வெள்ளை மாளிகையை விட்டு வெளியேற மறுப்போர்.. வெளியேற்றப்படுவர்.. டிரம்பிற்கு பிடன் தரப்பு எச்சரிக்கை
நியூயார்க்: வெள்ளை மாளிகையை ஆக்கிரமிக்கும் நபர்கள் கண்டிப்பாக வெளியேற்றப்படுவார்கள் என்று ஜோ பிடனின் பிரச்சார குழு டொனால்ட் டிரம்பிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் இன்று இரவுக்குள் முழுமையாக வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பென்சில்வேனியா, ஜார்ஜியா மாகாணங்களில் ஜனநாயக கட்சி வேட்பாளர் பிடன் முன்னிலையில் இருப்பதால், அவரின் வெற்றி உறுதியாகி உள்ளது.
இதுவரை வெளியாகி உள்ள முடிவுகளின்படி 264 எலக்ட்ரல் வாக்குகளுடன் பிடன் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார். குடியரசு கட்சி வேட்பாளர் அதிபர் டிரம்ப் 214 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார்.

தோல்வி
ஆனால் அதிபர் தேர்தலில் டிரம்ப் தோல்வியை ஏற்றுக்கொள்வாரா என்று கேள்வி எழுந்துள்ளது. டிரம்ப் தோல்வியை ஏற்றுக்கொள்ள வாய்ப்பு இல்லை, கண்டிப்பாக சட்ட போராட்டம் தொடங்கி பல்வேறு பிரச்சனையை எழுப்ப உள்ளார் என்று தகவல்கள் வருகிறது. அதிபர் தேர்தல் முடிவுகள் முறைகேடானது என்பதை நிரூபிக்க முடிந்த வரை டிரம்ப் முயற்சி செய்வார் என்றும் கூறப்படுகிறது .

வெள்ளை மாளிகை
அதோடு வெள்ளை மாளிகையில் இருந்து டிரம்ப் வெளியேற மறுக்கவும் வாய்ப்புள்ளது. நான் தோல்வி அடையவில்லை. அதனால் வெள்ளை மாளிகையை விட்டு நான் செல்ல மாட்டேன். சட்ட போராட்டம் முடியும் வரை நான் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேற மாட்டேன் என்று டிரம்ப் கூறுவதற்கு வாய்ப்பு உள்ளது. இதனால் வரும் நாட்களில் அமெரிக்க அரசியலில் பெரிய அளவில் பிரச்சனைகள் ஏற்படலாம்.

எச்சரிக்கை
இந்த நிலையில் வெள்ளை மாளிகையில் இருந்து டிரம்ப் வெளியேற மறுத்தால் அவர் வெளியேற்றப்படுவார் என்று பிடனின் தரப்பு மறைமுகமாக எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக பிடனின் பிரச்சார குழு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், அமெரிக்க அதிபர் தேர்தலில் மக்கள் உறுதியான தீர்ப்பை வழங்கி உள்ளனர். பிடன்தான் அதிபராக வேண்டும் என்பதை மக்கள் உறுதியாக தெரிவித்துள்ளனர்.

வெளியேற்றம்
வெள்ளை மாளிகையை ஆக்கிரமிக்கும் நபர்கள் கண்டிப்பாக வெளியேற்றப்படுவார்கள். ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்றும் சக்தி அமெரிக்க அரசுக்கு உள்ளது, என்று பிடன் தரப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. டிரம்ப் ஒருவேளை வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேற மறுத்தால் அவர் வெளியேற்றப்படுவார் என்பதை சுட்டிக்காட்டி பிடன் தரப்பு இப்படி அறிக்கை வெளியிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications