பணக்காரர்களின் ஆட்டம்! காலநிலை மாற்றத்திற்கு காரணமே பணக்கார நாடுகள்தான்.. உண்மையை உடைத்த ரிப்போர்ட்
நியூயார்க்: உலகம் முழுவதும் 90% மக்கள் வெளியேற்றும் கார்பன்டை ஆக்ஸைடை விட மில்லியன் மடங்கு அதிகமாக வெறும் 125 பெரும் பணக்காரர்கள் கார்பன்டை ஆக்ஸைடை வெளியிடுகிறார்கள் என அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
காலநிலை மாற்றம் தொடர்பாக (COP27) 27வது மாநாடு எகிப்தில் நடைபெற்று வரும் நிலையில், 'ஆக்ஸ்பாம்' ஆய்வு நிறுவனம் இந்த ஆய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இவ்வாறு வெளியிடப்படும் கார்பன்டை ஆக்ஸைடை பூமியில் சமநிலை படுத்த இந்தியாவை போன்று 3 மடங்கு பெரிய அளவிலான நிலப்பரப்பு முழுவதும் காடுகளை வளர்க்க வேண்டும் என்றும் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
அல்லேலூயா சொல்லு.. அம்மா வந்துருவாங்க! 3 நாட்களாக சடலத்துடன் ஜெபம்! டாக்டர் மகன்களை நம்ப வைத்த பாலு!

பருவ நிலையில் மாற்றம்
இந்த ஆண்டின் ஜூன், ஜூலை மாதங்களில் பிரிட்டன் முன்னெப்போதும் இல்லாத அளவில் கடும் வெப்பத்தை எதிர்கொண்டது. பொதுவாக பூமத்திய ரேகையை விட மேலே மற்றும் கீழே உள்ள நாடுகளில் கடும் குளிர் நிலவுவதுதான் இயல்பு. ஆனால் பூமத்திய ரேகையிலிருந்து மேலே உள்ள பிரிட்டனில் வழக்கத்திற்கு மாறாக வெப்ப அலை ஏற்பட்டுள்ளது. இது மனிதர்கள் மட்டுமல்லாது, காட்டுத் தீயை ஏற்படுத்தி வன விலங்குகளுக்கும் கடுமையான பாதிப்புகளை உண்டாக்கியது. அதேபோல பாகிஸ்தானில் ஏற்பட்ட வெள்ளம் ஆயிரக்கணக்கில் உயிர்களை பலிவாங்கியது.

பெரும் பணக்காரர்கள்
பருவம் தவறி பெய்த மழை மக்களின் உயிர், உடைமை, வீடு என எதையும் விட்டு வைக்கவில்லை. சுமார் 5 கோடி பேர் இந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்தது. இது எல்லாமே காலநிலை மாற்றத்தின் விளைவு என ஐநா எச்சரித்துள்ளது. இந்நிலையில் 'ஆக்ஸ்பாம்' ஆய்வு நிறுவனம் சில ஆய்வு விவரங்களை வெளியிட்டுள்ளது. அதாவது, உலகம் முழுவதும் 90% மக்கள் வெளியேற்றும் கார்பன்டை ஆக்ஸைடை விட மில்லியன் மடங்கு அதிகமாக வெறும் 125 பெரும் பணக்காரர்கள் கார்பன்டை ஆக்ஸைடை வெளியிடுகிறார்கள் என்பதுதான் அது. இந்த 125 பணக்காரர்கள் 183 நிறுவனங்களில் $2.4 டிரில்லியன் பங்குகளை முதலீடு செய்திருக்கிறார்கள்.

கார்பன் உமிழ்வு
இந்த நிறுவனங்கள் வெளியேற்றும் கார்பன்டை ஆக்ஸைடுதான் உலகம் வெப்பமயமாதலுக்கு முக்கிய காரணம். இது ஒருபுறம் எனில், இந்த பணக்காரர்கள் பயன்படுத்தும் ஜெட் விமானங்கள், படகுகள் ஆகியவையும் காற்று மாசு மற்றும் கார்பன் உமிழ்வுக்கு முக்கிய காரணமாக இருக்கிறது. மேற்குறிப்பிட்ட 183 நிறுவனங்களுக்கு இவர்கள் நிதியளிப்பதன் மூலம் ஆண்டுக்கு 393 மில்லியன் டன்கள் கார்பன் (CO2e) உமிழ்வுக்கு வழிவகுக்கின்றனர். இது எந்த அளவுக்கு அதிகம் எனில், 6.7 கோடி பேர் வசிக்கும் பிரான்ஸ் நாடு ஆண்டொன்றுக்கு வெளியிடும் மொத்த கார்பன் உமிழ்வுக்கு சமமானதுதான் இந்த 183 நிறுவனங்கள் வெளியிடும் கார்பன் அளவு. அதாவது சிம்பிளாக சொல்ல வேண்டும் எனில் 6.7 கோடி மக்கள்=183 நிறுவனங்கள்.

பதில் சொல்ல வேண்டும்
மேற்குறிப்பிட்ட கார்பன் உமிழ்வு அளவு என்பது அந்தந்த கார்ப்ரேட் நிறுவனங்கள் கொடுத்த டேட்டாதான். எனவே உண்மையான கார்பன் உமிழ்வு அளவு இதைவிட அதிகமாக இருக்கும் என்று ஆக்ஸ்பாம் குறிப்பிட்டுள்ளது. ஆனால் இது குறித்து காலநிலை மாநாடு விவாதிக்கின்றனவா? என்று கேட்டால் இல்லையென்றுதான் சொல்ல முடியும். இந்நிலை மாற்றப்பட வேண்டும். பணக்காரர்கள் வரிசையில் முதலில் உள்ள பெரும் பணக்காரர்கள் காலநிலை மாற்றத்தில் பதில் சொல்ல வேண்டும் என ஆக்ஸ்பாம் இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி அமிதாப் பெஹர் கூறியுள்ளார்.

வரி
அதேபோல கார்பன் உமிழ்வை பூஜ்யமாக குறைத்தல் எனும் முழக்கம், கார்பன் உமிழ்வை தடுக்க எடுக்கப்பட வேண்டிய குறுகியகால நடவடிக்கைகளை தள்ளி போடுவதற்கான திட்டம்தான் என்றும் ஆக்ஸ்பாம் குற்றம்சாட்டியுள்ளது. 2021ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட பூஜ்ய கார்பன் உமிழ்வு உறுதி மொழியை நடைமுறைப்படுத்த வேண்டும் எனில், சுமார் 1.6 பில்லியன் ஹெக்டேர் அளவில் காடுகள் உருவாக்கப்பட வேண்டும். இதற்கு இந்தியாவை விட 5 மடங்கு பெரிய நிலப்பரப்பு தேவைப்படும். இதையெல்லாம் செய்ய வேண்டுமெனில் மேற்குறிப்பிட்ட 125 பெரும் பணக்காரர்களிடத்தில் கார்ப்ரேட் வரியை ஆண்டுக்கு 1.4 டிரில்லியன் டாலர்கள் திரட்டப்பட வேண்டும். ஆனால் பல நாடுகள் இவற்றை செய்ய தயாராக இல்லையென்று ஆக்ஸ்பாம் தெரிவித்துள்ளது.
காலநிலை மாற்றம் தொடர்பான மாநாடு எகிப்தில் நடைபெற்று வரும் நிலையில் தற்போது 'ஆக்ஸ்பாம்' வெளியிட்டுள்ள அறிக்கை அதிக கவனம் பெற்றுள்ளது.