மனிதர்கள் இல்லாமலே களமிறங்கிய AI ஹேக்கர்கள்.. மொத்த அமெரிக்காவையும் இருளில் தள்ளும் ஜீரோ-டே அட்டாக்?
நியூயார்க்: கடந்த சில நாட்களாக அமெரிக்காவில் நடந்து வரும் அடுத்தடுத்த ஹேக்கிங் சம்பவங்கள், Outages எனப்படும் முடக்கங்கள் உலகையே அதிர வைத்துள்ளன. இதற்கு பின் வேறு பெரிய காரணங்கள் இருக்கலாம் என்று சந்தேகங்கள் எழ தொடங்கி உள்ளன. முக்கியமாகவே அமெரிக்காவையே முடக்கும் சம்பவங்கள் நடக்கலாம் என்று எச்சரிக்கைகள் வெளிவர தொடங்கி உள்ளன.
மைக்ரோசாஃப்ட் சேவைகள் முடக்கம், விமானப் போக்குவரத்துத் துறையான FAA-வின் அவசர உத்தரவு, ஆப்பிள் சேவைகளில் கோளாறு, அதைத் தொடர்ந்து 178 பெரிய இணையதளங்கள் மீது நடத்தப்பட்ட சைபர் தாக்குதல் என அமெரிக்கா ஒரு மிகப்பெரிய சைபர் போரை எதிர்கொள்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. தற்போது நடப்பவை எல்லாமே ஒரு சிறிய டீசர் மட்டும்தான் என்றும், மனித அறிவை மிஞ்சும் சூப்பர் இன்டெலிஜென்ஸ் AI மூலம் மிகப்பெரிய ஜீரோ-டே சைபர் தாக்குதல்கள் விரைவில் நடக்கப்போவதாகவும் பாதுகாப்பு நிபுணர்கள் பகீர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அது என்ன ஜீரோ டே?

இப்போது அமெரிக்காவில் என்ன நடக்கிறது? இது சைபர் தாக்குதலா?
கடந்த நவம்பர் 12-ம் தேதி மைக்ரோசாஃப்ட் அவுட்லுக், டீம்ஸ் ஆகியவை முடங்கின. அடுத்த நாளே அமெரிக்கா முழுவதும் விமானங்கள் பறக்கத் தடை விதிக்கும் அளவுக்கு FAA தகவல் தொடர்பு அமைப்பு செயலிழந்தது. இதனால் 4,000-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
இதேபோல மாணவர் உதவித்தொகை இணையதளங்களும் அவ்வப்போது முடங்கி வருகின்றன. நவம்பர் 17-ம் தேதி ஆப்பிள் நிறுவனத்தின் ஆப் ஸ்டோர் மற்றும் ஐ-கிளவுட் சேவைகளும் முடங்கின.
இவையெல்லாம் வெளிநாட்டு ஹேக்கர்களின் சைபர் தாக்குதலால் நடந்ததாக சமூக வலைதளங்களில் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால், இவை எதுவும் சைபர் தாக்குதல் இல்லை.. பழைய சாஃப்ட்வேர் கோளாறு மற்றும் அப்டேட் சிக்கல்களால் ஏற்பட்டவை என்று அமெரிக்க அரசும், மைக்ரோசாஃப்ட், ஆப்பிள் நிறுவனங்களும் விளக்கம் அளித்துள்ளன.
ஆனால் உண்மையில் நடந்த மெகா சைபர் அட்டாக் இதுதான்!
அந்த முடக்கங்கள் தொழில்நுட்பக் கோளாறு என்றாலும், நவம்பர் 16-ம் தேதி உண்மையிலேயே ஒரு பிரம்மாண்ட சைபர் தாக்குதல் நடந்துள்ளது. CNN, BBC, Fox News, Zoom, HSBC வங்கி, Salesforce, IKEA உள்ளிட்ட உலகின் 178 முன்னணி நிறுவனங்களின் இணையதளங்களுக்குள் ஹேக்கர்கள் ஊடுருவியுள்ளனர். '
Optimizely' என்ற மென்பொருள் வழியாக வைரஸ் கோடிங்கை செலுத்தி, அந்த இணையதளங்களைப் பயன்படுத்தியவர்களின் கிரெடிட் கார்டு தகவல்கள், கிரிப்டோ பணம் ஆகியவற்றைத் திருடியுள்ளனர். குறிப்பாக ஐபோன்களைத் தாக்கும் Coruna மற்றும் DarkSword என்ற இரண்டு புதிய வைரஸ்களையும் அவர்கள் பயன்படுத்தியுள்ளனர்.
ஜீரோ-டே சூப்பர் இன்டெலிஜென்ஸ் ஆபத்து?
அமெரிக்கா முழுவதும் உள்ள வங்கிகள், மின்சார நிலையங்கள், விமான நிலையங்கள் மற்றும் அரசு இணையதளங்கள் என எல்லா சிஸ்டங்களும் ஒரே நேரத்தில் மொத்தமாகச் செயலிழந்து நிற்கும் பேரழிவு நாளைத்தான் பாதுகாப்பு நிபுணர்கள் 'ஜீரோ-டே' என்று குறிப்பிடுகின்றனர். இப்போது நடப்பது எல்லாம் அதற்கான டீசர் என்கிறார்கள். எந்த ஒரு முன்னறிவிப்பும் இல்லாமல், நாடே இருளில் மூழ்கி டிஜிட்டல் தொடர்புகள் அனைத்தும் துண்டிக்கப்படும் அபாயத்தை இது குறிக்கிறது.
கூகுள் வெளியிட்டுள்ள அதிர்ச்சி ரிப்போர்ட்டில், கடந்த ஆண்டு மாதம் சராசரியாக 8 பெரிய ஹேக்கிங் நடந்த நிலையில், சமீபத்தில் ஒரே மாதத்தில் 22 மிகப்பெரிய தாக்குதல்கள் நடந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. தற்போது ஹேக்கர்கள் ARTEX, CAIRN, PentAGI போன்ற தானியங்கி AI கருவிகளைப் பயன்படுத்துகின்றனர். இவை மனிதர்களின் உதவியே இல்லாமல், தானாகவே சிஸ்டங்களுக்குள் நுழைந்து 3 மணி நேரத்திற்குள் மொத்தக் கட்டுப்பாட்டையும் முடக்கும் திறன் கொண்டவை.
இதற்கும் மேலாக, மனித மூளையை விடப் பல மடங்கு வேகமாகச் சிந்திக்கும் 'AI சூப்பர் இன்டெலிஜென்ஸ்' தொழில்நுட்பம் வளர்ந்து வருவதால், எதிர்காலத்தில் உலகின் ஒட்டுமொத்த சிஸ்டங்களையும் ஒரே நொடியில் முடக்கும் அபாயம் உருவாகியுள்ளதாகப் பென்டகன் மற்றும் சைபர் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.


Click it and Unblock the Notifications
