அமெரிக்க சூப்பர் மார்க்கெட்டில் கைவரிசை.. கையும் களவுமாக போலீசிடம் சிக்கிய இந்திய பெண்.. பரவும் வீடியோ
நியூயார்க்: அமெரிக்காவின் பிரபல சில்லறை வர்த்தக நிறுவனமான டார்கெட் ஸ்டோரில் பொருட்களை திருடியதாக குஜராத்தை சேர்ந்த பெண் ஒருவர் சிக்கி அண்மையில் வீடியோ வெளியான நிலையில், தற்போது மேலும் அதே போன்றதொரு மற்றொரு சம்பவம் நடைபெற்றுள்ளது. கடந்த ஜனவரி மாதமே இந்த சம்பவம் நடைபெற்றதாக சொல்லப்படும் நிலையில் யூடியூபில் இந்த வீடியோ சமீபத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டதால் வைரல் ஆகியுள்ளது.
அமெரிக்காவின் மிகவும் பிரபலமாக உள்ள 'டார்கெட்' என்ற சூப்பர் மார்க்கெட்டில் இந்தியப் பெண் ஒருவர் பொருட்கள் வாங்குவதுபோல சென்று சுமார் 7 மணி நேரம் கடைக்குள் சுற்றித்திரிந்ததோடு, டிராலி முழுக்க பொருட்களை எடுத்த அந்த பெண், வாங்கிய பொருட்களுக்கு பணம் கொடுக்காமல் பொருட்களுடன் அந்தப் பெண் தப்ப முயன்றார்.

இந்திய பெண் கைவரிசை
அதுகுறித்து உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், விரைந்து வந்த போலீசார் அவரை பிடித்து விசாரித்தனர். அப்போது போலீசாரின் பாடி கேமராவில் எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் வைரல் ஆகின. $1,300 டாலர் மதிப்புள்ள பொருட்கள் திருடிய அந்த பெண், பிடிபட்ட பிறகு பணம் செலுத்துவதாக கூறியிருந்தார். இந்த வீடியோ வெளியானதை தொடர்ந்து அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் பலரும் அந்தப் பெண்ணின் செயலுக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்தியாவின் பெருமையை தலைகுனிய செய்துவிட்டார்
குஜராத்தை சேர்ந்த இந்திய பெண்ணின் செயலுக்கு நெட்டிசன்கள் பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர். வெளிநாட்டிற்கு வந்த இடத்தில், அந்நாட்டுச் சட்டத்தை மீறியுள்ளார் எனவும், இந்தியாவின் பெருமையை உலக அரங்கில் தலைகுனிய வைத்துவிட்டார் எனவும் நெட்டிசன்கள் திட்டி தீர்த்தனர்.
இந்த நிலையில், அமெரிக்காவில் உள்ள ஒரு டார்கெட் கடையில் காவல்துறையினரால் விசாரிக்கப்படும்போது இந்தியப் பெண் கதறி அழுத மற்றொரு காட்சியும் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது. கடந்த ஜனவரி மாதமே இந்த சம்பவம் நடைபெற்றதாகவும், அது தொடர்பான காட்சிகள் தற்போது மீண்டும் வைரல் ஆகின்றன எனவும் சொல்லப்படுகிறது.
அழுதுகொண்டே பேசிய குஜராத்தி பெண்
இணையத்தில் தற்போது பரவி வரும் இந்த வீடியோவில், விசாரணையின் போது, குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர் என்று அந்த பெண் கூறுகிறார். மேலும், மிகவும் பயந்து நடுங்கியபடி அழுது கொண்டே இருக்கிறார். இந்த பெண் எதுவுமே சொல்ல மறுக்கிறார் என்று போலீசார் பேசிக்கொள்கிறார்கள். மேலும், "உனது முதன்மை மொழி எது?" என்று போலீசார் கேட்கும் போது, "குஜராத்தி" என்று அந்த பெண் கூறுகிறார்.
இதற்கு, "அந்த மொழி எங்கே உள்ளது?" என்று கேட்கிறார்கள். அப்போது, "இந்தியா" என அந்த பெண் பதிலளிக்கிறார். "ஏதேனும் மொழிபெயர்ப்பாளர் வேண்டுமா?" என்று போலீசார் கேட்கிறார்கள். அதற்கு அவர் "வேண்டாம்" என்று கூறுகிறார். மேலும், வாஷிங்டனில் டிரைவருக்கான உரிமம் இருப்பதாகவும் அந்த பெண் கூறுகிறார்.
இங்கு திருடி வெளியில் விற்பேன்
டார்கெட் ஸ்டோரை குறிவைத்து தொடர்ச்சியாக திருடி வந்ததாகவும் அந்த பெண் கூறியுள்ளார். "முதல் முறையாக தற்போதுதான் பிடிபட்டேன்" என்றும், "இங்கு எடுக்கப்படும் பொருட்களை வெளியில் விற்பனை செய்வேன்" என்றும் ஒப்புக்கொள்கிறார். போலீசார் விசாரித்துக்கொண்டு இருக்கும் போதே அந்த பெண்ணிற்கு ஒரு போன் கால் வருகிறது.
அப்போது போலீசார், "உங்களை இன்று விட்டுவிடுகிறோம். இனிமேலும் டார்கெட் ஸ்டோருக்கு இதே நோக்கத்துடன் சென்றால், அத்துமீறி நுழைந்ததாக வழக்குப்பதிவு செய்யப்படும். இந்த வழக்கு தொடர்பாக நீங்கள் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்" என்றும் கூறுகிறார்கள். இந்த வீடியோவும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.












Click it and Unblock the Notifications