மின்சார வாகனங்களின் மாஸ்டர் மைண்ட்.. உலகத்தையே புரட்டி போட்ட.. விஞ்ஞானி ஜான் குட்எனஃப் காலமானார்
நியூயார்க்: இன்று நாம் பயன்படுத்தும் மொபைல் போன்கள், எலக்ட்ரிக் ஸ்கூட்டர், எலக்ட்ரிக் கார் ஆகியவை உருவாக காரணமாக இருந்த லித்தியம்-அயன் பேட்ரிக்களை உருவாக்கிய விஞ்ஞானி ஜான் குட்எனஃப் தனது 100 வயதில் இன்று உயிரிழந்துள்ளார்.
உலகம் முழுவதும் பூமியிலிருந்து தோண்டி எடுக்கப்படும் நிலக்கரி, பெட்ரோல், டீசல் போன்ற புதைபடிவ எரிபொருள் பயன்பாடு கடந்த சில ஆண்டுகளில் தொடர்ந்து அதிகரித்து வந்தது. இது பூமியின் வெப்பத்தை மேலும் அதிகரித்ததால், ஓசோன் ஓட்டை போன்ற பிரச்னைகள் வெடித்தன. தென், வட துருவங்களில் உள்ள பனிப்பாறைகள் உருகியதால் கடல் நீர் மட்டம் அதிகரித்து சென்னை, போன்ற கடலோர நகரங்கள் பெரும் பாதிப்பை சந்தித்தன.

இந்த பிரச்னைக்கு எப்படி தீர்வு காண்பது என்று தெரியாமல் விழித்துக்கொண்டிருந்த அறிவியல் உலகத்திற்கு, முத்தான ஓர் யோசனையை சொன்னவர்தான் இந்த ஜான் குட்எனஃப். சொன்னது மட்டுமல்லாது இந்த யோசனைக்கு செயல் வடிவம் கொடுத்து அதை சாதித்தும் காட்டினார். அதுதான் லித்தியம்-அயன் பேட்டரி.
இந்த பேட்டரி உருவாக்கப்படும் முன்னர் வரை இந்த உலகம் நிக்கல்-ஹைட்ரஜன் பேட்டரியை நம்பிதான் இருந்தது. இந்த வகை பேட்டரிகளில் இருக்கும் மிகப்பெரிய பிரச்னை இதன் வாழ்நாள்தான். இப்பேட்டரிக்கள் பயன்படுத்த தொடங்கிய சில நாட்களில் அதன் சேமிப்பு திறனில் 50 சதவிகிதத்தை இழந்துவிடும். எனவே இதை நம்பி எதிலும் உருப்படியாக களம் இறங்க முடியாமல் இருந்தது. அப்படி இருக்கையில்தான் ஜான் குட்எனஃப் பேட்டரி உலகில் மிகப்பெரிய சாதனையை ஏற்படுத்தினார்.
ஜான் குட்எனஃப்-க்கு முன்னரே லித்தியம் அயன் பேட்டரி கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் அது பாதுகாப்பான முறையில் இல்லை. எனவே எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம் என்கிற அச்சம் இருந்தது. இதை சரிப்படுத்தி மக்கள் சாதாரணமாக பயன்படுத்தும் வகையில் இந்த பேட்டரியை மாற்றியமைத்தது ஜான் குட்எனஃப்தான்.
பிரிட்டனின் ஸ்டான்லி விட்டிங்ஹாம் மற்றும் ஜப்பானின் அகிரா யோஷினோ ஆகியோருடன் சேர்ந்து லித்தியம்-அயன் பேட்டரிகளை பாதுகாப்பாக உருவாக்கியதற்காக இவருக்கு கடந்த 2019ம் ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டது. இந்த பேட்டரி வந்த பின்னர் ராணுவத்தில் பல விஷயங்கள் தலைகீழாக மாறின. அடுத்த மாதம் 25ம் தேதி அவர் தனது 101வது பிறந்த நாளை கொண்டாட இருந்த நிலையில் தற்போது உயிரிழந்துள்ளார். இவரது இழப்பு அறிவியல் உலகத்திற்கு மட்டுமல்லாது, செல்போன், இ-பைக், இ-கார் பயன்படுத்தும் அனைவருக்கும் பேரிழப்பாகும்.












Click it and Unblock the Notifications