"ஃபோபோஸ்".. செவ்வாய்க்கு பக்கத்தில்.. அது என்ன நெளிஞ்ச உருளைக்கிழங்கு மாதிரி?.. வைரலான நாசா போட்டோ!
நியூயார்க்: செவ்வாய் கிரகத்தில் இருந்து நாசா வெளியிட்ட புகைப்படம் ஒன்று இணையம் முழுக்க வைரலாகி வருகிறது. பார்க்க உருளைக்கிழங்கு போல இருக்கும் இந்த புகைப்படம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
உங்கள் வீட்டு கிச்சனில் இருக்கும் பெரிய உருளை கிழங்கு ஒன்றை எடுத்து, அதை வானத்தை நோக்கி நீங்கள் வீசி எறிந்து, ஒருவேளை அது செவ்வாய் கிரகத்திற்கு போய் மிதந்தால் எப்படி இருக்கும்? அப்படி ஒரு புகைப்படத்தைதான் நாசா வெளியிட்டு இருக்கிறது.
Mars Reconnaissance Orbiter spacecraft எனப்படும் செவ்வாய் கிரகத்தில் உள்ள நாசாவின் ஆர்பிட்டார் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படம் ஆகும் இது. இதில் இருக்கும் மிக சக்தி வாய்ந்த கேமரா மூலம் இந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

உருளைக்கிழங்கு
நாசா வெளியிட்டு இருக்கும் இந்த புகைப்படம் பார்க்க அப்படி உருளைக்கிழங்கு போலவே இருக்கிறது. பல இடங்களில் சிறு சிறு குழிகளாக, நெளிந்து போன உருளைக்கிழங்கு போல இது இருக்கிறது. பார்க்க உருளை கிழங்கு போல இருக்கும் இதுதான் செவ்வாயின் இரண்டு நிலவுகளில் ஒன்றான ஃபோபோஸ். இது செவ்வாயின் மிகப்பெரிய நிலவு ஆகும்.

எவ்வளவு
27 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட இந்த ஃபோபோஸ் நிலவு செவ்வாய் கிரகத்தை 6000 கிமீ தூரத்தில் சுற்றி வருகிறது. சூரிய குடும்பத்தில் கிரகம் ஒன்றை மிக குறைந்த தொலைவில் சுற்றும் நிலவு ஃபோபோஸ்தான். செவ்வாய் கிரகத்தை சுற்றும் இன்னொரு நிலவான டெயிமோசை விட இது அளவில் பெரியது. டெயிமோஸ், ஃபோபோஸ் என்பது கிரேக்க புராணத்தில் வரும் போர் கடவுளான ஏர்சின் இரட்டை புதல்வர்களின் பெயர். இந்த இரண்டு பெயரின் அர்த்தமும் பயம் என்பதாகும்.

நாசா
ஃபோபோஸ் நிலவு முழுக்க பல இடங்களில் சிறு சிறு குழிகள் காணப்படுகிறது. அங்கு நிலவும் வானிலை, தொடர்ந்து செவ்வாய் கிரகத்தை சுற்றுவது, செவ்வாய் கிரகத்தின் ஈர்ப்பு விசை ஆகியவைதான் இந்த குழிக்கு காரணம் ஆகும். இந்த ஃபோபோஸ் நிலவில் ஒரு பக்கம் பெரிய குழி காணப்படுகிறது. இது 9 கிமீ கொண்ட குழி ஆகும். இதனால்தான் இந்த ஃபோபோஸ் உருளைக்கிழங்கு போல காட்சி அளிக்கிறது.
Recommended Video

நாசா
நாசா இந்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து, அதன் வரலாற்றை எழுதி உள்ளது. 1877 ல் அமெரிக்க ஆராய்ச்சியாளர் ஆஸ்பா ஹால் மூலம் இந்த இரண்டு நிலவும் கண்டுபிடிக்கப்பட்டது. இதில் ஃபோபோஸ் நிலவு தற்போது செவ்வாய் கிரகத்தை நோக்கி இழுக்கப்பட்டு வருகிறது. அதன் ஈர்ப்பு விசையால் ஃபோபோஸ் செவ்வாய் கிரகத்தில் மோதும் வாய்ப்பு உள்ளது.

எவ்வளவு தூரம்
எல்லா நூற்றாண்டும் 1.8 மீட்டர் தூரம் இந்த நிலவு செவ்வாயை நோக்கி நகர்கிறது. இதனால் இன்னும் 50 மில்லியன் ஆண்டுகளில் இது செவ்வாய் கிரகத்தில் மோதிவிடும். இது நிலவாக இருக்க வாய்ப்பு இல்லை, இது சாதாரண விண்கல்லாக இருக்கலாம், செவ்வாய் அருகில் வந்த போது அதன் ஈர்ப்பு விசையால் கவரப்பட்டு, அதை சுற்றி வருகிறது என்ற தியரியும் கூட ஆராய்ச்சியாளர்கள் இடையே நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications