சுனிதா வில்லியம்ஸுக்கு அடிச்சது ஜாக்பாட்.. விண்வெளியில் 2வது முறையாக.. பிறந்தநாள் கொண்டாட்டம்
நியூயார்க்: இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் தனது 59 ஆவது பிறந்த நாளை செப்டம்பர் 19 ஆம் தேதி விண்வெளியில் கொண்டாடவுள்ளார். விண்வெளியில் இரண்டாவது முறையாக இவர் பிறந்தநாளைக் கொண்டாடவுள்ளார்.
பூமியில் இருந்து கிட்டத்தட்ட 400 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது சர்வதேச விண்வெளி மையம். இந்த விண்வெளி மையத்துக்கு விண்வெளி வீரர்கள் சென்று ஆய்வு செய்து வருவது வழக்கம். இப்பணிகளை நாசா நிறுவனம்தான் செய்து வந்தது. இந்நிலையில், இப்பணிகளை தனியார் வசம் ஒப்படைக்க முடிவெடுத்த நாசா போயிங் நிறுவனத்திடம் ஒப்படைத்தது.

அமெரிக்காவின் தனியாா் நிறுவனமான போயிங் ஸ்டாா்லைனா் விண்கலத்தை தயாரித்த நிலையில், சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகிய இருவரையும் சர்வதேச விண்வெளி மையத்திற்கு கடந்த ஜூன் 5 ஆம் தேதி சென்றனர். இதையடுத்து, ஜூன் 7 ஆம் தேதி ஸ்டார்லைனர் விண்கலம் சர்வதேச விண்வெளி மையத்தை அடைந்தது.
சுனிதா, வில்மோர் இருவரும் ஜூன் 14 ஆம் தேதி திரும்பவிருந்த நிலையில், ஸ்டார்லைனர் விண்கலனில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அவர்கள் இருவரும் விண்வெளி மையத்திலேயே இருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, ஸ்டார்லைனர் விண்கலத்தை சரி செய்யும் பணியில் நாசா விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டனர்.
இருப்பினும், ஹீலியம் கசிவு மற்றும் த்ரஸ்டர்களில் ஏற்பட்ட சிக்கல்கள் தீர்க்க முடியாத காரணத்தால், அவர்கள் இருவரும் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில்தான் பூமிக்குத் திரும்புவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து பூமிக்குத் திரும்ப 6 மணி நேரம் ஆகும். இந்த 6 மணி நேரத்தில் த்ரஸ்டர் ஃபெயிலியர், வால்வு லீக்கேஜ் போன்ற பிரச்னைகள் ஏற்படாமல் இருக்க வேண்டும்.
ஆனால், ஸ்டார்லைனர் விண்கலத்தில் இந்தப் பிரச்னை இன்னும் சரி செய்யப்படவில்லை. எனவே, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் க்ரூ விண்கலம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு 2025 ஆம் ஆண்டு செல்கிறது. அந்த விண்கலத்தில் சுனிதாவும், வில்மோரும் திரும்புவார்கள் என்று நாசா தெரிவித்துள்ளது.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் 1965 ஆம் ஆண்டு செப்டம்பர் 19 ஆம் தேதி பிறந்தார். இவர் முதல் முறையாக 2006 - 2007 ஆம் ஆண்டில் விண்வெளிக்குச் சென்றார். கடந்த 2012 ஆம் ஆண்டு சுனிதா வில்லியம்ஸ் ஜூலை மாதம் முதல் நவம்பர் மாதம் வரை விண்வெளியில் இருந்ததால், அங்கு முதல்முறையாக பிறந்தநாள் கொண்டாடினார்.
இந்நிலையில், வரும் செப்டம்பர் 19 ஆம் தேதி தன் 59 ஆவது பிறந்தநாளை சுனிதா வில்லியம்ஸ் கொண்டாடவுள்ளார். விண்வெளியில் சுனிதா கொண்டாடும் இரண்டாவது பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications