எங்கள் முக்கிய பங்காளி இந்தியாதான்.. அமெரிக்கா சொன்ன குடியரசு தின வாழ்த்து!
நியூயார்க்: 75வது குடியரசு தினம் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அமெரிக்கா தனது வாழ்த்துக்களை இந்தியாவுக்கு பகிர்ந்திருக்கிறது. தங்களது நாட்டின் முக்கிய பங்காளி என்றும் இந்தியாவை குறிப்பிட்டிருக்கிறது.
நாடு முழுவதும் குடியரசு தின கொண்டாட்டங்கள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. டெல்லியில் நடைபெறும் விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பங்கேற்று தேசிய கொடியை ஏற்றி வைக்கிறார். இந்நிலையில், இந்தியாவுக்கு அமெரிக்கா குடியரசு தின வாழ்த்துகளை தெரிவித்திருக்கிறது. அமெரிக்க வெளியுறவுத்துறை முதன்மை துணை செய்தித் தொடர்பாளர் வேதாந்த் படேல் இது குறித்து செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது,

"இந்தியாவுக்கு குடியரசு தினவிழா வாழ்த்துகள். இந்தியா, அமெரிக்காவின் முக்கிய பங்காளியாக இருக்கிறது. பல்வேறு விஷயங்களில் இந்தியா-அமெரிக்கா ஒன்றிணைந்து பயணத்து வருகிறது. இது இனி வரும் காலங்களில் மேலும் நெருக்கமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம். கடந்த ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவுக்கு வந்திருந்தபோதும் இது சுட்டிக்காட்டப்பட்டது" என்று கூறியுள்ளார்.
அதேபோல, இந்தியாவுக்கான ரஷ்ய தூதரும் குடியரசு தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். ரஷ்ய தூதர் டெனிஸ் அலிபோவ் இது குறித்து கூறுகையில், "குடியரசு தின கொண்டாட்டத்திற்கு இந்தியாவுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். இந்திய நண்பர்கள், செழிப்பும், நல்வாழ்வும் கொண்ட அமிர்த்கால வாழ்க்கைக்கு வாழ்த்துகள். இந்தியா-ரஷ்யா நட்புறவு மேலும் வளரட்டும்" என்று x சோஷியல் மீடியா தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இன்று டெல்லியில் சுமார் 90 நிமிடங்கள் நடை பெறும் குடியரசு தின அணிவகுப்பில் முதல் முறையாக முப்படைகளில் உள்ள பெண் படைப் பிரிவினர் பங்கேற்கின்றனர். ராணுவத் தளவாடப் பிரிவில் முதல்முறையாக பணியமர்த்தப்பட்ட 10 பெண் அதிகாரிகளில் தீப்தி ராணா, பிரியங்கா செவ்டா ஆகியோர் பினாகா ராக்கெட் அமைப்பு மற்றும் குண்டுகளைக் கண்டறியும் ரேடார் அமைப்புடன் பங்கேற்கின்றனர்.
வழக்கமாக இடம்பெறும் ராணுவப் பிரிவு பேண்ட் வாத்தியங்களுக்குப் பதிலாக 100-க்கும் மேற்பட்ட பெண் இசைக் கலைஞர்கள் நாதஸ்வரம், நகாடா போன்ற இந்திய இசை வாத்தியங்களை இசைக்க உள்ளனர். இந்திய விமானப் படையைச் சேர்ந்த 15 பெண் விமானிகள் விமான சாகசங்களை நிகழ்த்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications