கையில் உள்ள டார்ச் லைட் வெளிச்சம் 24 மணி நேரம் ஓடினால் எவ்வளவு தூரம் போகும்? வாயேஜர்-1 படைத்த வரலாறு
நியூயார்க்: மனித குலத்தின் மிகப்பெரிய விண்வெளிச் சாதனையாக பல விஷயங்கள் சொல்லப்படும்.. உதாரணமாக பென்சிலின் தொடங்கி பல்பு வரை பல சிறிய பெரிய விஷயங்கள் உள்ளன.. அந்த லிஸ்டில் தற்போது வாயேஜர் இணைந்துள்ளது.
அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் அனுப்பிய வாயேஜர்-1 விண்கலம், பூமியிலிருந்து 1 ஒளி-நாள் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க தூரத்தைத் தாண்டி புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. இதன் மூலம் பூமியிலிருந்து மனிதனால் உருவாக்கப்பட்டு விண்ணுக்கு அனுப்பப்பட்ட ஒரு பொருள், இதுவரை யாரும் நினைத்துக்கூடப் பார்க்காத தூரத்தை எட்டி புதிய சாதனை படைத்துள்ளது.

டார்ச் லைட் உதாரணம் - ஒளி-நாள் என்றால் என்ன?
பொதுவாக நாம் பூமியில் ஒரு ஊரில் இருந்து இன்னொரு ஊருக்கு உள்ள தூரத்தை கிலோமீட்டரில் அளவிடுகிறோம். ஆனால், விண்வெளியில் இருக்கும் நட்சத்திரங்கள் மற்றும் விண்கலங்களின் தூரத்தை கிலோமீட்டரில் சொன்னால், எண்கள் நீண்டுகொண்டே போகும். அதைப் படிப்பதும் புரிந்துகொள்வதும் கடினம். அதனால்தான் விஞ்ஞானிகள் இந்தப் பிரபஞ்சத்திலேயே மிக வேகமாகப் பயணிக்கும் ஒளியின் வேகத்தை அளவுகோலாகப் பயன்படுத்துகிறார்கள்.
இப்போது உங்கள் கையில் ஒரு சக்திவாய்ந்த டார்ச் லைட் இருப்பதாகக் கற்பனை செய்து கொள்ளுங்கள். இரவு நேரத்தில் அந்த டார்ச் லைட்டை வானத்தை நோக்கி அடித்து, பட்டனை அழுத்துகிறீர்கள். அதிலிருந்து புறப்படும் வெளிச்சம் நீங்கள் அதை ஆப் செய்ததும் நின்றுவிடாது. நீங்கள் அங்கிருந்து சென்றுவிட்டாலும் நீங்கள் அடித்த அந்த டார்ச் ஒளி அதே திசையில் வானை நோக்கி சென்று கொண்டுதான் இருக்கும். அது ஒரு நொடிக்கு சுமார் 3 லட்சம் கிலோமீட்டர் என்ற அசுர வேகத்தில் விண்வெளியை நோக்கிப் பாயும்.
நீங்கள் டார்ச் லைட்டை ஆன் செய்த 1.3 நொடியில், அந்த வெளிச்சம் நிலாவைச் சென்றடைந்துவிடும். அதே வெளிச்சம் தொடர்ந்து பயணித்தால், சுமார் 8 நிமிடம் 20 நொடிகளில் சூரியனைத் தாண்டிச் சென்றுவிடும்.
இப்போது, அந்த டார்ச் லைட் வெளிச்சம் எந்தத் தடையுமின்றி தொடர்ந்து 24 மணி நேரம் விண்வெளியில் நேர்க்கோட்டில் பயணித்தால் எவ்வளவு தூரம் போயிருக்குமோ, அந்தத் தூரத்திற்குப் பெயர்தான் 1 ஒளி-நாள்.
கிலோமீட்டரில் சொல்ல வேண்டுமென்றால், இது சுமார் 2,590 கோடி கிலோமீட்டர் தூரமாகும். சரியாக 49 ஆண்டுகள், 2 மாதங்கள் மற்றும் 11 நாட்கள் இடைவிடாமல் பயணித்து, இந்த 2,590 கோடி கிலோமீட்டர் தூரத்தை வாயேஜர்-1 விண்கலம் நேற்று எட்டியுள்ளது. மனிதனால் உருவாக்கப்பட்ட எந்தவொரு பொருளும் பூமியிலிருந்து இவ்வளவு தூரத்திற்குச் சென்றதே இல்லை.
அப்படியானால் 1 ஒளி-ஆண்டு என்றால் என்ன?
உங்கள் டார்ச் லைட்டிலிருந்து புறப்பட்ட வெளிச்சம், ஒரு நாள் மட்டுமல்லாமல், தொடர்ந்து 365 நாட்களும் நிற்காமல் ஓடிக்கொண்டே இருந்தால் எவ்வளவு தூரம் செல்லுமோ, அதுதான் 1 ஒளி-ஆண்டு.
