அமெரிக்கா எடுக்கும் பயங்கர முடிவு.. தங்கத்தின் விலை தாறுமாறாக மாறப்போகிறது.. என்ன நடக்கும்?
நியூயார்க்: சர்வதேச தங்கச் சந்தையில் அமெரிக்க மத்திய வங்கியின் (ஃபெடரல் ரிசர்வ்) அடுத்தகட்ட முடிவுகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தவுள்ளன. எதிர்வரும் நாட்களில் அமெரிக்கா எடுக்கவுள்ள நடவடிக்கைகள், நடப்பு ஆண்டு முழுவதும் தங்கத்தின் விலையை அசுர வேகத்தில் அதிகரிக்கச் செய்யும் என நிபுணர்கள் கருதுகின்றனர்.
அமெரிக்க மத்திய வங்கியின் பெஞ்ச்மார்க் ஃபெடரல் ஃபண்ட்ஸ் விகிதங்கள், தொடர்ந்து ஆறாவது முறையாக 4.25% முதல் 4.5% என்ற நிலையிலேயே தக்கவைக்கப்பட்டுள்ளன. இது தற்காலிகமான முடிவாக இருந்தாலும், அடுத்த சில வாரங்களில், அதாவது இந்த மாத இறுதி அல்லது அடுத்த மாத தொடக்கத்தில் இந்த விகிதங்கள் குறைக்கப்படலாம் என பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.

தங்கம் விலை : ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகிதம்
ஃபெடரல் ரிசர்வ் அதிகாரிகள் வெளியிட்டுள்ள கணிப்புகளின்படி, 2025ஆம் ஆண்டில் மொத்தம் 50 அடிப்படைப் புள்ளிகள் வரை வட்டி விகிதக் குறைப்பு இருக்கும். எனினும், 2026ஆம் ஆண்டுக்கான வட்டி விகிதக் குறைப்பு கணிப்பு 25 அடிப்படைப் புள்ளிகளாகக் குறைக்கப்பட்டுள்ளது. முன்னதாக, 2026ஆம் ஆண்டிலும் 50 அடிப்படைப் புள்ளிகள் வரை குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதுவரை ஒரு அடிப்படை புள்ளி கூட குறைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகிதங்களைக் குறைக்கும்போது, அமெரிக்கப் பத்திரங்கள் மற்றும் சேமிப்புகளில் முதலீட்டாளர்கள் பெறும் வருமானம் குறையும். இதன் விளைவாக, முதலீட்டாளர்கள் டாலரை விட்டு வெளியேறி, தங்கத்தை நோக்கி நகர்வார்கள். இது டாலருக்கான தேவையை குறைத்து, தங்கத்தின் மதிப்பை அதிகரிக்கும். தற்போதைய நிலையில், வட்டி விகிதங்கள் குறைக்கப்படாமலும், அதிகரிக்கப்படாமலும் உள்ளது டாலர் மதிப்பில் நிலையற்ற தன்மையை நீடித்து தங்கத்தின் விலையை உயர்த்தி வருகிறது.
தங்கம் விலை என்ன?
மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள், டிரம்ப்பின் வரிக் கொள்கைகள் குறித்த நிச்சயமற்ற தன்மை, மற்றும் அமெரிக்கப் பொருளாதாரத்தில் காணப்படும் பலவீனமான அறிகுறிகள் ஆகியவை டாலரின் தேவையை குறைத்து அதன் மதிப்பை வலுவிழக்கச் செய்கின்றன. இந்தச் சவாலான சூழல் நீடிப்பதால், தங்கத்தின் விலை தொடர்ந்து உயரும் வாய்ப்புகள் உள்ளன.
ஈரான்-இஸ்ரேல் மற்றும் ரஷ்யா-உக்ரைன் போர்கள் போன்ற புவிசார் அரசியல் பதற்றங்கள் காரணமாக, உலக நாடுகள் பாதுகாப்பான முதலீடுகளை நோக்கித் திரும்பியுள்ளன. இந்த போர்கள் உலகப் பங்குச் சந்தைகளில் கடுமையான அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளன. இதனால், தங்கம் விலை தொடர்ந்து நான்காவது நாளாக உயர்ந்து, கடந்த இரண்டு மாதங்களில் இல்லாத உச்சத்தை தொட்டுள்ளது.
தங்கம் விலை உயர்வு : ஸ்பாட் தங்கத்தின் விலை
அமெரிக்காவில் ஸ்பாட் தங்கத்தின் விலை நேற்றும் உயர்ந்து, ஒரு அவுன்ஸ் $3,442.09 ஆக 0.3% அதிகரித்தது. இது ஏப்ரல் 22ஆம் தேதிக்குப் பிறகு கண்ட அதிகபட்ச விலையாகும். இதேபோல், அமெரிக்க தங்கத்தின் எதிர்கால விலையும் 0.3% உயர்ந்து $3,461.90 ஆக வர்த்தகமானது.
புவிசார் அரசியல் காரணிகள் மற்றும் பொருளாதார நிச்சயமற்ற தன்மை நிலவும் காலகட்டங்களில், தங்கம் ஒரு பாதுகாப்பான முதலீடாகக் கருதப்படுகிறது. கடந்த சில வாரங்களாகக் குறைந்திருந்த தங்கம் விலை தற்போது மீண்டும் படிப்படியாக உயர்ந்து வருகிறது. இந்த உயர்வு தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது, முதலீட்டாளர்கள் மத்தியில் தங்கத்தின் மீதான ஆர்வம் அதிகரித்து காணப்படுகிறது.
ஆசிய பசிபிக் மூத்த சந்தை ஆய்வாளர் கெல்வின் வாங் இது குறித்துக் கூறுகையில், "ஈரான்-இஸ்ரேல் மோதல்கள் காரணமாக அரசியல் ஆபத்துகள் அதிகரித்துள்ளன. இது தங்கத்திற்கான பாதுகாப்பான முதலீட்டுத் தேவையை உயர்த்தியுள்ளது. உலக அளவில் பங்குச்சந்தைகள் மூச்சு முட்டத் தொடங்கியுள்ளதால், கடுமையான சரிவுகள் ஏற்படக்கூடும். போர் காரணமாக ஏற்பட்ட இந்த நிலையற்ற தன்மை தங்கத்தின் விலையை நிச்சயம் உயர்த்தும். போர் தீவிரமடைய தீவிரமடைய, தங்கத்தின் விலை கண்டிப்பாக உயரும். எனவே, இப்போதே முடிந்த அளவு தங்கம் வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும் என்பது கட்டாயம் ஏற்பட்டுள்ளது," என்று குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications