடுகள் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை.
ஐ.நா.வின் தீர்மானத்தில், பல்வேறு நாடுகளில் தொடர்ந்து மரண தண்டனை விதிக்கப்படுவது கவலையளிக்கிறது. பல நாடுகளில் மரண தண்டனைகள் குறைக்கப்பட்டதாக சொல்லப்பட்ட போதிலும், கடந்த ஆண்டு அவை அதிகளவு கொடுக்கப்பட்டுள்ளன. இந்த மரண தண்டனையை முழுவதும் ஒழிக்க வேண்டும் என்றால் முதலில் தற்காலிக தடை விதிக்க வேண்டும். ஏற்கெனவே மரண தண்டனையை ஒழித்துள்ள நாடுகள் அதை மீண்டும் அறிமுகப்படுத்தக் கூடாது.
குறிப்பாக 18 வயதுக்குள்பட்டவர்கள் அல்லது குற்றம் புரிந்த போது 18 வயதை தாண்டியவர்களுக்கு மரண தண்டனை எனப்படும் தூக்கு தண்டனை முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும். அதே போல் கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகள், மனநலம் குன்றியோர், மூத்த குடிமக்கள் உள்ளிட்டோருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட கூடாது என அந்த தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தது குறித்து ஐநாவுக்கான இந்திய தூதரகத்தின் முதன்மை செயலா்ளர் பாவிகா மங்களானந்தன் கூறியிருப்பதாவது: மரண தண்டனைக்கு எதிராக உலகளவில் ஒரு மித்த கருத்து இல்லை. இறையாண்மை கொண்ட ஒவ்வொரு நாட்டிற்கும் அதன் சட்ட திட்டங்களையும் தண்டனைகளையும் தீர்மானிக்கும் உரிமை உண்டு.
கடுமையான, முறையான சட்ட நடைமுறைகளுக்கு பிறகே மரண தண்டனை வழங்கப்படுகிறது. அதிலும் எல்லா வழக்குகளிலும் வழங்கப்படுவதில்லை. இந்தியாவில் மரண தண்டனை நிறைவேற்றப்படுகிறது. இதை அரசு நடத்தும் படுகொலை என சொல்வது அபத்தமாக உள்ளது. சட்டப்படி நிறைவேற்றப்படும் மரண தண்டனை குறித்து விவாதிப்பது விஷமத்தனமானது என்றும் அவர் தெரிவித்திருந்தார்.



Click it and Unblock the Notifications