தற்போது வாயேஜர்-1 விண்கலம் மணிக்கு சுமார் 61,000 கிலோமீட்டர் வேகத்தில் சீறிப் பாய்ந்து கொண்டிருக்கிறது. நமது பூமியில் இருக்கும் அதிவேக போர் விமானங்களை விட இது பல மடங்கு அதிக வேகம். ஆனாலும், இந்த வேகத்தில் வாயேஜர்-1 தொடர்ந்து பயணித்தால் கூட, 1 ஒளி-ஆண்டு என்ற தூரத்தை எட்டுவதற்கு இன்னும் 17,000 முதல் 18,000 ஆண்டுகள் ஆகும். விண்வெளி எவ்வளவு பிரம்மாண்டமானது என்பதற்கு இதுவே மிகச்சிறந்த சாட்சி.
இந்தப் பிரபஞ்சத்திலேயே மிக வேகமாகப் பயணிக்கக்கூடியது ஒளி மட்டுமே. ஒளியானது ஒரு நொடிக்குச் சரியாக 2,99,792 கிலோமீட்டர் வேகத்தில் சீறிப் பாய்கிறது. இதன் வேகத்தை எளிமையாகப் புரிந்துகொள்ள வேண்டுமென்றால், நீங்கள் கண் இமைக்கும் ஒரு நொடியில், ஒளியால் நம் பூமியைச் சுமார் 7.5 முறை சுற்றி வர முடியும்! அறிவியல் விதிகளின்படி, பிரபஞ்சத்தில் இந்த வேகத்தை விட வேகமாக வேறு எந்தப் பொருளும் பயணிக்க முடியாது.
வாயேஜர்-1 விண்கலத்திற்கு ஒரு மெசேஜ் அனுப்ப 2 நாட்கள் ஆகும்!
வாயேஜர்-1 விண்கலம் இப்போது 1 ஒளி-நாள் தூரத்திற்குச் சென்றுவிட்டதால், நாசா விஞ்ஞானிகள் அதனுடன் தொடர்பு கொள்வதில் ஒரு சுவாரசியமான மாற்றம் ஏற்பட்டுள்ளது. பூமியிலிருந்து நாசா விஞ்ஞானிகள் கம்ப்யூட்டர் மூலம் வாயேஜர்-1 விண்கலத்திற்கு ஒரு சிக்னல் அனுப்பினால், அது ஒளியின் வேகத்தில் பயணித்து விண்கலத்தைச் சென்றடைய சரியாக 24 மணி நேரம் ஆகும்.
அந்தக் மெசேஜை பெற்றுக்கொண்டு, "நான் நலமாக இருக்கிறேன், தகவல்களை அனுப்புகிறேன்" என்று வாயேஜர்-1 பதில் சிக்னல் அனுப்பினால், அது பூமிக்கு வந்து சேர மீண்டும் 24 மணி நேரம் ஆகும். ஆக, விண்கலத்திற்கு ஒரு சாதாரண 'ஹலோ' சொல்லி, அதனிடமிருந்து பதில் பெறுவதற்கு மொத்தம் 48 மணி நேரம் (2 நாட்கள்) காத்திருக்க வேண்டும். அதாவது நீங்கள் ஒன்சைட் லவ்வராக இருந்தால் எப்படி பதில் மெசேஜுக்கு காத்திருப்பீர்களோ அப்படி.
ஆனால் உங்களுக்கு ஒரு கேள்வி வரலாம்.. நம்மிடம்தான் ஒளியின் வேகத்தில் செல்லும் எதுவும் இல்லையே அப்படி இருக்க.. எப்படி ஒரே நாளில் வாயேஜருக்கு மெசேஜ் அனுப்ப முடியும் என்று..
வாயேஜர்-1 விண்கலத்துடன் நாசா தொடர்பு கொள்ளப் பயன்படுத்துவது சாதாரண ஒலி அலைகள் அல்ல.. அவை ரேடியோ அலைகள் ஆகும். விண்வெளியின் வெற்றிடத்தில் டார்ச் லைட் வெளிச்சமும், ரேடியோ சிக்னல்களும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவைதான் என்பதால், இரண்டும் ஒரே வேகத்தில்தான் செல்லும். அதாவது அதாவது நொடிக்கு சுமார் 3 லட்சம் கிலோமீட்டர் என்ற ஒளியின் வேகத்தில்தான் பயணிக்கின்றன. இதனால் பூமியிலிருந்து அனுப்பப்படும் கட்டளை விண்கலத்தைச் சென்றடைய சரியாக 24 மணி நேரம் ஆகும். இருப்பினும், சிக்னல் பயணிக்கும் அந்த 24 மணி நேரத்தில் வாயேஜர்-1 விண்கலம் தொடர்ந்து முன்னோக்கி நகர்ந்து கொண்டே இருப்பதால் சில நொடிகள் கூடுதல் தாமதமும், பூமியில் உள்ள பெரிய ஆன்டெனாக்கள் அந்த மெல்லிய சிக்னலைப் பிடித்து ஆய்வு செய்வதற்குச் சில நிமிடங்களும் கூடுதலாக ஆகலாம்.
ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட் நகரில் உள்ள நாசாவின் பிரம்மாண்ட டீப் ஸ்பேஸ் நெட்வொர்க் ஆன்டெனாக்கள் மூலமே இந்த சிக்னல்கள் இன்றும் பெறப்படுகின்றன.
1977-ல் தொடங்கிய வரலாற்றுப் பயணம்
வாயேஜர்-1 விண்கலம் கடந்த 1977-ம் ஆண்டு செப்டம்பர் 5-ம் தேதி விண்ணில் ஏவப்பட்டது. வியாழன் மற்றும் சனி ஆகிய கோள்களை ஆய்வு செய்வதற்காகவே இது அனுப்பப்பட்டது. 1979-ல் வியாழன் கோளையும், 1980-ல் சனி கோளையும் நெருங்கிச் சென்று, இதுவரை உலகம் பார்த்திராத துல்லியமான புகைப்படங்களை எடுத்து அனுப்பியது.
அதன் பிறகு தனது பயணத்தை நிறுத்தாமல் விண்வெளியின் ஆழத்திற்குள் சென்ற வாயேஜர்-1, 1990-ம் ஆண்டு பூமியைத் திரும்பிப் பார்த்து ஒரு வரலாற்றுப் புகைப்படத்தை எடுத்தது. 600 கோடி கிலோமீட்டர் தூரத்திலிருந்து பார்க்கும்போது, நமது பூமி ஒரு சிறிய நீல நிறப் புள்ளியாக மட்டுமே தெரிந்தது. தொடர்ந்து பயணித்த வாயேஜர்-1, கடந்த 2012-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சூரிய குடும்பத்தின் எல்லையைத் தாண்டி, நட்சத்திரங்களுக்கு இடையே இருக்கும் வெற்றிடமான இன்டர்ஸ்டெல்லார் ஸ்பேஸ் பகுதிக்குள் நுழைந்த முதல் விண்கலம் என்ற பெருமையைப் பெற்றது.
இன்றைய காலத்து ஸ்மார்ட்போன்களில் இருக்கும் மெமரியை விட மிகக் குறைந்த திறன் கொண்ட, 1970-களில் உருவாக்கப்பட்ட பழைய கம்ப்யூட்டர் சிப்களே வாயேஜர்-1 விண்கலத்தில் உள்ளன. சூரிய ஒளி துளியும் இல்லாத இருண்ட விண்வெளியில் பயணிப்பதால், இதில் சோலார் பேனல்கள் வேலை செய்யாது. மாறாக, புளூட்டோனியம் எனப்படும் அணுசக்தி பேட்டரி மூலமே இது இயங்கி வருகிறது. பேட்டரி சக்தி குறைந்து கொண்டே வருவதால், இந்த விண்கலத்தில் உள்ள பல கருவிகளை நாசா படிப்படியாக அணைத்துவிட்டது. இருப்பினும், தற்போதுள்ள இரண்டு முக்கிய கருவிகள் மூலம் விண்வெளியின் காந்தப்புலம் மற்றும் பிளாஸ்மா அலைகள் குறித்த தகவல்களை அது தொடர்ந்து பூமிக்கு அனுப்பிக்கொண்டே இருக்கிறது.
வாயேஜர்-2 எங்கே இருக்கிறது?
வாயேஜர்-1 விண்கலத்துடன் சேர்த்து 1977-ம் ஆண்டு வாயேஜர்-2 என்ற இரட்டை விண்கலமும் அனுப்பப்பட்டது. ஆனால், அது யுரேனஸ் மற்றும் நெப்டியூன் கோள்களை ஆய்வு செய்வதற்காக வேறு பாதையில் சென்றதால், வாயேஜர்-1 விண்கலத்தை விட சற்று மெதுவாகப் பயணிக்கிறது. தற்போது பூமியிலிருந்து சுமார் 2,160 கோடி கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் வாயேஜர்-2, இந்த 1 ஒளி-நாள் மைல்கல்லை எட்டுவதற்கு இன்னும் 9 ஆண்டுகள் ஆகும்.. அதாவது 2035-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில்தான் வாயேஜர்-2 இந்தச் சாதனையைப் படைக்கும் என்று நாசா கணித்துள்ளது.


Click it and Unblock the Notifications
