வொர்க் ஃப்ரம் ஹோம் முடிவுக்கு வரவேண்டும்.. எல்லாம் தப்பாகிடுச்சி.. வலியுறுத்தும் டெக் நிறுவனங்கள்!
நியூயார்க்: வொர்க் ஃப்ரம் ஹோம் (Work From Home) எனப்படும், வீட்டிலிருந்தே வேலை செய்யும் முறை விரைவில் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும் என்று டெக் உலகில் குரல்கள் எழுந்து வருகின்றன. குறிப்பாக இந்த வேலை முறை என்பது அடிப்படையில் தவறானது என்று எலான் மஸ்க் கூறியுள்ளார்.
கொரோனா பெரும் தொற்று காலத்தில் எல்லோரும் வேலையை இழந்திருந்த நிலையில், டெக் நிறுவனங்கள் மாற்று யோசனையை முன்வைத்தன. அதாவது ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்ய சொல்வது. இப்படியாக கோவிட் காலத்திலும், உலகம் முழுவதும் கோடிக்கணக்கான டெக் ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்தனர். சில நிறுவனங்களில் இன்னமும் இந்த முறை தொடர்ந்து வருகிறது. ஆனால், தற்போது இதற்கு எதிராக இதே டெக் நிறுவனங்கள் பேச தொடங்கியுள்ளன.

காரணம் டெக் துறையில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் வளர்ச்சிதான். அதாவது கூகுள் எவ்வளவு பெரிய நிறுவனம்? கூகுளிடம் இல்லாத டேட்டாக்களே இல்லை என்று சொல்லலாம். ஆனால் AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு பிரவில், Open AI அசால்டாக கூகுளை தூக்கி சாப்பிட்டு விட்டது. டெக் துறையில் இது மிகப்பெரிய சம்பவம். இதற்கு பதிலடி கொடுக்க கூகுள் DeepMind எனும் AI-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. ஆனால் விஷயம் என்னவெனில் இந்த DeepMindல் வேலை செய்த திறமையானவர்கள் பலர் கூகுளிலிருந்து கழன்றுக்கொண்டு தனியாக AI ஸ்டார்ட் அப் நிறுவனங்களை உருவாக்கி வருகின்றனர்.
உதாரணமாக பாரிஸை சேர்ந்த H எனும் ஸ்டார்ட் அப், Mistral AI உள்ளிட்டவை கூகுளின் DeepMindல் பணியாற்றியவர்களால் உருவாக்கப்பட்டதாகும். இப்படி வேலைக்கு வருபவர்கள் எல்லாம் தனியாக ஸ்டார்ட் அப் ஆரம்பித்துவிட்டால் நான் என்னதான் செய்வது? என்று கூகுள் புலம்ப தொடங்கியுள்ளது. அதேபோல இதற்கு காரணம் வொர்க் ஃப்ரம் ஹோம் சிஸ்டம்தான் என்றும் கூகுள் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
கூகுளின் தற்போதைய சிஇஓ சுந்தர் பிச்சை, ஊழியர்களின் வாழ்க்கை சூழல் மிகவும் முக்கியம் என்றும், வேலையையும், வாழ்க்கை சூழலையும் அவர்கள் பேலன்ஸ் செய்ய வேண்டும் என்றும் கூறியிருந்தார். அதாவது ஊழியர்கள் வொர்க் ஃப்ரம் ஹோம் செய்வது பிரச்னையில்லை என்றும் முன்பு கூறியிருந்தார். ஆனால், இதுதான் AI துறையில் கூகுளின் பின்னடைவுக்கு காரணம் என்று அதன் முன்னாள் சிஇஓ எரிக் ஷ்மிட் கூறியுள்ளார்.
இதே கருத்தை எலான் மஸ்க்கும் கூறியிருந்தது கவனிக்கத்தக்கது. "வெறுமென உற்பத்தியை மட்டும் குறிப்பிட்டு நான் இப்படி சொல்லவில்லை. வொர்க் ஃப்ரம் ஹோம் என்பது தார்மீக ரீதியாகவே தவறானது" என்று கூறியிருந்தார். கார் உற்பத்தி துறையில் பணியாற்றுபவர்கள், உணவு விநியோகிப்பவர்கள் போன்றோர் மட்டும் வெளியில் சென்று வேலை செய்வதும், டெக் நிறுவனத்தை சேர்ந்தவர்கள் வீட்டிலிருந்து வேலை செய்வதையும் எப்படி ஏற்றுக்கொள்வது? என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
Open AI சிஇஓ சாம் ஆல்ட்மேன், "அலுவலகத்திலிருந்து வேலை செய்பவர்கள் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்குகிறார்கள். ஆனால், வொர்க் ஃப்ரம் ஹோம் வேலையில் இருப்பவர்கள் குழப்பத்தில் இருக்கிறார்கள்" என்று கூறியிருந்தார். கோவிட் காலத்தில் வொர்க் ஃப்ரம் ஹோம் சிஸ்டம்தான் சிறப்பானது என்று பேசிய டெக் நிறுவனங்கள் இப்போது, அலுவலகத்தில் வந்து வேலை செய்வதுதான் சிறந்தது என்று கூற தொடங்கியுள்ளன. உற்பத்தியை அதிகரிக்கவே, அலுவலகத்திற்கு வந்து வேலை செய்ய வேண்டும் என்று டெக் நிறுவனங்கள் வலியுறுத்துவதாக சொல்லப்படுகிறது.
மறுபுறம், அலுவலகத்திற்கு வந்து வேலை செய்தால்தான் உற்பதி அதிகரிக்கும் என்கிற கூற்றையும் பலர் மறுத்துள்ளனர். உதாரணமாக பெங்களூரை எடுத்துக்கொள்ளுங்கள். இந்த நகரத்தில் வேலைக்கு செல்ல வேண்டும் எனில், குறைந்தபட்சம் 1-4 மணி நேரம் பயணிக்க வேண்டும். சிட்டிக்கு நடுவே வீடு எடுத்தால் அதன் வாடகை, மொத்த சம்பளத்தையும் கரைத்துவிடும். எனவே 10-20 கி.மீக்கு அப்பால் வசித்துக்கொண்டு ஊழியர்கள் அலுவலகம் சென்று வருகின்றனர்.
தினமும் 1-4 மணி நேரம் பயணம் செய்து அலுவலகம் செல்லும்போது அவர்களால் எப்படி முழு உற்பத்தி திறனை கொடுக்க முடியும்? என்றும் பல்வேறு தரப்பினர் கேள்வி எழுப்பியுள்ளனர். எப்படி இருப்பினும் HCL, Wipro, TCS, Sonata software, Infosys உள்ளிட்ட பெரும் நிறுவனங்கள் வொர்க் ஃப்ரம் ஹோம் முறையை ஒழித்துக்கட்ட தொடங்கிவிட்டன. இதற்கிடையில் சில நாட்களுக்கு முன்னர் இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி, "இந்தியர்கள் வாரத்தில் 70 மணி நேரம் வேலை செய்ய வேண்டும்" என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications