டிரம்ப் பிரச்சாரம் செய்யும் இடத்தில் காரில் வெடிபொருட்கள்.. 3வது முறையாக கொல்ல சதியா? போலீஸ் மறுப்பு
நியூயார்க்: அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் தேர்தல் பரப்புரை செய்ய இருந்த இடத்திற்கு அருகில் இருந்த காரில் வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மூன்றாவது முறையாக டிரம்பை கொல்ல சதி வேலையா என சந்தேகிக்கப்பட்டது. ஆனால், டிரம்ப் பிரச்சாரம் செய்ய இருந்த இடத்திற்கு அருகே வாகனத்தில் வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக பரவிய தகவலை நியூயார்க் போலீசார் மறுத்துள்ளனர்.
அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் 5 ஆம் தேதி அதிபர் தேர்தல் நடக்க உள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக்கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பும், ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸும் போட்டியிடுகின்றனர். அதிபர் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தீவிரமாக பிரச்சாரம் நடந்து வருகிறது.

இந்நிலையில், இன்று நியூயார்க்கில் யூனியண்டாலே என்ற இடத்தில் டொனால்ட் டிரம்ப் பிரச்சாரம் மேற்கொள்ள இருந்தார். அதற்கு முன்னதாக, அப்பகுதியில் இருந்த ஒரு வாகனத்தில் வெடிபொருட்கள் கண்டெடுக்கப்பட்டதாக தகவல் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், இந்த தகவலை நியூயார்க் போலீசார் மறுத்துள்ளனர்.
நியூயார்க் காவல்துறை எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "இன்று காலை லாங் ஐலேண்டில் உள்ள யூனியன்டேலில் உள்ள நாசாவ் கொலிசியத்திற்கு வெளியே ஒரு வாகனத்தில் வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக பரவி வரும் தகவல்கள் ஆதாரமற்றவை." எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, ஃபுளோரிடா மாகாணத்தின் வெஸ்ட் பாம் பீச் பகுதியில் டொனால்ட் டிரம்ப்புக்கு சொந்தமான கோல்ஃப் கிளப் உள்ளது. இங்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று ட்ரம்ப் கோல்ஃப் விளையாடிக் கொண்டிருந்தபோது வேலிக்கு வெளியே இருந்து யாரோ துப்பாக்கியால் சுட முயற்சித்துள்ளனர். சுதாரித்துக் கொண்ட ரகசிய சேவை பாதுகாப்பு அதிகாரிகள் டொனால்ட் டிரம்ப்பை பாதுகாப்பாக அழைத்து சென்றனர்.
அதற்கும் முன்னதாக கடந்த ஜூலை மாதம் பென்சில்வேனியாவில் நடந்த பிரச்சார பேரணியில் டொனால்ட் டிரம்ப்பை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடந்தது. இதில் ஒரு குண்டு அவரது காது பகுதியில் பாய்ந்து காயம் ஏற்படுத்தியது. துப்பாக்கியால் சுட்ட நபர் பாதுகாப்பு அதிகாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். தொடர் தாக்குதல் சம்பவங்கள் காரணமாக டிரம்ப்புக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் டொனால்ட் டிரம்ப் தேர்தல் பரப்புரை செய்ய உள்ள இடத்திற்கு அருகே கார் ஒன்று வெடிமருந்துகளுடன் கண்டுபிடிக்கப்பட்டதாக அமெரிக்காவில் தகவல் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே ட்ரம்ப் மீது இரண்டு முறை துப்பாக்கிச்சூடு முயற்சி நடந்த நிலையில், தேர்தல் பரப்புரை மேற்கொள்ள இருந்த இடத்திற்கு அருகில் வெடிமருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக வெளியான தகவல் பரபரப்பை எகிற வைத்தது. ஆனால், இந்த தகவலை நியூயார்க் போலீசார் மறுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications