சான்ஸே இல்லை.. இந்தியாவுடன் இனி பேச்சே இல்லை வீச்சுதான்.. டிரம்ப் பிடிவாதம்.. கடும் வார்னிங்
நியூயார்க்: இந்தியப் பொருட்களின் இறக்குமதி வரிகளை அமெரிக்க நிர்வாகம் இரு மடங்காக உயர்த்தியதை அடுத்து, கட்டண தகராறு தீர்க்கப்படும் வரை இந்தியாவுடன் வர்த்தக பேச்சுவார்த்தைகள் எதுவும் நடத்தப்படாது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்தியாவுடன் மோதல் போக்கை நிறுத்தி, பேச்சுவார்த்தை மீண்டும் தொடருமா என்று கேட்டபோது, "இல்லை, இந்தியா உடன் உள்ள மோதல் தீர்க்கப்படும் வரை பேச்சுவார்த்தை இல்லை" என்று அவர் பதிலளித்தார்.

இந்தியா மீது கூடுதல் வரி
டிரம்ப் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25% கூடுதல் வரி விதிக்கும் நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டார். இந்த உத்தரவில், ரஷ்ய எண்ணெயை இந்தியா நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இறக்குமதி செய்வது அமெரிக்காவிற்கு அசாதாரணமான மற்றும் மோசமான அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. தேசிய பாதுகாப்பு, வெளியுறவுக் கொள்கை கவலைகள் மற்றும் பிற வர்த்தக சட்டங்களை மேற்கோள் காட்டி அவர் இந்தியாவிற்கு எதிராக அபராதம் விதித்தார்.
இந்த உத்தரவுக்குப் பிறகு, இந்தியப் பொருட்களுக்கான மொத்த வரி 50% ஆக உயரும். ஆரம்ப வரிகள் ஆகஸ்ட் 7 அன்று அமலுக்கு வரும் நிலையில், கூடுதல் வரி 21 நாட்களுக்குப் பிறகு அமலுக்கு வரும். இது அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் அனைத்து இந்தியப் பொருட்களுக்கும் பொருந்தும்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் விடுத்துள்ள எச்சரிக்கையில், நாங்கள் விரைவில் பரஸ்பர கட்டணங்களை அறிவிப்போம். ஏனென்றால் அவர்கள் எங்களிடம் கட்டணம் வசூலிக்கிறார்கள், நாங்கள் அவர்களிடம் கட்டணம் வசூலிக்கிறோம். அவ்வளவுதான்.. விஷயம் மிகவும் எளிமையானது. இந்தியா அல்லது சீனா அல்லது வேறு எந்த நாடாக இருந்தாலும் சரி.. நாடு எதுவாக இருந்தாலும், அவர்கள் என்ன கட்டணம் வசூலித்தாலும், நாங்கள் நியாயமாக இருக்க விரும்புகிறோம்.. நாங்களும் அதே கட்டணம் வசூலிப்போம்.. அவர்கள் எங்களிடம் கட்டணம் வசூலிக்கிறார்கள், நாங்கள் அவர்களிடம் கட்டணம் வசூலிக்கிறோம் அவ்வளவுதான் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க வரி - இந்தியாவிற்கு சிக்கல்
அமெரிக்க அதிகாரிகளின் கூற்றுப்படி, ஆரம்ப 25% வரி ஆகஸ்ட் 7 அன்று நடைமுறைக்கு வந்தது. கூடுதல் வரி 21 நாட்களில் நடைமுறைக்கு வரும். மேலும் அமெரிக்க துறைமுகங்களுக்கு வரும் அனைத்து இந்தியப் பொருட்களுக்கும் இது பொருந்தும். ஆனால், ஏற்கனவே போக்குவரத்தில் உள்ள பொருட்கள் மற்றும் சில விலக்கு பெற்ற வகைகளுக்கு விதிவிலக்குகள் உண்டு.
டிரம்ப் மோடி பதிலடி
புது டெல்லியில் நடைபெற்ற எம்.எஸ். சுவாமிநாதன் நூற்றாண்டு சர்வதேச மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி இதற்கு பதிலடி கொடுத்துப் பேசினார். பொருளாதார அழுத்தத்திற்கு இந்தியா பணியாது என்று அவர் குறிப்பிட்டார். "எங்களுக்கு, எங்கள் விவசாயிகளின் நலனே முதன்மையானது. விவசாயிகள், மீனவர்கள் மற்றும் பால் உற்பத்தியாளர்களின் நலனில் இந்தியா ஒருபோதும் சமரசம் செய்துகொள்ளாது. இதற்கு நாம் பெரிய விலை கொடுக்க நேரிடும் என்று எனக்குத் தெரியும், அதற்கு நான் தயாராக இருக்கிறேன். இந்தியா தயாராக உள்ளது," என்று பிரதமர் மோடி கூறினார்.
இப்படிப்பட்ட நிலையில்தான் இந்தியப் பொருட்களின் இறக்குமதி வரிகளை அமெரிக்க நிர்வாகம் இரு மடங்காக உயர்த்தியதை அடுத்து, கட்டண தகராறு தீர்க்கப்படும் வரை இந்தியாவுடன் வர்த்தக பேச்சுவார்த்தைகள் எதுவும் நடத்தப்படாது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications