போட்டியிலிருந்தே விலகுங்கள் பிடன்! சொந்த கட்சியினரே விட்டு விளாசல்! அதிபர் தேர்தலில் ட்ரம்ப் சிக்ஸர்
நியூயார்க்: அமெரிக்க அதிபர் தேர்தலின் ஒரு கட்டமாக அதிபர் பிடன், முன்னாள் அதிபர் ட்ரம்ப் இடையே இன்று விவாதம் நடந்தது.
உலகம் முழுக்க நடக்கும் அதிபர் தேர்தல்கள், பிரதமர் தேர்தல்களில் அதிக சுவாரசியமான தேர்தல் என்றால் அது அமெரிக்க அதிபர் தேர்தல்தான். இரண்டு கட்சிகளான குடியரசு கட்சி, ஜனநாயக கட்சி, இது போக அவ்வப்போது ஏதாவது மூன்றாவது கட்சி போட்டிக்கு வரும். இந்த பிரதான இரண்டு கட்சிகளில் உள்ள பல்வேறு தலைவர்கள் முதலில் தங்கள் கட்சிக்குள் போட்டி போடுவார்கள்.

உதாரணமாக குடியரசு கட்சியை வைத்துக்கொள்வோம். இதில் பலர் அதிபர் வேட்பாளர் ஆக முயன்றால்.. அவர்களுக்கு உள்ளே முதலில் பிரைமரி தேர்தல்கள் கட்சிக்கு உள்ளேயே நடக்கும். அந்த பிரைமரி தேர்தலில் நிற்கும் நபர்களுக்கு இடையே விவாதங்கள், யார் அதிக அளவு பணத்தை நிதி உதவியாக பெறுகிறார்கள், யாருக்கு மக்கள் மதிப்பு உள்ளது என்றெல்லாம் கணிக்கப்படும். அதை வைத்து ஒருவர் அந்த கட்சியில் இருந்து தேர்வு செய்யப்படுவார்.
அதேபோல் ஜனநாயக கட்சியிலும் ஒருவர் வேட்பாளர் ஆவார். இப்போது குடியரசு கட்சியில் டிரம்ப் அதிபர் வேட்பாளர். ஜனநாயக கட்சியில் அதிபர் பிடன் வேட்பாளர்.
தேர்தல் எப்படி நடக்கும்: அமெரிக்காவில் மொத்தம் 538 எலக்டர்ஸ் உள்ளனர். இதில் 270 வாக்குகளை அதிபர் வேட்பாளர் பெற வேண்டும். அமெரிக்காவில் ஒவ்வொரு மாகாணத்திற்கும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் எலக்டர்ஸ் இருப்பார்கள். அந்த மாகாணத்தில் இருக்கும் செனட் மற்றும் பிரதிநிதிகள் எண்ணிக்கையை பொறுத்தே எலக்டர்ஸ் எண்ணிக்கை தீர்மானிக்கப்படும். உதாரணமாக தற்போது கலிபோர்னியாவில் 55 எலக்டர்ஸ் உள்ளனர். மொத்தமாக எலக்டர்ஸ் யாருக்கு வாக்களிக்கிறார்களோ அவர்கள்தான் பெரும்பாலும் இதுவரை வெற்றிபெற்றுள்ளனர்.
இந்த எலக்டர்ஸ் அளிக்கும் வாக்குகள்தான் எலக்ட்ரல் ஓட்டு என்று அறிவிக்கப்படும். மொத்தமா 538 எலக்ட்ரல் வாக்குகளில் 270 யாருக்கு கிடைக்கிறதோ அவர்தான் வெற்றிபெறுவார். மக்கள் அளிக்கும் வாக்குகளுக்கும் எலக்ட்ரல் வாக்குகளுக்கும் என்ன வித்தியாசம் என்று கேட்கலாம். பொதுவாக ஒரு மாகாணத்தில் மக்கள் அளிக்கும் வாக்குகளை பொறுத்தே எலக்ட்ரல் வாக்குகளும் பெரும்பாலும் அளிக்கப்படும்.
உதாரணமாக டெக்ஸாஸ் மாகாணத்தில் 51% வாக்குகளை மக்கள் யாருக்கு அளிக்கிறார்களோ..அவர்களே பெரும்பாலும் வெற்றிபெறுவார்கள். அங்கு இருக்கும் 38 எலக்ட்ரல் வாக்குகளும் அந்த வேட்பளாருக்கே வழங்கப்படும். ஆனால் சில சமயம் குறைவான மக்கள் வாக்குகளை பெற்ற வேட்பாளர் கூட எலக்ட்ரல் வாக்குகள் மூலம் வெற்றிபெற வாய்ப்புள்ளது.
அதாவது ஒரு வேட்பாளருக்கு மக்கள் அதிக ஆதரவு அளித்து இருந்தாலும் கூட, கூடுதல் எலக்ட்ரல் வாக்குகள் மூலம் வேறு வேட்பாளர் வெற்றிபெற வாய்ப்புள்ளது. கடந்த 5 தேர்தலில் 2ல் வெற்றிபெற்ற அதிபர்கள் இப்படி குறைந்த மக்கள் வாக்குகளை பெற்று, அதிக எலக்ட்ரல் வாக்குகள் மூலம் வெற்றிபெற்றவர்கள். 2016ல் டிரம்பிற்கு ஹிலாரியை விட 3 மில்லியன் மக்கள் வாக்கு குறைவாக இருந்தது.. ஆனாலும் எலக்ட்ரல் வாக்கு அதிகமாக இருந்ததால் டிரம்ப் வெற்றிபெற்றார்.
விவாதம்: இதற்கு முன்பு அதிபர் தேர்தலில் விவாதங்கள், மக்கள் கருத்து கணிப்புகள் எல்லாம் நடக்கும். அமெரிக்க அதிபர் தேர்தலின் ஒரு கட்டமாக அதிபர் பிடன், முன்னாள் அதிபர் ட்ரம்ப் இடையே இன்று விவாதம் நடந்தது.
இதில் பிடன் மிக மோசமாக சொதப்பி உள்ளார். அவர் சொதப்பியதை பார்த்து அவரின் சொந்த ஜனநாயக கட்சியினரே அவரை போட்டியில் இருந்து விலக சொல்லி உள்ளனர். ஜோ பிடன் செய்ய வேண்டியதெல்லாம், அவரது ஸ்டேட் ஆஃப் யூனியன் உரையை முறையாக நிகழ்த்துவதுதான். பெரிதாக வாதம் எல்லாம் செய்திருக்க வேண்டியது இல்லை.
மாறாக, அவர் தனது பேச்சு முழுக்க தடுமாறினார். திக்கி திணறினார். மேலும், தேர்தலுக்கு ஐந்து மாதங்களுக்கும் குறைவான நேரத்தில், அவர் மேடையிலேயே பொம்மை போல நின்றது, பதறியது, பேச்சுக்கு இடையே இடையே அப்படியே அசையாமல் நின்றது என்று அதிர்ச்சி அளித்தார். பேச்சை விடுங்கள்.. அவருக்கு சுயநினைவு இருக்கிறதா என்ற கேள்வியை கூட இன்று நடந்த விவாதம் ஏற்படுத்தி உள்ளது.
மில்லியன் என்று சொல்ல வேண்டிய இடத்தில் பில்லியன், சாதாரண ஆங்கில வார்த்தைகளில் கூட தவறு, பல விஷயங்களில் அடிப்படையை கூட சொல்ல முடியாமல் திணறல் என்று பிடன் அதிர்ச்சி அளித்துள்ளார். இதனால் அவருக்கு நிதி கொடுத்தவர்களே போட்டியில் இருந்து விலகுங்கள் என்று பிடனிடம் சொல்ல தொடங்கி உள்ளார்களாம்.
முன்னாள் மேரிலாந்து கவர்னர் மார்ட்டின் ஓ'மல்லியின் பிடன் கட்சிதான். ஆனால் அவரே பிடனை விலக சொல்லி உள்ளார். 2016 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் பிடன் பிரச்சாரத்திற்கு இணைத் தலைவராக இருந்த நியூ ஹாம்ப்ஷயரைச் சேர்ந்த வழக்கறிஞரும் ஜனநாயக ஆர்வலருமான ஜே சுர்டுகோவ்ஸ்கி, "பிடனை ட்ரம்ப் வறுத்து எடுத்துவிட்டார்- அவர் விலக வேண்டும்" என்று விமர்சனம் வைத்துள்ளார்.
இவரை தவிர நிகழ்வின் கட்சியின் பலர் இதே விமர்சனங்களை வைத்துள்ளனர். பிடனின் பேச்சின் முதல் நிமிடங்களைப் பார்த்த ஜனநாயகக் கட்சியினர் பெரும் குழப்பத்தையும் கவலையையும் வெளிப்படுத்தி உள்ளனர். இதுவரை முதல்கட்ட விவாதத்தில் பிடன் படுதோல்வி அடைந்துள்ளார். ட்ரம்ப் வெற்றிபெற்றுள்ளார்.












Click it and Unblock the Notifications