மோடிகிட்ட இதை முதல்ல சொல்லுங்க பிடன்.. விளாசி தள்ளிய "பெரிய கை" பெர்னி சாண்டர்ஸ்.. பரபரப்பு
நியூயார்க்: அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடியை வெர்மோண்ட் மாகாண செனட்டர் பெர்னி சாண்டர்ஸ் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
அமெரிக்காவிற்கு 3 நாள் பயணமாக பிரதமர் மோடி சென்றுள்ளார். அமெரிக்காவுடன் சமீபத்தில் பல்வேறு விஷயங்களில் இந்தியாவின் உறவு கசப்பாக கடந்த காலங்களில் மாறியது. முக்கியமாக உக்ரைன் போர் விஷயத்தில் இரண்டு நாடுகளுக்கு இடையிலான உறவு கசந்தது.

உக்ரைன் விவகாரத்தில் இந்தியா நடுநிலை நிலைப்பாட்டை எடுத்ததை அமெரிக்கா விரும்பவில்லை. அதிலும் ரஷ்யாவிடம் இருந்து குறைந்த விலையில் எண்ணெய் வாங்கியதையும் அமெரிக்கா விரும்பவில்லை. இந்த நிலையில்தான் இரண்டு நாடுகளின் உறவை சரி செய்யும் விதமாகவும், பல்வேறு முக்கிய ஆலோசனைகளை மேற்கொள்ளும் விதமாகவும் பிரதமர் மோடி அமெரிக்கா சென்றுள்ளார்.
அமெரிக்கா சென்ற பிரதமர் மோடிக்கு அங்கு பிரம்மாண்ட வரவேற்பு கொடுக்கப்பட்டது. முக்கியமாக பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று அமெரிக்க அதிபர் ஜோ பிடன் மற்றும் அவரின் மனைவி, ஜில் பிடன் ஆகியோர் வெள்ளை மாளிகையில் தனிப்பட்ட விருந்து அளித்தனர்.
அவர்களுடன் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் மற்றும் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோர் உடன் இருந்தனர். அமெரிக்கா சென்ற பிரதமர் மோடிக்கு ஆண்ட்ரூஸ் விமான தளத்தில் சம்பிரதாய வரவேற்பும், ராணுவ கார்ட் ஆப் ஹானர் மரியாதையும் அளிக்கப்பட்டது. வெள்ளை மாளிகையில் சைவ விருந்து பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது.
எதிர்ப்பு: ஒரு பக்கம் பிரதமர் மோடிக்கு மிக்பெரிய வரவேற்பு கொடுக்கப்பட்ட நிலையில் இன்னொரு பக்கம் அவருக்கு கடுமையான எதிர்ப்புகளும் வைக்கப்பட்டு வருகின்றன. முக்கியமாக இந்தியாவில் இஸ்லாமியர்கள் தாக்கப்படுவதாகவும், இஸ்லாமியர்களுக்கு எதிராக சட்டங்கள் கொண்டு வரப்படுவதாகவும், இந்தியாவில் அரசியலமைப்பு சட்டம் மதிக்கப்படவில்லை என்றும் மோடிக்கு எதிராக குரல்கள் வைக்கப்படுகின்றன.
இதனால் ஒரு பக்கம் மோடி செல்லும் இடங்களில் எல்லாம் அவருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்படுகிறது. இந்த நிலையில்தான் பிரதமர் மோடியை வெர்மோண்ட் மாகாண செனட்டர் பெர்னி சாண்டர்ஸ் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். அவர் செய்துள்ள போஸ்டில், பிரதமர் மோடியின் அரசாங்கம் இந்தியாவில் பத்திரிகைகளை ஒடுக்கி உள்ளது. அங்கே இருக்கும் சிவில் சமூக ஒற்றுமையை சிதைத்து உள்ளது.
அவரின் அரசு தனது அரசியல் எதிரிகளை சிறையில் அடைத்தது மற்றும் இந்தியாவின் மத சிறுபான்மையினருக்கு எதிராக கடுமையான ஒடுக்குமுறைகளை ஏவி விட்டுள்ளது. இந்து தேசியவாதத்தை முன்வைத்து ஒடுக்குமுறைகளை மேற்கொண்டு வருகிறது. அதிபர் பிடன் மோடியுடனான சந்திப்பில் இந்த உண்மைகளை பற்றி அவரிடம் விளக்கமாக பேச வேண்டும் என்று பெர்னி சாண்டர்ஸ் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
யார் இவர்?: பெர்னி சாண்டர்ஸ் வைத்த விமர்சனங்கள் அமெரிக்காவில் மிகப்பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலில் பிடனுக்கு எதிராக நடந்த ஜனநாயக கட்சியின் உட்கட்சி பிரைமரி தேர்தலில் பெர்னி போட்டியிட்டார்.
கடைசியில் நிதி திரட்ட முடியாமல் அவர் விலகிக்கொண்டார். அமெரிக்காவில் ஜனநாயக கட்சிக்கு ஒவ்வொரு நகரத்திலும் ஒரு பிரதிநிதி இருப்பார். மொத்தம் 1,991 பிரதிநிதிகள் இப்படி அந்தகட்சிக்கு இருக்கிறார்கள். இதில் பெரும்பாலான பிரதிநிதிகள் யாருக்கு வாக்களிக்கிறார்களோ, அவர்கள்தான் அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பாக நிற்க முடியும். ஜனநாயக கட்சி சார்பாக பெர்னி சாண்டர்ஸ், ஜோ பிடன், பிட்டே புட்டிக், எலிசபெத் வாரன் ஆகியோர் இந்த பிரைமரி தேர்தலில் போட்டியிட்டனர்.
கடைசியில் நிதி திரட்ட முடியாமல் பெர்னி விலகிக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் சோசலிச கொள்கை கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
