சீனாவுக்கு அடிமேல் அடி.. வரி விதிப்பு விவகாரத்தில் டிரம்ப் அறிவித்த புதிய அதிரடி.. முற்றும் மோதல்
வாஷிங்டன்: உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளாக விளங்கும் அமெரிக்காவும் சீனாவும் வரி விதிப்பு விவகாரத்தில் பயங்கரமாக மோதி வரும் நிலையில், சீனாவின் பல பொருட்களுக்கு புதிய வரியை டிரம்ப் விதித்துள்ளார். இந்த வரி விதிப்பானது 145 சதவீதமாக உயர்ந்து இருக்கிறது. எனினும், காப்பர், பாராமெடிக்கல் உள்ளிட்ட பொருட்களுக்கு இந்த 145 சதவீத வரி அறிவிக்கப்படவில்லை.
அமெரிக்க அதிபராக பதவியேற்றதில் இருந்தே அதிரடிகளுக்கும் பரபரப்புக்கும் பஞ்சமின்றி டொனால்டு டிரம்ப் செயல்பட்டு வருகிறார். குறிப்பாக அமெரிக்காவிற்கு வரிவிதிப்பு விவகாரத்தில் அநீதி இழைக்கப்படுவதாக தொடர்ந்து குற்றம் சாட்டி வந்த டிரம்ப், அதிகாரத்திற்கு வந்ததும், வரி விதிப்பு கொள்கையை கடுமையாக்க திட்டமிட்டார். இதன்படி, இந்தியா , சீனா உள்ளிட்ட நாடுகள் அமெரிக்க இறக்குமதி பொருட்களுக்கு அதிக வரி விதிப்பதாகவும், இதை குறைக்காவிட்டால் பரஸ்பர வரி விதிக்கப்படும் என்று கூறினார்.

90 நாட்கள் நிறுத்தி வைப்பு
இதன்படி, கடந்த 2 ஆம் தேதி முதல் பரஸ்பர வரியை டிரம்ப் விதித்துள்ளார். இந்தியா , சீனா உள்பட 75 நாடுகள் மீது டிரம்ப் கூடுதல் வரி விதிப்பை அறிவித்தார். இந்தியா மீது 26 சதவீதமும் சீனா மீது 34 சதவீதம் வரிவிதிக்கப்பட்டது. தான் அறிவித்த வரி விதிப்புக்கு பதிலடி கொடுத்தால் கூடுதலாக வரி விதிப்பு செய்வேன் எனவும் எச்சரித்தார். ஆனால், சீனா அமெரிக்காவுக்கு பதிலடியாக வரி விதித்தது.
இதனால் கோபம் அடைந்த டிரம்ப், சீனாவின் இறக்குமதி பொருட்களுக்கு கூடுதலாக 50 சதவீதம் வரி விதித்தார். இதனால், சீனாவின் இறக்குமதி பொருட்களுக்கு ஏற்கனவே இருந்த 54 சதவீதத்துடன் சேர்த்து 104 சதவீதமாக உயர்ந்தது. இதற்கிடையே, திடீர் திருப்பமாக சீனாவை தவிர இதர நாடுகள் மீதான வரி விதிப்பை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக டிரம்ப் அறிவித்தார். பல நாடுகள் அமெரிக்காவை அணுகி பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாக தெரிவித்துள்ளன.
இந்த நாடுகள் அமெரிக்க வரி விதிப்புக்கு பதிலடி கொடுக்காததால், வரி விதிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக கூறியிருந்தார். எனினும், 10 சதவீதம் குறைக்கபட்ட பரஸ்பர வரி அமலில் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார். டிரம்பின் இந்த அறிவிப்பால் பங்குச்சந்தைகள் இன்று ஏற்றம் கண்டன..
சீன பொருட்களுக்கு 145% வரி
இது ஒருபக்கம் இருக்க சீனாவின் சில பொருட்களுக்கு வரி விதிப்பு கடுமையாக உயர்த்தப்பட்டது. இதன் மூலம் சீனாவின் பல பொருட்களுக்கு 145 சதவீதம் வரி விதிக்கப்பட்டு இருக்கிறது. சீனாவின் பல பொருட்களுக்கு 145 சதவீதம் வரி விதிக்கப்பட்டு இருப்பதை வெள்ளை மாளிகையும் உறுதி செய்துள்ளது. காப்பர், பாராமெடிக்கல், செமி கண்டக்டர்ஸ், எரிசக்தி பொருட்களுக்கு இந்த வரி விதிப்பு அமலாகாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பொருட்களுக்கு தனியாக வரி விதிக்கப்படும் எனவும் வெள்ளை மாளிகை வட்டாரங்கள் கூறுகின்றன. ஏற்கனவே அமெரிக்க பொருட்களுக்கு 84 சதவீதம் வரியை சீனா விதித்துள்ள நிலையில் தற்போது அமெரிக்காவின் இந்த வரிக்கு சீனா என்ன மாதிரியான பதிலடி கொடுக்கப்போகிறது என்பது வரும் நாட்களில் தெரியும்.












Click it and Unblock the Notifications