அடேங்கப்பா.. அசுர வேகத்தில் கேலக்ஸியை விட்டு வெளியே செல்லும் பொருள்! ஆச்சரியத்தில் விஞ்ஞானிகள்
நியூயார்க்: மணிக்கு சுமார் 10 லட்சம் கி.மீ வேகத்தில் பயணிக்கும் பொருளை நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். வழக்கமாக விண்வெளியில் ஒளியும், காமா கதிர்களும்தான் அதிக வேகத்தில் பயணிக்கும். ஆனால் பூமி போன்று திடமாக இருக்கும் பெரிய பொருள் ஒன்று எப்படி 10 கி.மீ வேகத்தில் பயணிக்கிறது? என விஞ்ஞானிகள் ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர்.
விண்வெளியில் பயணிப்பது என்பது பாலைவனத்தை விட்டு வெளியேற நினைக்கும் எறும்பின் முயற்சியை போன்றதாகும். எறும்பால் நிச்சயம் ஒரு பாலைவனத்தைவிட்டு வெளியேற முடியாது. அதற்கான முயற்சியில் அது இறந்துவிடும். மனிதர்களாகிய நாமும் அப்படித்தான். இப்போது இருக்கும் டெக்னாலஜியை வைத்துக்கொண்டு நம்மால் பக்கத்தில் இருக்கும் ஆண்ட்ரோமெடா கேலக்ஸிக்கு கூட போக முடியாது. அதற்குள் இறந்துவிடுவோம்.

இப்படி இருக்கையில் மொத்த விண்வெளியில் பயணித்து ஆய்வு செய்வது என்பது இப்போதைக்கு நடக்காத காரியம். ஆனால், அதற்கு பதிலாக விண்வெளியில் பயணிக்கும் பொருட்களை ஆய்வு செய்வதன் மூலம், நாம் இருக்கும் விண்வெளி எப்படியானது என்பதை புரிந்துக்கொள்ள முடியும்.
இப்படியான ஆய்வு ஒன்றின்போதுதான், அதி வேகமான பொருளை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அதாவது விண்வெளி ஆய்வில் பொதுமக்களை, தனிநபர்களை பங்கெடுக்க வைக்கும் விதமாக நாசா, Citizen Scientists என்கிற ஆய்வு தளத்தை நடத்தி வருகிறது. இதில் Backyard Worlds எனும் ப்ராஜெக்ட்டில் சிலர் பங்கேற்று ஆய்வுகளை மேற்கொண்டு வந்திருந்தனர். இவர்களின் பணி, விண்வெளியில் உள்ள குள்ள கோள்களை கண்டுபிடிப்பதுதான்.
குள்ள கோள்கள் என்பது, அளவில் சிறியவை. இது நட்சத்திரத்திற்கான பண்புகளை பெற்றிருக்கும். ஆனால் முழுமையான நட்சத்திரமாக உருவாகியிருக்காது. அதே நேரத்தில் கோள்களை போலவும் இருக்காது. இரண்டுக்கும் இடைப்பட்ட, தோல்வியடைந்த நட்சத்திரமாக இருக்கும். இதில் brown dwarfs எனப்படும் பழுப்பு குள்ள கோள்கள் என்கிற வகை உண்டு. இதை கண்டுபிடிப்பது, ஆய்வு செய்வதைதான் Backyard Worlds ப்ராஜெக்ட்டில் சிலர் செய்து வருகிறார்கள்.
இவர்கள் சமீபத்தில் CWISE J124909.08+362116.0 எனப்படும் பழுப்பு குள்ள கோளை கண்டுபிடித்திருக்கிறார்கள். பழுப்பு குள்ள கோள்கள் பிரபஞ்சத்தில் அதிகம் இருக்கிறது. ஆனால் இந்த கோள் மட்டும் கேலக்ஸியை விட்டு அதிவேகமாக வெளியேறிக்கொண்டிருக்கிறது. எவ்வளவு வேகம் என்றால், மணிக்கு 10 லட்சம் கி.மீ வேகம். அப்படியெனில் ஒரு நிமிடத்திற்கு 16,666 கி.மீ வேகம், விநாடிக்கு 277.77 கி.மீ. இந்த வேகத்தில் பயணித்தால் இந்தியாவிலிருந்து பொலிவியாவுக்கு ஒரு நிமிடத்தில் சென்றுவிடலாம்.
இவ்வளவு வேகத்தில் பயணிக்கும் பழுப்பு குள்ள கோளை விஞ்ஞானிகள் இதற்கு முன் பார்த்ததில்லை. பிரபஞ்சத்தில் அதிவேகமான ஒளிதான். அதன் பிறகு காமா கதிர்கள் ஒளியின் 99.99% வேகத்தில் பயணிக்கும். ஆனால் அதிக எடை கொண்ட பழுப்பு குள்ள கோள் எப்படி இவ்வளவு வேகத்தில்? அதெப்படி திமிங்கலம்? என விஞ்ஞானிகள் மூக்கு மேலே விரலை வைத்து ஆச்சரியப்பட்டிருக்கின்றனர். மட்டுமல்லாது இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட எந்த பழுப்பு குள்ள கோளும் கேலக்ஸியை விட்டு வெளியே சென்றதில்லை. அந்த வகையில் CWISE J124909.08+362116.0 கொஞ்சம் ஸ்பெஷல்தான்.
பொதுவாக நட்சத்திரங்கள் இரண்டாகவே இருக்கும். சிலது மட்டும் சூரியனை போல சிங்கிள் பசங்களாக இருக்கும். இந்த பார்முலாவின் அடிப்படையில் பார்த்தால் CWISE J124909.08+362116.0 எனும் பழுப்பு குள்ள கோள், ஏதாவது ஒரு நட்சத்திரத்திற்கு துணை நட்சத்திரமாக இருந்திருக்கலாம். அந்த நட்சத்திரம் வெடிக்கும்போது, இந்த குள்ள கோள் தூக்கியடிக்கப்பட்டிருக்கலாம். இப்படியாக CWISE J124909.08+362116.0 மணிக்கு 10 லட்சம் கி.மீ வேகத்தில் பயணிக்கிறது என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். விண்வெளியில் காற்று இல்லை என்பதால் எந்த பொருளின் வேகமும் குறையாது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications